வாவ் ரஜினி... வராத நயன்தாரா...



சடசடக்கும் சரத்குமார்

‘‘நான் பாக்குறதுக்குத்தான் வில்லன்... ஆனா, பக்கா ஹீரோ...’’ ‘‘நான் செய்வதில் எல்லாம் ஹீரோயிசம் இருக்கும்!’’ எதிரெதிர் திசையில் கெட்டப் மாற்றி மாற்றி பஞ்ச் அடிக்கிறார் சரத்குமார். ‘‘ஷாட் ஓகே... பிரமாதம் சார்’’ என இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கட்டித் தழுவ, கரகோஷத்தால் காதில் பட்டாசு வீசுகிறது ‘சண்டமாருதம்’ யூனிட். மீண்டும் சரத்குமார் இரட்டை வேடம் போடும் படம்.அரிதாரம் மாற்ற கேரவனுக்குள் நுழைந்த சரத், நம்மையும் ஏற்றிக்கொள்கிறார். இப்போதும் தொடரும் தேகப் பயிற்சியில் தேக்கு மரமாய் இறுகியிருக்கிறது உடம்பு.

‘‘அப்பா-மகன், அண்ணன்-தம்பின்னு சலிக்கிற அளவுக்கு இரட்டை வேஷத்தில் நடிச்சிட்டாலும் ‘சண்டமாருதம்’ எனக்கு ஸ்பெஷல்தான். சண்டமாருதம்னா பேரழிவுக் காற்றுன்னு அர்த்தம். அப்படியொரு கேரக்டர்தான் வில்லன் சர்வேசுவரன். அவனை அழிக்கக் களமிறங்கும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சூர்யாதான் ஹீரோ. இந்த ரெண்டுமே நான்தான். பத்திரிகைகளில் என்கவுன்டர் பற்றி படித்திருக்கலாம்; சினிமாவிலும் பார்த்திருக்கலாம்.

‘குற்றவாளிகளை டமால் டுமீல்னு சுட்டுத் தள்ளிட்டு வீட்டுக்கு வரும் போலீஸ் ஆபீஸரின் மனநிலை எப்படி இருக்கும்... குடும்ப வாழ்க்கையில் வீரம் மறந்த ஈரம்...’ இப்படி இந்தப் படத்தில் கொஞ்சம் அதிகமாவே அலசியிருக்கோம். என்னோட முறைப் பெண்ணா மீரா நந்தன், ஒருதலைக் காதலில் உருகும் ஓவியான்னு ரெண்டு ஹீரோயின்கள். கதைக்களமா பொள்ளாச்சி, கும்பகோணத்தை எடுத்துக்கிட்டோம்.’’

‘‘நீங்கதான் கதை போல?’’‘‘ஆமா. உண்மையான என்கவுன்டர் எதையும் நான் கதையாக்கலை. சின்ன இன்ஸ்பிரேஷன் தவிர, முழுக்க என் கற்பனைதான். ராஜேஷ்குமார் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கார். நானும் ஏ.வெங்கடேஷும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறோம்.

எவ்வளவு சீரியஸான கதையா இருந்தாலும் அதுக்குள்ள காமெடி, குடும்ப சென்டிமென்ட் சேர்த்து ஹிட் அடிப்பதில் கெட்டிக்காரர் ஏ.வெங்கடேஷ். இதிலும் அந்த  மாதிரி நிறைய மேஜிக் வைத்து ரொம்ப பிரமாதமா இயக்குறார். கதை மட்டுமல்ல, ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாட்டும் பாடியிருக்கேன். மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் நான், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் சேர்ந்து பிரமாண்டமா தயாரிக்கிறோம்!’’

‘‘நயன்தாரா அறிமுகமே உங்களோடதான். அவங்க கால்ஷீட் கேக்கலையா?’’

