பொலிட்டிகல் பீட்



வழக்கமாக சோனியா குடும்பத்திலிருந்து எல்லோரையும் பிரசாரத்துக்குக் கூப்பிடுவார்கள் காங்கிரஸ்காரர்கள். கடந்த தேர்தலின்போது சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவும் பிரசாரம் செய்தார்.

ஆனால் நில மோசடி ஊழல் புகாரில் சிக்கியதால், இம்முறை அவரை தேர்தல் களத்திலேயே காணவில்லை. அமேதியில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தபோது மட்டும் மனைவி பிரியங்கா, குழந்தைகள் சகிதம் வந்திருந்தார். அதன்பின் பிரியங்கா மட்டும் பிரசாரம் செய்கிறார். வதேரா அமைதியாக டெல்லி போய் விட்டார்.

ஒரிசாவில் தொடர்ச்சியாக மூன்று முறை ஜெயித்துவரும் பிஜு ஜனதா தளக் கட்சியினர் இம்முறை சற்றே கவலையோடு இருக்கிறார்கள். காரணம், ஒரு குழப்பம்! பிஜு ஜனதா தளத்தின் சின்னம், சங்கு. கிட்டத்தட்ட இதுவும் தேங்காயும் ஒரே மாதிரி இருக்கிறது. கடந்த தேர்தலிலேயே பல சுயேச்சைகள் தேங்காய் சின்னத்தைக் கேட்டு வாங்கி, ஏராளமான ஓட்டுக்களைப் பிரித்து விட்டார்கள். இம்முறை போட்டி கடுமையாக இருப்பதால், சில ஓட்டுகள் கூட முடிவை மாற்றிவிடும். எனவே ஓட்டு இயந்திரங்களை எடுத்துச் சென்று மக்களுக்கு கிளாஸ் எடுக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

பி.ஜே.பியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி இப்போது தான் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆர்.எஸ்.எஸ் தலைமையகமான நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்ய நரேந்திர மோடி போகவில்லை. ‘‘நிதின் கட்கரியே ஒரு பெரிய தலைவர். அவரை ஆதரித்துப் பேச இன்னொருவர் எதற்கு?’’ எனக் கேட்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

பிரபல பஞ்சாபி ராப் பாடகர் ஹனி சிங் மேலும் ஒரு புதுமையைப் படைத்திருக்கிறார். புது டெல்லி தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அஜய் மக்கானை ஆதரித்துப் பிரசாரம் செய்த அவர், டெல்லி மேற்கு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதனால் இரண்டு கட்சியினரும் அவர்மீது கோபமாக இருக்கிறார்கள். டெல்லியில் கணிசமாக இருக்கும் சீக்கிய ஓட்டுக்களுக்காக இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்குமோ தெரியவில்லை.

இடதுசாரிகளின் ஆதரவோடு கேரளாவின் சாலக்குடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார், மலையாள காமெடி நடிகர் இன்னோசென்ட். கட்சி அடையாளம் இல்லாத வேட்பாளர் என்பதால், மோகன்லால், மம்முட்டி என மலையாள சூப்பர் ஹீரோக்கள் அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனாலும் இன்னோசென்ட் கவலையாக இருக்கிறார். பல படங்களில் அவர் அரசியல்வாதியாக நடித்திருந்தாலும், எல்லாமே காமெடி அரசியல்வாதி ரோல்கள்! நிஜத்திலும் மக்கள் அப்படி நினைத்துவிடுவார்களோ என்ற பயம்தான் காரணம்!

ராஜஸ்தானின் டௌசா தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஷிவ்பால் குஜ்ஜார், முக்கியக் கட்சி வேட்பாளர்கள் அத்தனை பேரின் வயிற்றிலும் புளியைக் கரைக்கிறார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பாலிவுட் நடிகைகள் ரவீனா டாண்டன், மஹிமா சௌத்ரி என பலரை பிரசாரத்துக்கு அழைத்து வருகிறார். தொகுதியில் இருக்கும் ரசிகர் மன்றத்தினர் பலரும் ‘இவரை அழைச்சுட்டு வாங்க’, ‘அவரை அழைச்சுட்டு வாங்க’ என பல நடிகைகளின் லிஸ்ட்டை அவரிடம் நீட்டுகிறார்களாம்.

கூட்டணியில் உள்குத்து என்பது ரகசியமாக நடக்கும் விஷயம். ஆனால் வெளிப்படையாகவே நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப்பில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறது சிரோமணி அகாலி தளம். அதே பாரதிய ஜனதா கட்சிக்கு ஹரியானாவில் கூட்டணிக் கட்சியாக இருப்பது ஹரியானா ஜான்கிட் காங்கிரஸ். இதன் தலைவர் குல்தீப் பிஷ்னோய். அகாலி தளத் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலும் அவரது மகன் சுக்பீர் சிங் பாதலும் ஹரியானாவுக்கு வந்து, பிஷ்னோய்க்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள். ‘‘அவர்களை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும்’’ என பிஷ்னோய் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாரதிய ஜனதா தலைவர்கள் இரண்டு கட்சிகளையும் சமாதானப்படுத்த முயற்சி எடுத்து வருகிறார்கள்.

பீகாரில் ஒருபக்கம் மோடியால் உற்சாகமாகி பி.ஜே.பி கூட்டணி விறுவிறுப்பாக தேர்தல் வேலை பார்க்கிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து லாலு பிரசாத் யாதவ் முட்டி மோதுகிறார். இந்த மோதலில் அங்கு ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள். மிக மோசமாக தோற்கும் என கணிப்புகள் சொன்னாலும், அக் கட்சியின் முதல்வர் நிதிஷ் குமார் உற்சாகம் இழக்கவில்லை. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு பெண்கள் பெருமளவில் வருவதுதான் காரணம். ‘‘பெண்கள் ஓட்டு எங்களுக்குத்தான்’’ என சத்தியம்
செய்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

வாய்ஸ்

‘‘மம்தா பானர்ஜிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை;
அராஜகவாதத்தின் நீட்சியான
வடிவம்தான் மம்தா!’’

 மேற்கு வங்காள பி.ஜே.பி தலைவர் சித்தார்த் நாத் சிங்‘‘நரேந்திர மோடிக்கு 56 இன்ச் அளவுக்கு அகன்ற மார்பு இருக்கிறது. அவரது இதயமும் அதே போல பரந்ததாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவருக்கு மிகச்சிறிய இதயமே உள்ளது.’’ உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் எண்கள்

22000 லிட்டர் அழியாத மை, இந்தத் தேர்தலுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் அண்டு வார்னிஷ் லிமிடெட் மட்டுமே இந்தியாவில் இந்த மையைத் தயாரிக்கும் நிறுவனம்! 846 கோடி ரூபாய் கடந்த 2009 தேர்தலை நடத்த செலவானது. அதற்கு முந்தைய 2004 தேர்தலுக்கு 1113 கோடி ரூபாய் செலவானது. எலெக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் செலவுகளை கணிசமாகக் குறைத்தன.