சொத்து



‘‘பத்து கோடி ரூபா சொத்து சுளையா உங்களுக்குக் கிடைக்கப் போகுதில்ல?

இந்தக் காசெல்லாம் பத்தாது’’  கூலிப்படைத் தலைவன் கறாராய் நின்றான். ‘‘சரி... மேல பத்து லட்ச ரூபாய் தர்றேன். இன்னைக்கே முடிச்சுடு’’  ராமசாமி ஒரு வழியாய் பேசி முடித்தார்.
நிஜத்தில் அண்ணன் வெங்கடசாமி யின் சொத்து மதிப்பு இருபது கோடி ரூபாயையும் தாண்டும். வாரிசு இல்லை, மனைவியும் இல்லை. அவ்வளவு சொத்தும் அனாமத்துதான். குடும்பச் சண்டையால் அவர் தன் இஷ்டத்துக்கு அதை யாருக்கும் எழுதி வைத்துவிடக் கூடாதே! எனவேதான், ராமசாமி கூலிப்படையை ஏவி விட்டார். ராத்திரியோடு ராத்திரியாக அண்ணனை மிரட்டி தன் பெயரில் சொத்துக்களை எழுதி வாங்க வேண்டியது. ஒரேயடியாக போட்டுத் தள்ள வேண்டியது. ப்ளான் பக்கா!

கூலிப்படை ஆட்கள், ஆயுதங்களோடு வெங்கடசாமியின் தோட்டம் பக்கமாய் வீடு புகுந்தபோது, இரவு பத்து மணி. வீட்டின் முன்பக்கத்தில் கூட்டம் கூடி இருந்தது. சற்று முன் மாரடைப்பால் மரணம் அடைந்த வெங்கடசாமியின் உடலைப் பார்க்க! ‘‘ம்ம்... நல்ல மனுஷன்... அவ்வளவு சொத்தையும் நேத்துதான் தம்பி ராமசாமிக்கே எழுதி வச்சிட்டுப் போய்ட்டாராம்ல!’’  ஒருவன் சொல்லிக் கொண்டே போக, காதில் வாங்கிய ராமசாமி வெட்கித் தலைகுனிந்தார்.

ஏ.எஸ்.நடராஜன்