‘‘சமீபத்தில்கூட பேசினோம். ஆனா, கால்ஷீட் விஷயமா இல்லை. அவங்க வந்தா பட்ஜெட் இன்னும் அதிகமாகும். அவங்களுக்குக் கொடுக்குற சம்பளத்துக்கு சமமா, அழுத்தமான கேரக்டர் இருக்கணும். நயன்தாராவுக்கு பெரிய ஸ்கோப் கொடுக்கிற ஸ்பேஸ் இந்தக் கதையில் இல்லை. அவங்களை என்னோட ஜோடியாக்க முடியாததற்கு இதுதான் காரணம்.

என் சம்பாத்தியம் சினிமாவைத் தவிர வேறு எதுவுமில்லை. அதனால்தான் இப்போ படங்கள் தயாரிக்கத் தொடங்கியிருக்கேன். அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம், தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கும் ஒரு படம்னு தொடர்ச்சியா வரும்...’’

‘‘இப்போதைய சினிமா டிரெண்டை எப்படிப் பார்க்குறீங்க? எதையாவது மிஸ் பண்றதா நினைக்கிறீங்களா?’’

‘‘வித்தியாசமா, புதுசு புதுசா சிந்திக்கிற இளைஞர்கள் ரொம்பப் பேர் வந்துட்டாங்க. சந்தோஷம். ஆனா, கார்த்திக், பிரபு, சத்யராஜ், என்னைப் போன்ற ஹீரோக்களை எங்க வட்டத்துக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்து வித்தியாசமான கதைகளை உருவாக்க நினைக்கிறதில்லை. ஹாலிவுட்டில் புரூஸ் வில்லிஸ் போன்ற பல ஹீரோக்கள் இன்னும் நடிச்சிட்டிருக்காங்க. புதிய களத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்துக்குள் அவங்களை நுழைத்து,

அழுத்தமான - அழகான படங்களைக் கொடுக்குறாங்க. அந்த முயற்சியும் இளம் இயக்குனர்களிடம் வந்தால் நல்லாயிருக்கும். ‘சண்டமாருதம்’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின், சமுத்திரகனி படங்களில் நடிக்கிறேன். மீண்டும் கௌதம் மேனனுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். ‘உங்களை மாதிரி ஒருத்தர் நடிச்சாத்தான் நல்லாயிருக்கும்’னு கௌதம் என்கிட்ட ஒரு கதை சொல்லியிருக்கார். தொடர்ந்து பிஸி. பார்க்கலாம்.’’

‘‘நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் குரல் எழுப்பியது பற்றி?’’

‘‘நடிகர் சங்கம் பொது ச் சொத்து. பிற்காலத்தில் பொறுப்பேற்பவர்கள் பிரச்னை இல்லாமல் செயல்படணும்ங்கிறதுக்காக நாங்க உழைச்சிட்டிருக்கோம். நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு மூன்றரைக் கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருக்கும் அளவுக்கு செயல்பட்ட எங்களுக்கு எதை, எப்படிச் செய்யணும்னு தெரியாதா? நான் யாரையும் எதிரியா நினைக்கலை. விஷாலும் எங்களை எதிரியா நினைச்சுப் பேசலை. யாரோ ஒரு சிலர்தான் இந்த விஷயத்தில் விஷத்தைப் பாய்ச்சுறாங்க.

நாமாகவே கட்டிடத்தைக் கட்டி முடிக்கலாம் என்பதுதான் விஷால் போன்றவர்களின் ஆதங்கம். ரஜினி கூட ஒருமுறை ‘எதுக்கு ஷோவெல்லாம் நடத்திக்கிட்டு..? தங்கத் தட்டில் தேங்காய் வைத்த மாதிரி இருக்காதா? எதுவா இருந்தாலும் நாமே பண்ணிடலாம்’ என்றார். அப்புறம் ஒரு முடிவை ரஜினியிடம் சொன்னபோது ‘வெரிகுட். அப்படியே செய்யலாம்’ என்றார். நடிகர் சங்கம் இருந்த இடத்தில் மல்டிபிளக்ஸ் காம்பளக்ஸ் கட்டி, அதன் மூலம் வருஷத்துக்கு முப்பது கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் திட்டம் இருக்கு. அதற்கு சில காலம் ஆகத்தானே செய்யும்!’’

- அமலன்