பாமரர்களை மயக்கிய இசைஅரசன்



‘சிங்கார வேலனே தேவா...’  ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில், சலங்கையை விட அதிகம் கொஞ்சிய அந்த நாதஸ்வரத்தை மறக்க முடியுமா? அன்றைய மெகா ஹிட்டான அந்தப் பாடலின் பின்னணியில் இருந்தது காருகுறிச்சி  அருணாசலம் என்கிற மகா கலைஞன். எளிய பாமர மக்களையும் சங்கீத ரசிகர்களாக்கிய பெருமை காருகுறிச்சியின் நாதத்துக்கு உண்டு.

இந்த மார்கழி இசைக் காலத்தில் காருகுறிச்சி அருணாசலத்தின் வாழ்வையும் மகத்துவத்தையும் ஞாபகப்படுத்துகிறது ஓர் ஆவணப்படம். ‘சின்னஞ்சிறு கிளியே’ என்கிற இந்த ஆவணப்படத்தை தயா ரித்து இயக்கியவர், கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் கௌரிசங்கர். பிரதமர் நேரு, முதல்வர் காமராஜர், நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், இயக்குநர்  ஏ.பி.நாகராஜன் எனப் பலரோடு அவர் இருந்த தருணங்களின் அரிய புகைப்படங்களும் ‘காரு குறிச்சி’யின் டைரிக் குறிப்புகளும் இந்த ஆவணப்படத்தை அலங்கரிக்கின்றன.

‘‘திருநெல்வேலியில இருந்து அம்பாசமுத்திரம் போற வழியில இருக்கிற சிறிய கிராமம் காரு குறிச்சி. அங்கே பிறந்த அருணாசலத்துக்கு, 12 வயசுலயே நாதஸ்வரத்துல அபரிமிதமான ஆற்றல். அவரோட மனைவி ராமலட்சுமிக்கு ஊர் கோவில்பட்டி பக்கம். இதனால பெரும்பாலும் அவர் கே £வில்பட்டியிலதான் வாழ்ந்தாரு. நானும் அவர் காலத்துல அவரது குட்டி ரசிகனா இருந்தவன். அப்படிப்பட்ட கலைஞனை எதிர்காலத் தலைமுறை மறக்கக்கூடாதுங்கிறதுக்காக இந்த ஆவணப்படத்தை  எடுத்தேன்’’ என்கிறார் கௌரிசங்கர். துணை ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு சினிமாவிலும் துணை இயக்குனராகப் பணியாற்றிய அனுபவமுண்டு.

‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே அவர் மேல ஈடுபாடு உண்டு. அவர் இறந்தப்ப எனக்கு அரை டிரவுசர் வயசு. அவர் வீடு இருந்த பங்களா தெரு முழுக்க பெரிய கூட்டம். கோவில்பட்டியில இரு ந்த ஸ்கூல், மில், கடைக்கெல்லாம் லீவு விட்டுட்டாங்க. ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்திச்சு. இறக்கும்போது அவருக்கு வயசு 43தான். அவருக்கு 5 மகள்கள், ஒரு மகன்’’ என வேதனையே £டு குறிப்பிட்டவர், காருகுறிச்சி வாழ்வில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களையும் அடுக்கினார்...

‘‘கோவில்பட்டி பக்கம் கடம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல ‘போளி’ விக்கிற ஐயர் ஒருத்தர்... ஏழைப்பட்டவர்தான். ஆனா, காருகுறிச்சி அருணாசலத்தோட நாதஸ்வர கச்சேரியை கடம்பூர்ல நடத்தியே  ஆகணும்னு மனைவியோட தங்கச் செயினை எல்லாம் அடகு வச்சி நடத்தினாரு. கச்சேரி முடிஞ்சதும் காருகுறிச்சிக்கு சன்மானமா கொஞ்சம் ரூபாயும் கூடவே போளியும் கொடுத்து ரயில் ஏத்தி விட் டிருக்காரு. அப்ப காருகுறிச்சியும் ஒரு பொட்டலத்தை அவருக்கு திருப்பிக் கொடுத்திருக்காரு. ஐயர் அதை வீட்டுக்குப் போய் பிரிச்சுப் பார்த்தா, அவர் மனைவி நகைங்க. காருகுறிச்சி கடம்பூர் வந்த துமே, எப்படி இவர் இவ்வளவு செலவு பண்றாருன்னு விசாரிச்சி அந்த நகையை மீட்டிருக்காரு. அவ்வளவு மனிதாபிமானம்.

