விஷாலும் லட்சுமி மேனனும் லவ் பண்ண ஆரம்பிச்சாச்சு!



அசத்தல் புன்னகையில், அற்புதம் செய்கிற லைட்டிங்கில், அழகு ததும்புகிற லட்சுமி மேனன்... பின்னியெடுக்கிற காஸ்ட்யூமில் விஷால்... கம்ப்யூட்டரில் விரிகிற படங்களை ஸ்லைடு ஷோ காட்டிப்  பேசுகிறார் டைரக்டர் திரு. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் பிரத்யேகப் படங்கள் அவை. ‘‘திரும்ப ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சாச்சுங்க’’ என்றபடி வந்து
உட்காருகிறார் திரு.

‘‘ ‘சமர்’ படத்துக்குக் கிடைச்ச வரவேற்பு, நல்லா இருந்தது. அதற்குப் பிறகு, இன்னும் வேற மாதிரி ஸ்கிரிப்ட்டைத் தேடினேன். ‘நான் சிகப்பு மனிதன்’ ஒரு மனிதனோட ஆசைகள்தான். எல்லோரு க்கும் அந்த மாதிரி ஆசைகள் நிச்சயம் இருக்கும். ‘ஆசைகளைத் துற’ன்னு சொல்லிட்டுப் போறது ரொம்ப ஈஸி. அதை நடைமுறைப்படுத்தறது அனேகமா முடியாத காரியம். நம்ம ஹீரோ விஷால்...  நிறைவேற்ற விரும்புகிற அவர் ஆசைகள்... அதற்காக அவர் கொடுக்கிற விலை...

அதனோட பயணம்னு கதை போகும். ஆக்ஷன் த்ரில்லர். நிச்சயம் யதார்த்த லைனில் மட்டுமே படம் இருக்கும்.  ‘பாண்டிய நாடு’ படத்துக்குப் பின்னாடி, விஷால் படம் பண்ற ஸ்டைலே மாறிப் போச்சு. ஹீரோவை மட்டுமே ஃபோகஸ் பண்ணினா போதும்ங்கிற நிலைமை இப்ப தமிழ் சினிமாவுல இல்ல. இதை  எல்லா ஹீரோவும் முன்மாதிரியா எடுத்துக்கிட்டா இன்னும் புதுப்புது நல்ல கதைகள் வெளியில வரும்.

இந்தப் படத்தை சினிமான்னு தெரியாம, வாழ்க்கையில இயல்பா நாம் பார்த்து வந்த கதை ம £திரி செய்திருக்கோம். ஆனால், ஒண்ணே ஒண்ணு... இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஹீரோவும் இப்படி ஒரு ரோல் செய்ததில்லை. அது மட்டும் நிச்சயம். ஒரு போலீஸ் கேரக்டர்னா எப்படி  நடிக்கணும்னு பார்க்க எக்கச்சக்க படங்கள் இருக்கு. ரௌடி, வக்கீல், டாக்டர்னு எந்த கேரக்டரா இருந்தாலும் பார்த்துச் செய்ய  தமிழ்லயே முன் முயற்சிகள் இருக்கு. ஆனா, இந்தக் கேரக்டர் அப்ப டியில்ல. விஷாலுக்கே இதை எப்படிச் செய்யறதுன்னு பார்க்கவும் படிக்கவும் ஒரு மாடல் இல்ல.’’
‘‘அதென்ன ரஜினி டைட்டிலை எடுத்துக்கிட்டீங்க?’’

‘‘இந்த ஸ்கிரிப்ட்டுக்கான வேலை ஆரம்பிக்கும்போதே எனக்குத் தோன்றின தலைப்பு இதுதான். சும்மா தலைப்பை எழுதி வச்சதும் அடுத்தடுத்து ஸ்கிரிப்ட் வளர்ந்துகிட்டே இருந்தது. கடைசியில் எல்ல £ம் ஒரு வழிக்கு வந்தபோது, அதை விஷாலுக்கு கதையாச் சொன்னேன். கேட்டதும், ‘நானே யுடிவியோட தயாரிக்கிறேன்’னு சொல்லி ஆரம்பித்தார். ‘இந்தப் படத்திற்கு இந்த டைட்டில்தான் சரியாக  இருக்கும்’னு சொன்னேன். உடனே புரொடியூசர் பூர்ணசந்திர ராவுக்கு சொல்லி, அந்த டைட்டிலையே வாங்கிக் கொடுத்தார். எனக்கு உண்மையிலேயே சந்தோஷம்!’’

