சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

சதா என்னை நினை. நான் நடத்துகிறேன் என திடமாக நம்பு. எனக்கு நானாகவே செய்கிறேன் என்ற பாவத்தை வர விடாதே. நான் துணையாக இருப்பேன். நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நான் முன்பாகவே களைந்து விடுகிறேன். நான் உன்னுடனேயே வந்து கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்? உன் முன்னாலும் பின்னாலும் நான் நிழலைப் போல் இருக்கிறேன்.
 பாபா மொழி

பக்தர்களின் துன்பத்தைத் தன் மேல் சுமத்திக் கொள்வதால், பல விசித்திரமான அனுபவங்களை பாபா எதிர்கொள்ளும்படி நேர்ந்தது.
அதில் இப்படியொரு சம்பவமும் அடக்கம்...ஒரு திருடனை போலீஸார் பிடித்தார்கள். அவனிடம் திருடின நகைகள் இருந்தன. துளே என்னுமிடத்தில் இருக்கும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு விசாரணை வந்தது.‘‘நீ திருடினாயா?’’  மாஜிஸ்டிரேட் கேட்டார்.‘‘இல்லை!’’

‘‘அப்படியானால் உனக்கு நகை எப்படிக் கிடைத்தது?’’
‘‘அதை ஷீரடியில் இருக்கும் பாபா எனக்குக் கொடுத்தார்’’ என பாபா மீது வீண் பழியை சுமத்தினான் அந்தப் பொல்லாத திருடன்.
‘‘அப்படியானால் சாய்பாபாவை சாட்சிதாரராக இங்கு ஆஜர் செய்யுங்கள்’’ என மாஜிஸ்டிரேட் உத்தரவிட்டார்.

அதன்படி பாபாவிற்கு சம்மன் அனுப்பினார்கள். அது வந்து சேர்ந்ததும் கடுங்கோபம் கொண்ட பாபா, துனியின் நெருப்பு ஜுவாலையில் சம்மனைத் தூக்கிப் போட்டார். துளேயில் நடந்த வழக்கு விசாரணைக்கு அவர் போகவில்லை. இதனால் அவருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கோபர்காவிலுள்ள தலைமை கான்ஸ்டபிள் கண்பத் ராம்ஜி என்பவர் அந்த வாரன்டை பாபாவிடம் எடுத்துச்சென்று வாசித்துக் காண்பித்து, ‘‘தாங்கள் துளே கோர்ட்டிற்கு வந்து ஆஜராகணும். தாங்கள் என்னுடன் வரணும்’’ என்றார்.

பாபாவின் முகம் சிவந்தது, ‘‘எனக்கா வாரன்ட்? அடேய், பஞ்ச பூதங்கள் அட்டகாசம் செய்தபோது அவற்றைக் கைது செய்ய உங்கள் கோர்ட் தன் அதிகாரத்தைக் காண்பித்ததா? என்னை விலங்கிட்டு அழைத்துச் செல்ல உனக்குத் துணிவு இருக்கிறதா? அப்படியானால் கிட்டே வா, இந்த பக்கீரின் தேகத்தைத் தொடு பார்க்கலாம்! உன் வாரன்ட்டை துனி தீயில் கொளுத்திவிட்டுப் பேசாமல் வந்த வழியைப் பார்! நான் மேலே இருக்கும் அல்லாவின் ஆணைக்குத்தான் கட்டுப்படுவேன். உன் கோர்ட்டுக்கு அல்ல! கிளம்பிப் போ... மறுபடியும் இப்படிப்பட்ட வேலைக்காக, துணிச்சலுடன் இங்கு வராதே! இதைச் செய்துவிடலாம் என மனதால் கூட நினைக்காதே!’’

அந்தக் கான்ஸ்டபிள் கலங்கி விட்டான். பாபாவைத் தொட அவனுக்குத் துணிவு இல்லை. அவன் சற்று நேரம் வெளியில் போய் நின்றான். பாபாவின் அருகில் தாஸ்கணு நிற்பதைப் பார்த்தான். அவரும் போலீஸில் வேலை பார்த்ததால், அவருடைய உதவியை நாட நினைத்தான். இன்னொரு காவலாளியை விட்டு அவரைக் கூப்பிட்டு வரச்சொன்னான்.
‘‘கண்பத் ராம்ஜி, நீங்கள் அநாகரிகமாக நடந்து கொள்ள வேண்டாம். அகமத் நகரின் டெபுடி கலெக்டர் ஸ்ரீ நாநா சாகேப் சாந்தோர்கர் பாபாவின் பரம பக்தர். நீங்கள் அவருடைய உதவியை நாடுங்கள்’’ என தாஸ்கணு சொன்னார்.

