ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



வருண் தவான், அர்ஜுன் கபூர் என அடுத்தடுத்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினார் அலியா பட். தவிர, ஒரு டி.வி ஷோவில் ‘‘ரண்பீர் கபூரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’’ என பரபரப்பு ஸ்டேட்மென்ட் விட்டார். ஆனால், ‘‘இதில் எதுவுமே உண்மையில்லை. எனக்கு எந்தக் காதலும் இல்லை. கண்ணியமும் விசுவாசமும் கொண்ட ஒரு இளைஞனைத் தேடுகிறேன். அப்படி ஒருவன் கிடைக்கும்போது கல்யாணம் செய்து கொள்வேன்’’ என இப்போது சொல்கிறார் அலியா.

சூப்பர் மாடல் ஹெய்தி க்ளூம் ஒரு பிரமாண்ட கலெக்ஷன் வைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் செருப்புகளின் எண்ணிக்கை இரண்டாயிரம் ஜோடிகளைத் தாண்டுமாம்! இருபது ஆண்டுகளாக மாடலிங் செய்துவரும் ஹெய்தி, மாதா மாதம் புதிதாக செருப்பு வாங்குவார். எதையும் தூக்கிப் போடாமல் பத்திரமாகவும் வைத்திருக்கிறார். ‘‘இந்த விஷயத்தில் நான் ஒரு பதுக்கல் பேர்வழி’’ என்கிறார் அவர்.

நடிகையும் பாடகியுமான செலீனா கோமஸ், தன் அம்மாவையும் வளர்ப்புத் தந்தையையுமே தனது மேனேஜர்களாக நியமித்திருந்தார். சமீபத்தில் அவர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டார். செலீனாவின் வளர்ச்சிக்காக அவர்கள் எதையும் செய்யவில்லையாம். பாடகர் ஜஸ்டின் பீபரை காதலித்த செலீனா, இடையில் அவரைப் பிரிந்திருந்தார். மீண்டும் இருவரும் இணைந்ததும் இந்த டிஸ்மிஸ் நிகழ்ந்தது. ‘‘காதலன் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஆடுகிறாள்’’ என மகள் பற்றிப் புலம்புகிறார் அம்மா.

அனிமேஷன் பட கேரக்டர்களுக்கு பிரபல நட்சத்திரங்களை குரல் கொடுக்கச் செய்வது ஹாலிவுட்டில் பழக்கம். இவர்கள் குரலால் நடிப்பார்கள். இந்த வழக்கத்தை பாலிவுட்டுக்கும் கொண்டு வந்தாயிற்று. ‘ரியோ 2’ இந்தி பதிப்பில் சோனாக்ஷி சின்ஹா குரல் கொடுத்திருக்கிறார். ‘‘எனக்கு மிகவும் பிடித்த அனிமேஷன் படம் இது. இதில் என் குரல் வருவது பெருமை’’ என பூரிக்கிறார் சோனாக்ஷி.

 ரெமோ