கானா பாடலில் மறைந்திருக்கும் வாழ்க்கை!



லுங்கி டான்ஸாகவும் டாஸ்மாக் குத்தாட்டமாகவும் மஞ்சள் சேலைப் பெண்ணின் கெட்ட ஆட்டமாகவுமே ‘கானா’வை நம் மனங்களில் செதுக்கியிருக்கிறது தமிழ் சினிமா. ஆனால், ‘‘கானா என்பது சென்னை நகர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த வாழ்க்கைத் தத்துவம்’’ என்கிறார் வை.ராமகிருஷ்ணன்.

கானா பாடல்கள் தொடர்பாக ராமகிருஷ்ணன் செய்த ஆய்வுகள், பிரசுரித்த கட்டுரைகள், தொகுத்த பாடல்கள் எக்கச்சக்கம். கானாவின் பூர்வீகத்தை இதுவரை யாரும் தொடாத அளவுக்கு தொட்டிருக்கும் ஆழமான அனுபவம் இவருடையது! ‘‘பெரம்பலூருக்குப் பக்கத்தில் மயிலப்பாடி கீரனூர் என்கிற கிராமம்தான் என் சொந்த ஊர். பிழைப்புக்காக எங்கள் குடும்பம் சென்னை வந்து புளியந்தோப்பு பகுதியில் குடி புகுந்தது. அப்பாவுக்கு கொத்தவால்சாவடியில் கூலி வேலை. சின்ன வயதில் அவரோடு போகும்போதெல்லாம், அங்கே கூலிகள் கானா பாடல் பாடக் கேட்டிருக்கிறேன்.

 பிறகு நந்தனம் கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் எம்.ஏ படித்தேன். அப்போது பேருந்து ஃபுட் போர்டு பயணத்தில் கானா பாடல்களைப் பாடிக்கொண்டு போவேன். ‘கானா’ ராம்கி என்று எனக்கு பெயர் கூட இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருந்த வீ.அரசுதான் என் பின்புலத்தைக் கேள்விப்பட்டு, ஆய்வு நோக்கில் கானா பாடல்கள் பக்கம் என் கவனத்தைத் திருப்பினார். அங்கே கானா பற்றி எம்.பில்., பிஹெச்.டி ஆய்வுகள் செய்தேன்.’’ என்கிற ராமகிருஷ்ணன், கானா பாடல்களின் அடிப்படைகளைப் பகிர்கிறார்...

‘‘கானாவின் அடிநாதம் நிலையாமை. பெரும்பாலும் இறப்பு வீடுகளில்தான் கானா பாடல்கள் பிறப்பெடுக்கின்றன. உடல் உழைப்பால் பிழைப்பு நடத்தும் ஏழை மக்களுக்கு, இறப்பு என்பது கிட்டத்தட்ட ‘விடுதலை’. எனவேதான் கொண்டாட்டத்தையும் தத்துவத்தையும் இறப்பு அவர்களுக்குள் விதைக்கிறது. ‘என்ன பணம் சேர்த்து என்ன..? எல்லாருக்கும் ஆறடி மண்தான்’ என்ற தத்துவம் ஏழை மக்களுக்கு ஆறுதல் தருகிறது. நாம் பணம் சேர்த்து வைக்காதது பெரிய தவறில்லை என்ற நிம்மதியையும் கொடுக்கிறது.

நிலையாமை பேசிய சித்தர் பாடல்களும், இஸ்லாமிய சூஃபி பாடல்களும் கானாவில் தொனிப்பதை கவனிக்க முடியும்’’ என்கிறவர், சூஃபி கவிஞரான குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்கள் கூட கானா உருவாகக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார். ‘‘18ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணங்குடி மஸ்தான் சாகிபு, ராமநாதபுரத்தை அடுத்த தொண்டியில் பிறந்தவர். வட சென்னைக்குக் குடிபெயர்ந்து புகழ்பெற்ற சூஃபி கவிஞராகத் திகழ்ந்தார். இவரை ‘தொண்டியார்’ என்று மக்கள் அழைத்ததால்தான், அந்த இடமே ‘தொண்டியார்பேட்டை’ என்றாகி, பின் ‘தண்டையார்பேட்டை’ ஆனது. இவர் பாடல்கள் கிட்டத்தட்ட சித்தர் பாடல்கள் போலவே நிலையாமைக் கொள்கையைப் பேசும். இந்துக்கள் பலரும் இவருக்கு சீடர்களாக இருந்திருக்கிறார்கள்.