‘‘சரி, நான் கிளம்புறேன்.’’
கான்ஸ்டபிள் கண்பத் ராம்ஜி அங்கிருந்து நாநா சாகேப்பிடம் போய், நடந்ததைச் சொன்னான். நாநா கூறினார்... ‘‘சாயிபாபா ஒரு அதிசய மனிதர். அவர் சாதாரணமானவர் அல்ல. அவருடைய பக்தர்கள் அவரைக் கண்கண்ட தெய்வமாக மதிக்கிறார்கள். அவருக்கு துளே வர விருப்பம் இல்லையென்றால் கட்டாயப்படுத்த வேண்டாம். மேற்கொண்டு சாதாரண பிரஜைகளுக்கு சட்டப்படி கோர்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் தொடர வேண்டாம். அவருடைய சாட்சியத்தை ஷீரடியிலேயே ஒரு கமிஷனரிடம் கொடுக்கலாம் என ஒரு புது மகஜரைத் தயாரித்து அதற்கு ஆதரவாக ஏராளமானவர்களிடம் கையெழுத்து வாங்கி, துளே கோர்ட்டில் சமர்ப்பியுங்கள்.’’

நாநாவின் ஆலோசனை சரியெனப்பட்டது. அதன்படியே புதிய மனுத்தாக்கல் செய்தார்கள். துளே கோர்ட் அதை ஏற்றது. ஷீரடிக்கு ஒரு கமிஷனரை அனுப்பி வைத்தது. நாநா ஜோஷி என்னும் முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட், சாட்சியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, ஷீரடிக்கு வந்தார்.இதில் விசேஷம் என்னவென்றால், அவர் வருவதற்கு முன்பே மசூதியினுள் ஒரு மேஜை, சில நாற்காலிகள் போட்டு, தற்காலிக கோர்ட்டை பாபா ஏற்படுத்தியிருந்தார்.கமிஷனர் நாநா ஜோஷி வந்து விசாரணையை ஆரம்பித்தார்.

‘‘உங்களுடைய பெயர் என்ன?’’
‘‘என்னை சாய்பாபா என்கிறார்கள்.’’
‘‘உங்களுடைய தந்தையின் பெயர்?’’
‘‘சாய்பாபா’’
‘‘உங்கள் குருவின் பெயர்?’’
‘‘வேங்கூசா’’

‘‘உங்களுடைய நெறி, மதம்?’’
‘‘கபீர்’’
‘‘ஜாதி அல்லது மதம்?’’  பாபாவைக் கூர்ந்து நோக்கிய ஜோஷி, அவருடைய அசாதாரணமான தேஜஸைக் கண்டு பிரமித்தார்.
‘‘எம்மதமும் சம்மதம்!’’

‘‘தயவுசெய்து தங்கள் வயதைச் சொல்லுங்கள்!’’
‘‘லட்சக்கணக்கான வருடங்கள்!’’

இதைக் கேட்டு நாநா ஜோஷி வெறுப்படைந்தார். அவர் பாபாவின் தகுதியை அறிந்தார். இருந்தாலும் ‘கமிஷனர்’ என்பதால், அவருடைய கடமையைச் செய்யலானார்.
‘‘தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை, சத்தியம் என்று சத்தியப் பிரமாணம் செய்வீர்களா?’’
‘‘பக்கீர் என்றும் பொய் பேசமாட்டான்.’’

‘‘எவன் உங்களைக் குற்றவாளி என்றானோ, அவன் நீங்கள்தான் நகையைக் கொடுத்தீர்கள் என்கிறான். அவனை நீங்கள் அறிவீர்களா?’’
‘‘ஆமாம். நான் அவனை மாத்திரமல்ல, ஒவ்வொருவனையும் அறிவேன்!’’

‘‘அந்தக் குற்றவாளி சொல்கிறான்... அவன் உங்கள் பக்தன், உங்களுடன் கூடவே இருப்பதாக. இது உண்மையா?’’
‘‘ஆமாம். நான் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன்.’’
‘‘நீங்கள் அவனுக்கு நகை கொடுத்தீர்களா?’’

