நிழல்களோடு பேசுவோம்



‘இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு குளிர் கடுமையாக இருக்கிறது’ என்று எல்லோருமே சொல்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. கடும் பனி விழத் தொடங்கிய கடந்த மாதத்தில் ஒரு நாள்  இரவு, குழந்தைகளுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். அன்றிரவே காய்ச்சலில் படுத்து விட்டேன். பனி குழந்தைகளை ஒன்றும் செய்யவில்லை. முன்னிரவில் தொடங்கும் பனியின் நடனம் பின்னி ரவில் மூர்க்கம் அடைகிறது. அதிகாலையில் குளிரில் எலும்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. மூன்று போர்வைகள் போர்த்திக்கொண்டாலும் குளிர் எப்படியோ நுரையீரலுக்குள் புகுந்துகொண்டு விடுகிறது.  இப்படி ஒரு கவிதை எழுதினேன்.

குளிரில்
இறுக அணைத்துக்கொள்ள
வேண்டும் போலிருந்தது
குளிரை
இறுக அணைத்துக்கொண்டேன்
குளிரைப் போல தனிமையுணர்ச்சியை அதிகரிப்பது எதுவுமில்லை.

நாம் வெயில் நிலத்தின் மனிதர்கள். நமக்கு ஐரோப்பியர்களைப் போல கடும் குளிரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.  நமக்கு பழக்கமே இல்லாத ஒன்று அது. குளிரில் அப்படி ஒடுங்கிப் போகிறோம். இந்தக் குளிர்காலத்தில் எனது கிராமத்தில் நிறைய முதியவர்கள் இறந்து போகிறார்கள். நான் ஒவ்வொரு ஆண்டும்  குளிர்காலத்தில் தொடர்ந்து சாவுச் செய்திகளை கேட்ட வண்ணம் இருக்கிறேன். மரணத்தின் கைகள் குளிர்ந்தவை என்று கவிகள் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். உண்மையிலேயே அது குளிர்கால  மரணத்தைத்தான் குறிப்பிடுகிறதா?

எனக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கடுமையான மன அழுத்தம் தொடங்கும். ஏதோ ஒரு இரும்புக்கரம் நெஞ்சைப் பிசையும் உணர்வு. குளிரில் ஏன் என்று தெரியாமல் மனம் உடைந்து அழு துகொண்டிருப்பேன். பத்தாண்டுகளுக்கு முன்பு இதே குளிர்காலத்தில்தான் என் மனப்பிறழ்வு ஆரம்பித்தது. உளவியல் மருத்துவரிடம் போனேன். மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். தன் பக்க  விளைவுகளால் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தன. உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு வருடத்திற்குப் பின் மாத்திரைகளை நிறுத்திவிட்டேன். எனது மருத்துவருடனான உறவுகளைத் துண் டித்துக்கொண்டேன். கடுமையான வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டேன்.

இந்தியர்களுக்கு வேலை என்பது பிழைப்பிற்கான ஒன்று மட்டுமல்ல. அதுதான் அவர்களுக்கு உளவியல் சிகிச்சை. தங்களைப் பற்றிய அவலமான, அவமானகரமான விஷயங்களை எல்லாம்  உழைப்பின் மூலம்தான் அவர்கள் மறக்கிறார்கள். அதையும் மீறி அவை ஞாபகம் வரும்போது கண்மண் தெரியாமல் குடித்துக் குடித்தே சாகிறார்கள். இருந்தும் ஒரு விஷ வட்டம் போல ஒவ்வொரு  குளிர் காலத்திலும் ஏதோ ஒரு மர்ம நிழல் என் இதயத்தில் விழுகிறது.

குளிர்காலம் உண்மையில் சாவின் வாசனையால் நிரம்பியிருக்கிறது. ஒரு குளிர்காலத்தின் பிற்பகுதியில்தான் என் அம்மாவின் மரணத்தைச் சந்தித்தேன். நீல நிறம் எவ்வளவு பயங்கரமானது என்பது  என் அம்மாவின் முகத்தில் இருந்த நீலத்தைக் கண்டபோதுதான் எனக்குத் தெரிந்தது. நான் அந்த மரணத்தின் நீலக்கடலில் மூழ்கினேன். மூழ்கிக்கொண்டே இருந்தேன். பிறகு என்னால் ஒருபோதும் அதிலிருந்து மீளவே முடியவில்லை. நான் இப்படித்தான் முதன்முதலாகக் குளிர்காலத்தின் முதல் துயரத்தை அடை ந்தேன்.

