ஜல்லிக்கட்டு காளை கோயில்ஜல்லிக்கட்டுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் இந்தக் காலத்திலும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கு மவுசு குறையவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் காளையின் கொம்புகளில் கட்டப்படும்  பரிசுகளை எடுக்கும் வீரர்களுக்கு இளைஞர்களிடம் கிடைக்கும் மரியாதையே தனிதான். இவர்களுக்கே இப்படி என்றால், யாராலும் அடக்கமுடியாதபடி ஜல்லிக்கட்டுகளில் நின்று விளையாடும் காளை களுக்குக் கிடைக்கும் மரியாதை? அது கடவுளுக்கு நிகரானது!


கிராமங்களின் கௌரவமாகக் கருதப்படும் கோயில் காளைகள் இறந்தால் அவற்றை கடவுளின் மறு உருவமாகக் கருதுவதும், ஜல்லிக்கட்டில் தங்கள் கௌரவத்தை நிலைநிறுத்தும் காளைகளுக்கு சமாதி  அமைத்து அதன் மேல் காளை வடிவ சிலை அமைத்து கடவுளாகவே வழி படுவதும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் வழக்கமாக இன்றும் உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த செவலூர் கிராமத்தைச் சேர்ந்த மணி கவுண்டர், தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைக்கு தனது வீட்டருகே சமாதி அமைத்து, அதனைக் கோயிலாகப் ப £வித்து வருகிறார். வருடந்தோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில் அங்கு பூஜை நடக்கும். சுற்றுவட்டார கிராமங்களில் காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டுக்கு செல்லும்முன்பு இந்தக் காளை சமாதியில்  வழிபாடு நடத்துகிறார்கள்.

‘‘25 வருஷத்துக்கு முன்னால திண்டுக்கல் பக்கம் நத்தம் பகுதியிலிருந்து இந்தக் காளையை வாங்கி வந்து, ‘ராமு’ன்னு பேர் வச்சு வளர்த்துக்கிட்டு வந்தேன். எந்த ஜல்லிக்கட்டுலயும் இதை யாரும்  அடக்கியது இல்லை. செவலூர் காளைன்னா தெரியாதவங்க கிடையாது. வயசான காலத்துலதான் கொஞ்சம் தடுமாறுச்சு. எங்களுக்கு கௌரவத்தை சம்பாதிச்சுக் கொடுத்த அது எங்களுக்கு தெய்வம்த ன்! எங்க பகுதியில கோயில் திருவிழா, வீட்டு விசேஷம்னு எல்லாத்தையும், காளைக்கு வேஷ்டி கட்டி மாலை போட்டு வழிபாடு செஞ்ச பிறகு தான் ஆரம்பிப்போம்.

எல்லா காளைகளுக்கும் சிலை  வைக்கறதில்லை. ஜல்லிக்கட்டு களத்தில் நின்னு ஜெயிக்கிற காளைகளுக்குத்தான் இப்படி ஒரு மரியாதை’’ என்கிறார் மணி. இதேபோல விராலிமலை அருகே உள்ள சூரியூர் எழுவம்பட்டியில் சின் னையா என்பவர், தான் வளர்த்த காளைக்காக வீட்டின் அருகே சிலை அமைத்து, ஆண்டுதோறும் திருவிழா எடுக்கிறார்.

இதுபோலவே கோயில் காளைகளுக்கும் சிலைகள் வைப்பதுண்டு. கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு ஊர் சார்பில் ஒரு காளை வாங்கி வளர்க்கப்படும். இந்தக் காளைக்கு தனிநபர்கள் யாரும் செ £ந்தம் கொண்டாட முடியாது. அந்தக் கிராமத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் இந்தக் கோவில் காளைகள் யாருடைய நிலத்தில் வேண்டுமானாலும் சுதந்திரமாக சுற்றித் திரியும். மேய்ச்சலிலும்  ஈடுபடும். நன்கு வளர்ந்த பயிரை இது மேய்ந்தால் கூட யாரும் கோபப்பட மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டுகளில் கோயில் காளைதான் வாடிவாசலை விட்டு முதலில் வெளியே வரும். கோயில் திருவிழாக் களின்போது ஒவ்வொரு வீட்டின் சார்பிலும் வேஷ்டி, மாலை அணிவித்து குடும்பமே காளையின் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம். இன்னும் சிலர் காளைக்கு வேண்டிக்கொண்டு, வேண்டுதல்  நிறைவேறி னால் அதற்காக தங்கம் மற்றும் வெள்ளி செயின்களை காளையின் கொம்புகளில் அணிவிப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்துள்ள பெரியகுரும்பட்டி காயாம்பு அய்யனார், கருப்புசாமி கோயில் காளைக்கு, அந்தக் கோயிலின் முன்புறமே சமாதி அமைக்கப்பட்டு, ஆடி மாத திருவிழா வின் போது காளையின் சிலைக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடத்தப்படுகிறது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கோயிலின் நிர்வாகிகளில் ஒருவருமான சுப்பிரமணியன், ‘‘இலுப்பூர் சந் தையில் சுமார் 50 வருஷத்துக்கு முன்னால 190 ரூபாய்க்கு வாங்கி, கோயில் காளையா விடப்பட்டது இது. சாகும் வரை ஒரு ஜல்லிக்கட்டுல கூட யாரும் இந்தக் காளையை அடக்கியது இல்லை.  அதான் தெய்வமா வணங்கறோம்’’ என்றார்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் ராப்பூசல் முனியாண்டி கோயில், சாத்தம்பட்டி பாலாயி அம்மன் கோயில்களிலும் வளர்க்கப்பட்ட  காளைகளுக்கு தனியாக சமாதி அமைக்கப்பட்டு, அதன் மீது  காளை சிலை வைத்து வழிபடப்படுகிறது. வசதியானவர்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சமாதி அமைத்து, சிலை அமைக்கிறார்கள். வசதியில்லாதவர்கள், மாடுகள் இறந்தவுடன் அவற்றின்  கொம்புகள் வெளியில் தெரிவது போல் புதைத்து, அவற்றிற்கு மாலை அணிவித்து பூஜை நடத்துகிறார்கள்.

 நா.செந்தில்வேல்
படங்கள்: எஸ்.சுந்தர்