‘‘ஆமாம்’’  பாபா மந்தகாசத்துடன் சொன்னார்...
‘‘நான்தான் கொடுத்தேன். ஒவ்வொரு வஸ்துவும் என்னுடையது தான்...’’
‘‘பாபா’’  நாநா ஜோஷி அவரின் சாமர்த்தியமான பதிலைக் கேட்டுக் கூறினார்... ‘‘அவன் மீது திருடியதற்கான குற்றம் இருக்கிறது. திருடிய நகையைத் தாங்கள்தான் கொடுத்தீர்கள் என்று அவன் சொல்கிறான்.’’

பாபா பேசாமல் இருந்தார். பிறகு வெடித்தெழுந்தார். ‘‘இதெல்லாம் என்ன கூத்து? இவற்றுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னை சாட்சியாக விசாரித்து, அந்தத் திருட்டு வழக்குக்கு ஜோடனை செய்து மாட்டிவிட எப்படித் துணிவு வந்தது? உங்களிடம் உளவுத்துறை இல்லையா? அதன் வழியாக நீங்கள் உண்மையைக் கண்டு அறிந்திருக்கலாமே.

இன்று அவன் என் பெயரைச் சொல்கிறான். நாளை உங்கள் பெயரைச் சொல்லலாம்? இது என்ன அயோக்கியத்தனம், அடாவடியான செயல்? ஒருவன் ஒரு பெயரைச் சொன்னவுடனே, அதில் உண்மை இருக்கிறதா இல்லையா எனத் தீர்க்கமாக விசாரிக்காமல், எப்படி அவன்மேல் கைது வாரன்ட் பிறப்பிக்கலாம்? இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம். என்னைப் போன்றவர்களையே இப்படி வறுத்தெடுத்தால், சாமானியர்கள் நிலைமை என்ன? எழுந்திருங்கள் இப்போது. போதும்... பக்கீரின் பொறுமையை சோதித்துப் பார்க்காதீர்கள்...’’

நாநா ஜோஷி வெலவெலத்து, நடுங்கியபடி எழுந்தார். என்ன எழுதுவது என்று புரியவில்லை.அப்பொழுது தாஸ்கணு சொன்னார்...‘‘கமிஷனர் ஐயா, ஷீரடி கிராமத்தின் டைரியை வரவழையுங்கள். காரணம், அந்த டைரியில் வெளியிலிருந்து எவன் எவன் உள்ளே வந்தான், எவ்வளவு நாட்கள் ஊரில் தங்கி இருந்தான் போன்ற விவரங்கள் இருக்கும். திருட்டு நடந்த சமயம் குற்றவாளி ஷீரடிக்கு வந்தானா, இல்லையா என்பதை அந்த டைரியிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.’’

‘‘ஆமாம்...’’
நாநா ஜோஷி டைரியை வரவழைத்தார். டைரியை ஆராய்ந்ததில், அந்தக் குற்றவாளி ஷீரடிக்கு வந்ததாக எந்தப் பதிவும் இல்லை. பாபாவும் ஷீரடியை விட்டு அச்சமயத்தில் வெளியில் எங்கும் போகவில்லை எனத் தெரிந்தது.

அதை உறுதிப்படுத்திக் கொண்ட ஜோஷி, ‘‘பாபா, திருட்டு நடந்த தினம் குற்றவாளி தங்களிடத்தில் வரவேயில்லை. மற்றும் தாங்கள் அவனுக்கு நகையேதும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது’’ என்றார் அன்பாக.
‘‘ஆமாம்... அப்படித்தான்!’’ என்றார் பாபா.
விசாரணை முடிந்தது.