பிறகு ஒரு குளிர்காலத்தில் என் பாட்டி இறந்து போனார். வீட்டிற்கு வெளியே எனக்கு ஒரு உலகத்தைக் காட்டிவர். பேரப் பிள்ளைகளுக்கு பறவைகளை வளர்ப்பதற்கு கற்றுக் கொடுத்தவர். பாத்ரூமில்  வழுக்கி விழுந்தவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சையின் வழியாக மரணத்தைக் கொண்டு வந்தோம்.

பிறகு ஒரு குளிர் மிகுந்த மாதத்தில்தான் எனது ஆசானும் நிழலுமாக இருந்த எழுத்தாளர் சுஜாதா நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். ஒரு மாத போராட்டத்திற்குப் பிறகு அவரைக் கொண்டுபோய்  பெசன்ட் நகர் மயானத்தில் ஒரு பிடி சாம்பலாக்கிக் கொண்டு வந்தோம். அந்த வருடம் வசந்தம் தொடங்கியபோது கைவிடப்பட்ட ஒருவனாக அப்படி ஏங்கி ஏங்கி அழுதேன்.
இதோ இன்னொரு குளிர் மிகுந்த ஆண்டு. சென்ற ஆண்டில் இதே மாதத்தில், இதே வாரத்தில்தான் என் தந்தையின் இறந்த உடலைத் தேடிப் போனேன். கண்ணீருடன் குளிர் காற்று முகத்தில்  அறைய அறைய காரில் நெடுந்தொலைவு சென்றோம். அப்பா கண்ணாடிப் பெட்டியில் பதுமையாகி எங்களுக்காக காத்திருந்தார். மரணம் எங்கள் மேல் இந்த உலகத்தின் அத்தனை பனியையும் கெ £ண்டுவந்து கொட்டியது.

இதோ இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக என் ஊரை நோக்கி, என் பூர்வீக வீட்டை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பயண  இரவு முழுக்க நான் குளிரோடு பேசிக்கொண்டே செல்வேன். குளிரில் உடைந்த நிலவு ஒன்று சிறு வெளிச்சமாய் என்னோடு வந்துகொண்டே இருக்கும்.

ஒரு தகப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்போல நெஞ்சில் கனப்பட்டது எதுவும் இல்லை. ஓராண்டு முடியும் வரை அந்த மரணம் அவ்வளவு புத்தம் புதிய ரணமாக இருந்துகொண்டே இரு க்கிறது. ஒரு மனிதன் இறந்து ஓராண்டு ஆகிறது என்று நமக்கு நாமே அறிவித்துக்கொள்வதன் வாயிலாக, நாம் அந்த மரணத்தை கொஞ்சம் பழையதாக்குகிறோம். அதை நினைவின் வேறொரு அ டுக்கிற்குள் தள்ளிவிட எண்ணுகிறோம். ‘ஒரு வருடம் ஆகிவிட்டதே... இனி குற்ற உணர்வின் சுமையைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியாதா’ என்று ஏங்கிப் போகிறோம்.

ஆனால் இறந்தவர்கள் ஒருபோதும் இமைக்காத கண்களால் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்தக் கண்கள் தூங்குவதே இல்லை. நாம் என்ன செய்தாலும் அவர்கள் உற்றுப் பார்த்து க்கொண்டே இருக்கிறார்கள். நாம் அவர்களின் கண்களில் இருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வருடம் ஆகிவிட்டால் அவர்கள் சற்று களைத்துப்போய் நம்மைப் பார்ப்பதை நிறுத்தி தூங் கிவிடுவார்கள் என்று நம்புகிறோம். அவர்களை சமாதானப்படுத்தத்தான் இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் இல்லையா?

