வாக்குரிமை இல்லாத முதியோர்கள்!



இன்னும் ஒரு புறக்கணிப்பு

குடும்பத்தாலும், உறவுகளாலும் நிராகரிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் வயதான வர்களை தேர்தல் கமிஷனும் தன் பங்குக்கு நிராகரித்து சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இலவச முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. இந்த இல்லங்களில் புறக்கணிப்பின் துயரங்களைச் சுமந்துகொண்டு பல்லாயிரம் முதியோர்கள் தங்கள் காலத்தைக் கழிக்கிறார்கள். ‘நிரந்தர முகவரி யில்லை’, ‘ரேஷன் கார்டு இல்லை’ என பல காரணங்களைச் சொல்லி இவர்களில் பெரும்பாலானோருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்காமல் புறக்கணித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.

இதுபற்றி மிகவும் வருத்தத்தோடு பேசுகிறார் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் மதுரைப் பகுதி திட்ட அலுவலர் உதயகுமார். ‘‘கடந்த 10 வருடங்கள்ல முதியோர் மீதான வன்முறையும், புறக்கணிப்பும் அதிகமாகி இருக்கு. முதியோர் இல்லங்களோட எண்ணிக்கையும் அதிகமாகிட்டே இருக்கு. சொத்துக்களைப் பறிச்சுக்கிட்டு விரட்டுறது, வார்த்தைகளால வதைச்சு துன்புறுத்துறது, குழந்தைகளை நெருங்க விடாம தடுக்கிறதுன்னு பலவிதமான வன்முறைகளை முதியோர்கள் மீது ஏவி, வீட்டை விட்டுத் துரத்துறாங்க.  குழந்தைகளுக்காக குரல் கொடுக்கக்கூட இங்கே அமைப்புகள் இருக்கு. ஆனா, முதியோர்கள் சந்திக்கிற கொடுமைகளைக் கேட்க எவரும் இல்லை. 

ஓரளவுக்கு வசதியும், பின்புல மும் உள்ளவங்க, ‘கட்டணம் வாங்குகிற முதியோர் இல்லங்கள்’ல இருக்காங்க. வசதி இல்லாதவங்க இலவச முதியோர் இல்லங்களுக்குப் போறாங்க. இங்க வாழுற முக்கால்வாசி பேருக்கு எந்த ஆவணமும் இல்லை. அவங்களுக்கு முதியோர் உதவித்தொகை, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவங்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை உள்பட எதுவுமே கிடைக்கிறதில்லை. வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படுறதில்லை. 

தமிழகம் முழுதும் இருக்கிற முதியோர் இல்லங்கள்ல நாங்க நடத்தின ஆய்வில சுமார் 70% பேர் ஓட்டுரிமை இல்லாம இருக்காங்க. முதியோர் இல்ல நிர்வாகிகள்கிட்ட பேசினப்போ, ‘வாக்காளர் அடையாள அட்டை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரிக்கிறார்கள்’ என வருந்துகிறார்கள். மனிதாபிமானம் உள்ள சில அதிகாரிகள் மட்டும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து சிலருக்கு வாக்காளர் அட்டை வழங்கியிருக்காங்க.

ஏற்கனவே புறக்கணிப்பைச் சுமந்துக்கிட்டு தவிக்கிற இவங்களை, குடிமக்களாகக் கூட மதிக்காம அரசாங்கமும் புறக்கணிக்கிறது எந்த விதத்தில் நியாயம்? ஏற்கனவே குரல் கம்மிக் கிடக்கிற முதியோர்கள், தங்களுக்கான கோரிக்கைகளை மையப்படுத்தி குரல் இணைக்க கிடைக்கும் வாய்ப்பு தேர்தல்தான். அந்த வாய்ப்பை மறுத்து வஞ்சிப்பது மனித உரிமை மீறல்’’ என்று குமுறுகிறார் உதயகுமார்.

மதுரை பசுமலையில் ‘இன்ப இல்லம்’ என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தும் ஜஸ்டினா துரைராஜிடம் இதுபற்றிக் கேட்டோம்...‘‘பெரும்பாலான முதியோர்கள் உறவுகளின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டு அவர்களோடு வாழவே விரும்புவார்கள். சகிக்கவே முடியாத சித்திரவதைகள் நிகழும்போது, வெறுப் பின் உச்சத்தில்தான் வீட்டை விட்டு வெளியேறு கிறார்கள். உறவுகளே கொடுமைப்படுத்தி வெ ளியேற்றுவதும் உண்டு. இப்படியான சூழ்நிலையில் வெளியேறி முதியோர் இல்லத்தை நாடுபவர்கள், ஏற்கனவே வைத்திருக்கும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வருவதில்லை. எங்கள் இல்லத்தில் இருக்கும் 70% பேருக்கு வாக்குரிமை இல்லை.

வாக்காளர் அடையாள அட்டை கேட்டு பலமுறை விண்ணப்பித்து விட்டோம். இந்தப்பகுதியில் உள்ள அலுவலர்களிடம் விண்ணப்பித்தால், ‘ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டு வேண்டும்’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மனுவை குப்பைத்தொட்டியில் போட்டு விடுகிறார்கள். கலெக்டர் அலுவலகத்திலும் முறையிட்டுப் பார்த்துவிட்டோம். எதுவும் நடக்கவில்லை. வெளிநாடுகளில் வயது முதிர்ந்தவர்களின் அத்தனை தேவைகளையும் அரசே கவனிக்கிறது. இங்கே வாக்குரிமை கூட கிடைக்கவில்லை’’ என்று வேதனைப்படுகிறார்
ஜஸ்டினா.

மதுரை மாநகராட்சி நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தின் நிர்வாகி ராமரிடம் இதுபற்றி விசாரித்தோம். ‘‘ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், பிளாட்பாரங்களில் வசித்த 45 பேர் இங்கே இருக்கிறார்கள். இவர்களில் 40 பேருக்கு வாக்குரிமை இல்லை. பலர் ‘இதுவரை ஓட்டே போட்டதில்லை’ என்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை கேட்டு எத்தனையோ முறை மனு கொடுத்து ஓய்ந்து விட்டோம். எதுவும் நடக்கவில்லை’’ என்கிறார் ராமர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். ‘‘தேர்தலில் பிஸி... இப்போது எதுவும் பேச முடியாது’’ என்று ஒரே குரலில் வருகிறது பதில்.
அகதிகளுக்குக் கூட பல நாடுகள் வாக்குரிமை வழங்குகின்றன. இங்கேயே பிறந்து, வளர்ந்து, பலரை வாழ்வித்து, நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்று, உறவுகளின் வக்கிரத்தால் நிலைகுலைந்து நிற்கிற முதியோருக்கு இங்கு வாக்குரிமை இல்லை. நல்ல ஜனநாயகம்!

வெளிநாடுகளில் வயது முதிர்ந்தவர்களின் அத்தனை தேவைகளையும் அரசே கவனிக்கிறது. இங்கே வாக்குரிமை கூட கிடைக்கவில்லை!

 வெ.நீலகண்டன்