பெரிய ஹீரோவா இருந்தாலும் NO GLAMOUR



ஸ்ரீதிவ்யா தடாலடி

அழகும் அழுத்தமும் பிசைந்து, பிசிறு தட்டாத சினிமா மொழியுடன் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் தந்தவர், சுசீந்திரன். மீண்டும் விளையாட்டுப் பின்னணியில் இவர் இயக்கும் படம் ‘ஜீவா.’ இம்முறை கிரிக்கெட்டை கையிலெடுத்திருப்பவர், நிஜ வாழ்விலும் கிரிக்கெட் பிளேயரான விஷ்ணுவையே ஹீரோவாக்கி இருக்கிறார். ஒரே படத்தில் கொடிகட்டிப் பறக்கும் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யாதான் நாயகி. பிரசாத் ஸ்டூடியோவில் தடதடத்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையில் ஹீரோ, ஹீரோயினை கேரவனுக்குள் பார்சல் செய்து டூயட் பேட்டிக்கு தூபம் போட்டோம். “ஜென்ட்ஸ் ஃபர்ஸ்ட்” என இன்னிங்ஸை தொடங்கினார் விஷ்ணு.

‘‘ ‘வெண்ணிலா கபடிக்குழு’வுக்கு பிறகு சுசி சாரோட இன்னொரு படம் பண்ணணும்னு ஆசையா காத்திருந்தேன். ‘பாண்டியநாடு’ நேரத்தில், ‘அடுத்து ஒரு படம் பண்ணலாம்... ரெடியா இருங்க’ன்னு சொன்னார். திடீர்னு ஒருநாள், ‘கிரிக்கெட் பின்னணியில் கதை பண்ணலாமா’ன்னு கேட்டதுதான் தாமதம் டபுள் சந்தோஷத்துடன் ரெடியாகிட்டேன். 

அடிப்படையில் கிரிக்கெட் ப்ளேயரான எனக்கு, அந்த பேக் ட்ராப்பில் ஒரு படம்னா அல்வா சாப்பிடுவது மாதிரி இருக்கும்னு நினைச்சேன். அது தப்புன்னு ஷூட்டிங் போன பிறகுதான் புரிஞ்சது. நிஜத்தில் கிரிக்கெட் விளையாடினால் கூட, ரன் எடுத்துட்டு பேசாமல் நிற்கலாம். ஆனால், ரீ டேக்குக்காக மூச்சிரைக்க ஓடுறது, பிட்ச்சுக்கு முன்னாடி கேமரா, அதை உடைக்காம பந்தை சந்திக்கிறதுன்னு பெண்டு கழற்றிட்டார் சுசி.’’ - பேட்டியிலும் மூச்சு வாங்காமல் பேசிய விஷ்ணு, அடுத்த ஓவரை ஸ்ரீதிவ்யாவிடம் ஒப்படைக்கிறார்.

‘‘நான் இதில் ஜெனிங்கற கேரக்டர் பண்றேன். பக்குவம் பத்தாத பதினொன் றாம் வகுப்பு மாணவி, அப்புறம் காலேஜ் போய் ரொம்ப விபரமா இருக்குற பொண்ணுன்னு வேற வேற பருவங்களில் வெரைட்டி காட்டுற நல்ல வாய்ப்பு இதில் இருக்கு. ‘பெரிய டைரக்டர் ஆச்சே’ன்னு ஷூட்டிங் தொடங்கினப்போ நடுங்கிட்டே இருந்தேன். பிறகு, சுசி சார் கொடுத்த சுதந்திரத்தில் ரொம்ப சௌகரியமா உணர்ந்தேன். ‘ஈட்டி’, ‘வெள்ளைக்கார துரை’, ‘டாணா’, ‘பென்சில்’ என்று ஐந்து படங்களில் நடிச்சிட்டு இருக்கேன்...’’ - சுந்தர தெலுங்கு வாடை வீச சொற்களை உதிர்க்கிறது ஸ்ரீதிவ்யாவின்
இதழ்கள்.

‘‘கதைப்படி ஸ்ரீதிவ்யாகிட்ட க்ளீன்போல்டு ஆகுறீங்களா?’’