இறந்துவிட்டவர்களுக்கு நாம் தவறவிட்ட கடமைகளையும் நியாயங்களையும் ஒருபோதும் செய்ய முடிவதில்லை இல்லையா? அவர்கள் கறாராக முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுகிறார்கள். நான் என்  காணிக்கைகளுடன் எவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தாலும் அவர்கள் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நான் எனது தகப்பனின் இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது எந்தக் கடனை தீர்ப்பதற்காக என் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்! அவர் மரணத்தின் திரையை விலக்கிக்கெ £ண்டு என்னை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை. இறந்தவர்கள் நம்மைப் புறக்கணிப்பதுபோல நமது எதிரிகள்கூட புறக்கணிக்க முடியாது. அவர்கள் ஒருபோதும் நம்மோடு சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்.

குளிர் என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான மரணத்தின் சில்லிட்ட தன்மை சேர்ந்து சேர்ந்துதான் இந்தக் குளிர் இவ்வளவு கடுமையானதாகிக் கொண்டே போகிறது என்று  எனக்குத் தோன்றுகிறது. நான் இந்த மரணத்தின் குளிரை எப்படியாவது கடந்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தக் குளிரிலி
ரு ந்து இந்த உலகத்தை எதன் வழியாகவாவது வெதுவெதுப்பாக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதற்காக நான் மூட்டுகிற நெருப்பு எல்லாமே சீக்கிரமே அணைந்துவிடுகிறது. நான் மீண் டும் மீண்டும் அந்த ஐஸ் சமவெளிக்கே திரும்பி வருகிறேன். இறந்தவர்களுடைய மௌனத்தால் அந்தச் சமவெளி நிரம்பிக்கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் மனம் கசந்த முணுமுணுப்புகளால் அந்த  சமவெளி எந்நேரமும் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் நீத்தார் நினைவு தினத்தில் இறந்தவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. அது மிகவும் அச்சமூட்டும் ஒன்று. நாங்கள் வேறு எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தோம். இறந்தவர்கள் கண்  இமைக்காமல் எங்களையே பார்த்தபடி அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்கள் அருகிலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

நாம் யாரையெல்லாம் கவனித்திருக்க வேண்டுமோ யாருக்கெல்லாம் நியாயம் செய்திருக்க வேண்டுமோ அவர்கள் இறந்துபோகும்வரை அல்லது நம்முடைய வாழ்க்கையிலிருந்து அவர்கள் இல்லாமல்  போகும்வரை நாம் ஏன் அவ்வளவு முட்டாளாக இருந்தோம் என நினைத்து நினை த்து ஏங்கிப் போகிறேன். நாம் யாரைப் புறக்கணித்தோமோ அவர்கள் தங்கள் மரணத்தின் மூலம், பிரிவின் மூலம் பல மடங்கு அந்தப் புறக்கணிப்பை திருப்பிக் கொடுக்கிறார்கள்.எல்லாமே ஒரு கணத்தில் ஒரு நாளில் மாறிப்போய்விடும் என நாம் புரிந்துகொள்ளும்போது மேலும் ஒரு பனிக்காலம்
வந்துவிடும்.

(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன்

தமிழக மீனவர்கள் நிம்மதியாக கடலுக்கு மீன் பிடிக்கப் போவது எப்போது?
 கி.மூர்த்தி, மாயனூர்.
தன் நாட்டு குடிமக்களைக் காக்கும் ஒரு சுயமரியாதையுள்ள அரசாங்கம் இந்தியாவில் உருவாகும்போது; அல்லது இலங்கையில் தமிழீழம் மலரும்போது.
ஒரு காலத்தில் கோலோச்சிய டூரிங் தியேட்டர்கள் இப்போது காணாமல் போய்விட்டனவே?
 ச.பா.ராஜா, குரும்பகரம்.
இப்போது எல்லா வீடுகளுமே டூரிங் தியேட்டர்களாகிவிட்டன. 
காதலி மனைவியாவது எப்போது? மனைவி காதலியாவது எப்போது? 
 கி.ரவிக்குமார், நெய்வேலி.
நீங்கள் பொய் சொல்லும்போது காதலி மனைவியாகிறாள். நீங்கள் பொய் சொல்வதை நிறுத்தும்போது மனைவி காதலியாகிறாள்.
மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றி?
 அ.யாழினி பர்வதம், சென்னை78.
நாம் வாழ்வதைவிட ஒரு மேலான வாழ்வு நமக்கு சாத்தியம் என்பதை இடைவிடாமல் கற்பித்தவர்.
2014ம் ஆண்டு எப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?
 அ.ராஜா ரஹ்மான், கம்பம்.
2013ம் ஆண்டைப் போல!
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர்,  சென்னை 600004’ என்ற முகவரி க்கு அனுப்புங்கள்.மீனீணீவீறீ: மீபீவீtஷீக்ஷீ@ளீuஸீரீuனீணீனீ.நீஷீ.வீஸீ)