நாநா ஜோஷி வியர்வையைத் துடைத்துக்கொண்டார். சாட்சிதாரரின் கைநாட்டோ, கையெழுத்தோ அவர் வாங்கவில்லை.
தன் பதிலை கோர்ட்டிற்கு அனுப்பினார். கோர்ட் அதை ஏற்றுக் கொண்டது. திருடன் மீது குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை கிடைத்தது.
சில தினங்களுக்கு இதைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நீல வானத்தில் வெண்மையான அன்னப்பறவைகள் செல்வது போல, மேகக்கூட்டங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஜிலுஜிலுவென்று வீசிய காற்று மனதைப் பரவசப்படுத்தியது.
பாபா உற்சாகத்துடன் எழுந்து, முற்றத்திற்கு வந்தார். அவர் அருகில் அநேக குழந்தைகள் கூடினார்கள்.
‘‘வாங்கடா, பாடலாம், ஆடலாம்...’’  பாபா சொன்னவுடன் குழந்தைகள் சந்தோஷத்தில் குதித்தார்கள்.
பாபா பாடலானார்...

‘‘அழகான ராமன்
அழகான ராமன்
வாருங்கள்... வாருங்கள்...’’
குழந்தைகளும் பின்பாட்டுப் பாடினார்கள். பாபாவின் கால்கள் தாளகதியில் குதித்தன. குழந்தைகள் உற்சாகமடைந்தார்கள். அவர்களும் சுற்றிச் சுற்றி ஆடினார்கள். சில பெண்களும் அதில் கலந்துகொண்டார்கள். ஆண்கள் இந்த வேடிக்கையை தூர நின்று பார்த்து ரசித்தார்கள்.

மறுபடி மறுபடி, அதற்கேற்ற தாளகதியில் ஆடினார்கள். எல்லோரும் சுற்றினார்கள். விறுவிறுவென்று கால்கள் நர்த்தனமிட்டன. பாட்டும் துரிதகதியில் சென்றது. பாபா பெரிய பாடகர். நடனமாடுபவர். வாத்தியங்களை வாசிப்பவர். அவருடைய தொனி எல்லோரையும் ஆகர்ஷித்தது.
எல்லோரும் ஆடிப்பாடி முடித்தவுடன் களைத்துப்போய் உட்கார்ந்தார்கள்.

‘‘தாத்யா குழந்தைகளுக்கு ஏதாவது, சாப்பிடக் கொடு’’
என்றார் பாபா.
‘‘கொடுக்கிறேன்...’’

தாத்யா ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை வைத்ததும், குழந்தைகள் அதை எடுத்துக்கொண்டார்கள்.
அப்பொழுது ‘‘பூ... பூ...’’ என்று பூதாகாரமான ஒலி வந்தது. நாநாவல்லி குதித்தபடி அங்கு வந்தான். ஒரே தாவு தாவி, பாபாவின் கால்களில் விழுந்தான். அந்தக் களேபரத்தில், அவனுடைய வால் அறுந்து எங்கேயோ பறந்தது. அதைக் கண்டு குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

வணங்கியபடியே நாநாவல்லி சொன்னான்:
‘‘பாபா, இது என்னுடைய வானர சேனை. நான் அனுமான்... நீங்கள் ராமர்! அப்படியானால் எனக்குப் பழம்?’’
‘‘எடுத்துக் கொள்...’’

‘‘எனக்கு இன்னொரு கூடை நிறைய வேணும்!’’
‘‘தாத்யா, அவனுக்கு எல்லாம் கொடுத்துவிடு.’’

அதற்குள் நாநாவல்லி உள்ளே போய், கூடையைத் தோளில் சுமந்தபடி வெளியே வந்து ‘‘வாங்கடா... காட்டிற்குப் போய், மரத்தின் மேலே உட்கார்ந்து சாப்பிடலாம்...’’ என்றான்.
‘‘பாபா, நாங்களும் போகலாமா?’’ குழந்தைகள் கேட்டார்கள்.
‘‘குதித்துக்கொண்டே ஓடுங்கள்.’’

சந்தோஷத்துடன் கத்திக்கொண்டே நாநாவல்லியின் பின்னால் ஓடிப்போனார்கள்.
பாபா தன் இருக்கையின் முதுகில் சாய்ந்து உட்கார்ந்தார். வழக்கப்படி வலது கையால் தடவிப் பார்த்தார். அங்கு செங்கல் இல்லை. திடுக்கிட்டார்!

என்னைப் போன்றவர்
களையே இப்படி
வறுத்தெடுத்தால்,
சாமானியர்கள்
நிலைமை என்ன?
பக்கீரின் பொறுமையை சோதித்துப் பார்க்காதீர்கள்!

எனக்கு எம்மதமும் சம்மதம். என்
வயது, லட்சக்கணக்கான வருடங்கள்!