அந்தச் சீடர்கள் வழிவந்த வட சென்னை மக்கள், சமீப காலம் வரை மஸ்தான் பாடல்களைப் பாடி வந்தார்கள். சென்னை மயிலாப்பூர் பக்கம் ரிக்ஷா ஓட்டிப் பிழைத்த வேணு என்பவர் அவர்களில் ஒருவர். குணங்குடியார் பாடல்களை கானா மெட்டில் பாடியவர் அவர். கடந்த 2000வது ஆண்டு அவரும் இறந்துவிட்டார். அதற்கு முன்பே அவரைப் பாட வைத்து சில பாடல்களை டிவிடியில்திவு
செய்தேன். குணங்குடி மஸ்தானின் சீடர் பரம்பரையே கானா பாடகர்களாக உருமாறியிருக்கலாம் என்று சந்தேகிக்க வலிமையான சான்று அது.

இதே குணங்குடியாரின் பாடல்களை மயிலை வேணுவுக்கு முன்பே வட சென்னையில் கே.கே.குப்புசாமி என்பவர் பாடி வந்திருக்கிறார். அவர் பாடிய பாடல்களை அவரது சீடர்கள் இன்றும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றையும் தொகுப்பாக கொண்டு வரும் திட்டம் இருக்கிறது’’ என்கிறவர், மஸ்தான் போலவே இன்னும் பல மனிதர்களின் வரலாற்றையும் கானா வழியே அகழ்ந்தெடுத்திருக்கிறார்...

‘‘மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்... இவரும் குணங்குடி மஸ்தான் போல நிலையாமையை சொல்லிப் பாடியவர். சிம்சன் என்ற பிரிட்டிஷ்காரரிடம் அவர் துபாஷாக இருந்தார் என்கிறார்கள். சித்து வேலையிலும் நிபுணராம். அவர் செய்த அற்புதங்களைப் பார்த்த சிம்சன், அவருக்கு கிண்டியில் பல ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நிலத்தில்தான் இன்று நாயனாரின் சமாதி இருக்கிறது. அவரின் சீடர்கள் அந்த சமாதியில் அமர்ந்து அவரின் பாடல்களைப் பாடுவது ரொம்ப காலம் வரைக்கும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அந்த சமாதியையும் அது தொடர்பான நபர்களையும் நாயனார் எழுதிய புத்தகப் பிரதியையும் தேடிக் கண்டுபிடிப்பதே கொலம்பஸ் இந்தியாவைக் கண்டடைந்த மாதிரி இருந்தது.

சில சமயம் கானா பாடல்களே கூட யாராவது ஒரு பெரிய மனிதரின் வரலாற்றை கதைப் பாடலாகப் பாடும். ‘ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடல் இதற்கு உதாரணம். சென்னை புதுக்கல்லூரிக்கு எதிரே இருந்த ஆல்தோட்டம் என்ற பகுதியில் பூபதி என்ற நபர் வாழ்ந்திருக்கிறார். தன் மனைவியின் கள்ளக் காதலைக் கேள்விப்பட்ட இவர், மனைவியையும் மாமியாரையும் கொன்றுவிட்டு சிறை சென்றிருக்கிறார். அந்த வழக்கு கூட பல வருடங்கள் நடந்திருக்கிறது.

இந்தக் கதைப் பாடலை இன்று முழுமையாகப் பாடக்கூடிய ஆட்கள் யாரும் இல்லை. பாடத் தெரிந்தவர்களும் ஒரு சில வரிகளைப் பாடிவிட்டு நிறுத்திக்கொள்கிறார்கள். ஆல்தோட்ட பூபதி என்ற பெயரும் ‘நட்சத்திர பங்களா... நிக்காதடி சிங்கிளா’ என்ற இந்தக் கதைப் பாடலின் முதல் அடியும் சினிமாவில் கூட இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பாடல் முழுவதையும் ஆல்தோட்ட பூபதியின் வழக்கு விவரங்களையும் சேகரிக்கும் முயற்சியில் இருக்கிறேன்!’’  உறுதியும் உவப்புமாக சொல்லி முடிக்கிறார் கானா ராம்கி. இப்படி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தேடினால் கானாவில் தமிழக வரலாற்றையே தேடிப் பிடித்து விடலாம் போல!

உடல் உழைப்பால் பிழைப்பு நடத்தும் ஏழை மக்களுக்கு, இறப்பு என்பது கிட்டத்தட்ட ‘விடுதலை’. எனவேதான் கொண்டாட்டத்தையும் தத்துவத்தையும் இறப்பு அவர்களுக்குள் விதைக்கிறது.

டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்