நெஞ்சில்  நின்ற வரிகள்

காயல் ஷேக் முகமது ஒரு இஸ்லாமிய இன்னிசைப் பாடகர். நாகூர் ஹனீபாவிற்குப் பிறகு இஸ்லாமியப் பாடல்களில் அவர் பெரும் புகழ் பெற்றார். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அவர் பாடிய ஒரு ப £டல் மறக்கவே முடியாதது. அந்தப் பாடல் சமூகம் ஏற்காத ஒரு உறவைப் பற்றியது. பொருந்தாத ஒரு திருமணத்தை பற்றியது. வயது முதிர்ந்த ஒருவர் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய் துகொள்ளும்போது, அந்த உறவை சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை இந்தப் பாடல் ஒரு பொதுப் பார்வையிலிருந்து சித்தரிக்கிறது. எம்.எஸ்வியின் இசையில் காயல் ஷேக் முகமதுவின் கம்பீரமான  குரல் இந்தச் சமூக அச்சத்தையும் அந்தச் சமூகம் விடுக்கும் எச்சரிக்கையையும் வெகு அழுத்தமாகப் பதிவு செய்கிறது...
கைகொட்டிச் சிரிப்பார்கள், ஊரார் கைகொட்டிச் சிரிப்பார்கள்
விளையாட்டுக் கல்யாணமே...
தரும் விபரீத உறவாகுமே...
தலை மாறி கால் மாறுமே
அங்கு சொந்தங்கள் தடுமாறுமே...
என்ற வரிகளினூடே ஒரு வரி இந்த மொத்த அவலத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது
விளக்கேற்றி எடுத்து பகல்
நேரம் வைத்தால்
விளைகின்ற ஒளி தோன்றுமா?

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

நரேன் ராஜகோபால் மிக ஆழமான சமூக அரசியல் விமர்சனங்களை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வருபவர். எழுத்தில் கூரிய அங்கதத்தையும் வெளிப்படுத்துபவர். அவர் சென்னைக்கு வெளியே  இருந்த தினங்களின் உணர்வை வெளிப்படுத்தும் அழகிய பதிவு இது... ஒரு மதராஸியாய் கடல் எனக்குப் புதிதில்லை. ஆனால் ஒரு தீவில் வாழ்வது என்பது வேறொரு அனுபவம். சரியாய் 4 மணிக்கு மழை பெய்கிற, எந்த டென்ஷனுமில்லாத, பரபரப்பில்லாத மக்களேடு இருப்பதும் சுவாரசியமான அனுபவமே. எதையுமே செய்யாமல் வெறுமனே கடலைப் பார்த்துக் கொண்டே என்னுடைய முழுநாளை கழிக்க முடியும்.

வேலையைத் தாண்டி, ஆறு மணிக்கு ஸ்குவாஷ் ஆடுவதும், நீச்சலடிப்பதும், வார இறுதியில் மீன் பிடிக்கப் போவதுமாக வாழ்வின் priorityகள் இருக்கின்ற ஊரில், வேலை மட்டுமே குறி க்கோளாக இருக்கும் என்னை மாதிரியான ஆட்கள் தாக்குப் பிடிப்பது கஷ்டம். சொர்க்கமே என்றாலும், கூவ மணத்தோடும், டிராஃபிக் தொல்லைகளோடும், புகை மூட்டத்தோடும் இருக்கிற சென்னையை நினைவிலிருந்து அகற்றவே முடியவில்லை. இன்னும் ஒரு வாரம்... https://www.facebook.com/narain.rajagopalan