ஒரு தடவை அவரு ஜனாதிபதி மாளிகையில நாதஸ்வரம் வாசிக்கப் போனப்ப, ஜனாதிபதி ராதாகிருஷ்ணனே வந்து காரைத் திறந்து அழைச்சிட்டுப் போயிருக்காரு. ‘நீங்க இப்படி செய்யலா மா?’ன்னு  காருகுறிச்சி கேட்டதுக்கு, ‘ஒரு காருகுறிச்சி அருணாசலம், ஜனாதிபதி ஆக முடியும். ஆனா, ஜனாதிபதியா இருக்கிற நான் எப்பவும் காருகுறிச்சியா ஆகமுடியாது!’ன்னு சொல்லியிருக்காரு ராதாகிருஷ் ணன். இவர் மேல எல்லாருக்கும் அவ்வளவு பிரியம்.

நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் இவருக்கும் ரொம்ப நட்பு. சென்னை போனா என்.எஸ்.கே வீட்டுல தான் தங்குவாரு. அப்பதான் காருகுறிச்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு. உடனே  என்.எஸ்.கேமதுரம் தம்பதி நினைவா தன் குழந்தைக்கு ‘மதுரவாணி’ன்னு பெயர் வச்சிருக்காரு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காருகுறிச்சி குடும்பத்துல ஒருத்தராவே இருந்திருக்காரு. அடிக்கடி  வீட்டுக்கு வருவாராம். குழந்தைங்க எல்லாம் பெரியப்பான்னுதான் கூப்பிடுவாங்க. அவ்வளவு நெருக்கம்.

இவரை ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் ரொம்ப பிடிக்கும். அதனாலதான் அவருக்கு கோவில்பட்டியில தங்களோட செலவுல மணி மண்டபம் அமைச்சு, அதை அவங்களே வந்து திறந்து வ ச்சாங்க. இன்னைக்கும் பங்களா தெரு ரோடு போறதுக்கு முன்னாடி அரசு ஆஸ்பத்திரிக்கு எதிர்ல அவர் சிலை கம்பீரமா நிற்குது’’ என்கிறவர், ‘‘காருகுறிச்சி அதிக பக்தியா இருந்தது திருச்செந்தூர்  முருகன் மேலயும், இசை சக்கரவர்த்தியா இருந்த விளாத்தி குளம் நல்லப்ப சுவாமிகள் மேலயும்தான்’’ என்கிறார் நெகிழ்வாக.

‘‘காருகுறிச்சி இறந்த பிறகு வெளிவந்த ‘தில்லானா மோகனாம் பாள்’ திரைப்படம் அவரை அடிக்கடி ஞாபகப்படுத்துவதாக அவர் மகள்கள் சொன்னாங்க. அதில், சிவாஜி செட்டில் உள்ளவங்களைப் பே £லவேதான் இவரோட செட் ஆட்களும் இருப்பாங்களாம். ‘ஓர் இசை குருகுலம் அமைக்கப் போறேன். அதுக்கு இடம் வேணும்’னு கேட்டு திருநெல்வேலி கலெக்டர்கிட்ட பேசிட்டு இருந்திருக்காரு.  அவரும் ‘சரி’ன்னு சொல்லியிருக்காரு.

ஆனா, அன்னைக்கு ராத்திரியே காருகுறிச்சி இறந்துட்டாரு. இந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி வந்தா அவர் இறந்து 50 வருஷமாச்சு’’ என்கிறார் கௌரிசங்கர்  வருத்தம் பொங்க. ‘மறந்தவர்களுக்கு இது ஒரு ஞாபகம். அறியாதவர்களுக்கு ஒரு அறிமுகம்’ என்கிற பின்னுரையோடு முடியும் இந்த ஆவணப்படம் காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவலைகளை எழுப்பிச் செல்கி றது... அவரது நாதஸ்வர ஒலி போல!  

 பேராச்சி கண்ணன்
படங்கள்: எஸ்.பி.பாண்டியன்