நிலா கதை

நிலவை ரசிக்காத
தோழி ஒருத்தியை
நேற்று சந்தித்தேன்.
அவளிடமிருந்துதான்
அறிந்துகொண்டேன்.
நிலவை
ஆண்கள் விரும்புவதைப் போல்
பெண்கள்
அவ்வளவாக ரசிப்பதில்லை.
முதல் காரணம்
நிலவை பெண்ணாக உருவகப்படுத்துவதை
பெண்கள் விரும்புவதில்லை.
நிலவை வெறுக்கும் கதையை
தோழி சொன்னாள்.
அதன்
மூன்றாம் பிறைக்காலம்
மேகத்திற்குள் மறைந்த
அவள் முதல் காதலை
ஞாபகப்படுத்தித் தொலைக்கிறது.
அதன்
வளர்பிறைக்காலம்
அவள் பதின் வயதுகளின்
பெரும் கனவுகளையும்;
பௌர்ணமிக்காலம்
பொங்கி பிரவாகமெடுத்த
கனவின் வெளிச்சத்தையும்;
தேய்பிறைக்காலம்
துகள் துகளாய் உடைந்த
பிரிவின் வலிகளையும்;
அமாவாசைக் காலம்
ஆசைகளின் ஆற்றாமைகளையும்
ஞாபகப்படுத்துகிறது.
இறுதியாக தோழி கேட்டாள்
‘‘இப்போது சொல்
நிலவை நிலவாக
எந்தப் பெண்ணால் பார்க்க முடியும்?’’
நா.முத்துக்குமார்