 - பவுன்ஸர் கேள்வியை விஷ்ணுவுக்கு வீசினோம்.‘‘நான் என்னங்க... ஷூட்டிங்குக்காக எந்த ஊருக்குப் போனாலும் ‘ஊதா கலரு ரிப்பன்’ ரிங் டோன்தான். பசங்கல்லாம் கிறங்கிப் போயிருக்காங்க. ஒரு படம்தான்... ஆனா, கிராமத்து ஏரியாவில் இவங்களுக்கு எவ்வளவு ஃபேன்ஸ் தெரியுமா. நினைக்கிறப்போ பொறாமையில் வேர்க்குதுங்க.  கதைப்படி இவங்கதான் எங்கிட்ட க்ளீன் போல்டாகுறாங்க. இவங்க மாதிரியே எனக்கும் இளமைக்கால தோற்றம் இருக்கு. தாடி, மீசையோட வந்துக்கிட்டிருந்த என்னை, க்ளீன் ஷேவ், ஒட்ட வெட்டிய தலைமுடின்னு பதினாறு வயசு பையனா மாத்திட்டார் இயக்குனர்.’’

‘‘படத்தில் உங்களுடன் விஷ்ணு கிரிக்கெட் ஆடுறாரா?’’ என ஹீரோயினிடம் கேட்டால், ‘‘இதுக்கு நான் பதில் சொல்றேன்’’ என முன் வருகிறார் ஹீரோ.‘‘என்னோடு களத்தில் இறங்கி அதகளம் பண்றது சூரி அண்ணன்தான். என்னோட டீமில் சூரி இருப்பார்னு சுசி சார் கதை சொன்னப்பவே சிரிப்பு தாங்கல. ‘படாத இடத்தில பந்து பட்டு, நான் சீரியஸாகுறதுக்கு முன்னாடி அந்த விளையாட்டை சீரியஸா கத்துக் குடுப்பா..’ன்னு சூரி அண்ணன் எங்கிட்ட மூணு வாரம் டிரெயினிங் எடுத்துக்கிட்டார். பிறகு, ஷூட்டிங் ஸ்பாட்டில் பின்னிப் பெடலெடுத்துட்டார். இனி, சி.சி.எல் மேட்ச்சில் ஒரு கை குறைந்தால் சூரி அண்ணனை தாராளமா சேர்த்துக்கலாம்.’’

‘‘சேப்பாக்கம் மைதானமெல்லாம் வருதா?’’

‘‘சேப்பாக்கம் மட்டுமல்ல... சென்னை, மும்பையில் உள்ள பல மைதானங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கு. எக்கச்சக்க துணை நடிகர்கள், பிரமாண்ட செட்டப்னு மதி சார் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டலா இருக்கும். என்னோட டீமில் சூரி மட்டுமில்ல, ‘அன்னக்கொடி’ ஹீரோ லக்ஷ்மணும் இருக்கார். இவரும் நிஜத்தில் மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். தவிர, ரஞ்சி கோப்பையில் விளையாடிய சில வீரர்களும் நடிச்சிருக்காங்க. ஒரு கிரிக்கெட் வீரனோட குடும்ப வாழ்க்கை, நட்பு, காதல்னு விரியும் கதையில், இதுவரை எந்தப் படங்களிலும் காட்டாத கிரிக்கெட்டின் மற்ற பக்கங்களையும் சுசி சார் அற்புதமா பதிவு செய்திருக்கார். டி.இமானின் பின்னணி இசை கிரிக்கெட் பின்னணிக்கு அட்சர சுத்தமா பொருந்தியிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கும் களத்தில் இருக்கிற மாதிரியா ஃபீல் இருக்கும்!’’

‘‘கிளாமர் பண்ணியிருக்கீங்களா ஸ்ரீதிவ்யா?’’

‘‘இல்ல. என்னை ரொம்ப டீசன்டா காட்டியிருக்காங்க. விஷ்ணு சார் சொன்னது மாதிரி வெளியூர் ஷூட்டிங் போகும்போது சின்னச் சின்ன டீக்கடைகளில் கூட என் போட்டோ ஒட்டியிருந்ததைப் பார்த்துட்டு, ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு. அந்த அளவுக்கு என்னை நேசிக்கும் தமிழ் ரசிகர்கள் முகம் சுளிக்கும்படியா கிளாமர் ரோல் பண்ண மாட்டேன். பெரிய ஹீரோ பட வாய்ப்பு வந்தாலும் ‘நோ கிளாமர்’ என்பதில் உறுதியா இருக்கேன்.’’

- அமலன்