‘‘விஷால்கிட்டேயே ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ இப்போ இந்தப் படம்னு மூணு படங்கள். அவ்வளவு நண்பரா விஷால்?’’ ‘‘நண்பருக்காக கஷ்டத்துக்கு பணம், காசு கொடுப்பாங்க. படம் எங்கேயும் கொடுக்க மாட்டாங்க. இதுக்குக் காரணம் புரிதல். அவருக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தால் தவிர, அடுத்தடுத்த வேலைகளில்  இறங்கவே மாட்டார். இதுவரை யாரும் செய்யாத கேரக்டர் என்றதும் இன்னமும் அவருக்கு மகிழ்ச்சி. ‘என்னடா... இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறான்’னு கமென்ட் அடிக்கிற உங்க மைண்ட் வாய்ஸ்  எனக்குப் புரியுது. ஆனா, நிச்சயம் படம் பார்த்ததும் என் வார்த்தைகள்ல எதுவும் பொய்யில்லை என்பது புரியும். ‘பாண்டிய நாடு’ படத்துக்குப் பிறகு விஷால் நிறைய புத்துணர்வு அடைஞ்சிருக்கார்.

 இனி செல்ல வேண்டிய பாதையிலும் தெளிவா இருக்கார். ‘சமர்’ அவருக்கு நல்ல வேல்யூ கொடுத்த படம். ட்ரீட்மென்ட் வகையிலும் அதற்கு நல்ல மரியாதை இருந்தது. எனக்கான நம்பிக்கையின்  அளவு கச்சிதமா இருக்கு!’’ ‘‘இந்த தடவையும் லட்சுமி மேனன்... விஷாலுக்கு ஜாலி தான்!’’ ‘‘சார்... இது ‘பாண்டிய நாடு’ படத்திற்கு முன்னாடியே ஒப்பந்தமான படம். அந்தப் படம் நல்ல வெற்றி பெற, இப்ப அந்த ஜோடிக்கு நல்ல மவுசு. ரெண்டு பேருக்கும் நல்ல ஸ்கிரீன் அட்டாச்மென்ட்  இருக்கு.

லட்சுமியோட அன்பையும், காதலையும் தவிர்க்க முடியாமல்தான் இந்தக் கதையே ஆரம்பிக்குது. ஆக, கதையில் லட்சுமிக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கு. அவங்களே விஷாலோட முத்தக்  காட்சிக்கு சத்தமே காட்டாம சம்மதிச்சாங்க. நாகரிகத்தின் எந்த எல்லையையும் மீறாமல், கதையின் அவசியத்திற்காக அருமையா ஏத்துக்கிட்டு நடிச்சாங்க. கதையில் ரொம்ப ஜீவனான இடம் அவங் களோடது!’’

‘‘ ‘நான் சிகப்பு மனிதன்’ ரிலீஸ் தேதியை முன்னாடியே சொல்லிட்டு ஆரம்பிச்சிருக்கீங்க..!’’ ‘‘ஆமா, யு டி.வி. தனஞ்செயன்தான் அந்த ஐடியாவைச் சொன்னார். நல்லா இருந்தது. ரிலீஸ் தேதி ரெடியானதும் எல்லாருக்குமே உற்சாகம். என்னோட இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் முதல்  தடவையாக இணைகிறார். எனக்கே அவர் கூட ஒர்க் பண்ண ஆசையிருந்தது. இனியாவுக்கு அருமையான ரோல். சுந்தர் ராமு ‘3’ படத்திற்குப் பின்னாடி இதில் ஒரு கேரக்டரில் ஆசையா நடிச்சார்.  ‘பில்ட் அப்’ வசனங்கள், அறிமுகப் பாட்டுன்னு இதில் வழக்கமான
அம்சங்கள் இல்லை. வித்தியாசமான கதை, அதில் சொல்ல வருகிற விஷயம், யதார்த்தம்... இதில்தாங்க இந்தப் படம் நிக்கணும். அதுதான் எங்க எல்லோருடைய விருப்பமும்!’’

 நா.கதிர்வேலன்