பொய்



நகரின் மையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அந்த ஓட்டலில் இரவிலும் கூட்டம் அலை மோதியது.
அத்தனை நாற்காலிகளும் நிரம்பியிருக்க, மேலும் பலர் ஓரமாய் காத்துக் கொண்டிருந்தனர். மூன்றாவது டேபிளில் குடும்ப சகிதம் அமர்ந்திருந்த ஒருவர், ‘‘அடுத்து நாலு ஐஸ்கிரீம் கொண்டு வாங்க...’’ என்றார் சர்வர் கணேஷிடம். ஒரு விநாடி தயங்கிய கணேஷ், ‘‘ஸாரி சார்! ஐஸ்கிரீம் ஸ்டாக் இல்லை...’’ என்றதும் குழந்தைகள் முகம் சுருங்கியது. அவர்கள் கை கழுவ எழுந்தனர்.
அருகில் இருந்த சூப்பர்வைஸரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

‘‘கணேஷ், ஐஸ்கிரீம் இல்லைன்னு ஏன் அவங்ககிட்ட பொய் சொன்னே? ஐஸ்கிரீம் கூட வச்சுக்கலைன்னு நம்ம ஹோட்டலை அவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?’’‘‘ஸாரி சார்! கடந்த ஒரு மணி நேரமா, அவங்க பேசி சிரிச்சு, பிள்ளைகளோட விளையாடிக்கிட்டு நிதானமா சாப்பிட்டாங்க. இத்தனை பேர் சாப்பிட ரொம்ப நேரமா வெயிட் பண்றதைக் கூட கண்டுக்கல. ஐஸ்கிரீம் கொடுத்தா இன்னும் லேட் பண்ணுவாங்க. நம்ம ஓட்டலுக்கு வந்தா சாப்பிட ரொம்ப நேரம் காத்துக் கிடக்கணும்னு மத்த வாடிக்கையாளர்கள் தப்பா நினைச்சுடக் கூடாதில்லையா..? அதான் அப்படிச் சொன்னேன்!’’இப்போது அவனை சூப்பர்வைஸர் பார்த்த பார்வையில் பெருமிதமும் பாராட்டுதலும் இருந்தன.றீ

ஆர்.விஜயா ரவி