மனக்குறை நீக்கும் மகான்கள்!



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
மௌனம் என்பது என்ன?
வாய்மூடி இருப்பதா?
வாய்மூடி இருந்தால் பேச மாட்டோம். ஆனால், மனசு கூச்சலிட்டுக்கொண்டே இருக்குமே.ஆமாம்! மனம் கூச்சலிடத்தான் செய்யும். ஆரம்பத்தில் இப்படி வாய் மூடி இருக்கும் மௌனத்தால் மனசின் காட்டுக் கத்தலை காது கொடுத்துக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். அதைத் துல்லியமாய் கவனித்தால், மனசு நாய்க்குட்டி போல அடங்கும். தூங்கி எழுந்தவன் கண்களைக் கசக்கிக் கொண்டு ஒளிக்குப் பழகுவது போல, மனசு மெல்ல மெல்ல மௌனத்திற்குப் பழகும். இது சாமானியனின் ஆன்மிகச் சாதகம்.

ஆனால், 35 நாட்கள் நிஷ்டையில் இருந்து, குமரனின் பவள வாயால் உபதேசம் பெற்று, கிராமத்தை நோக்கி நடக்கும் ஞானி குமரகுருதாசருக்கு எப்படிப்பட்ட மௌனம் வாய்த்திருக்கும்? அது அமுதம் பருகிய நிலை.இதற்கு மேல் இதில் ஊற்ற இடமில்லை என்கிற அளவுக்கு குமரகுருதாசர் ஞானத்தால் நிரம்பி வழிந்தார். குகனால் பூரணம் அவருள் பூத்திருந்தது. அமுதம் இன்ன சுவை என்று எத்தனை விதமாய்ச் சொன்னாலும் அது வெறும் வார்த்தைதான்;

அனுபவம் ஆகாது. ஆனால், ஒரு துளி எடுத்து நாக்கில் வைத்துவிட்டால் விளக்க வேண்டிய அவசியமே இருக்காது. குமரகுருதாசர் உள்ளே மூழ்கிக் கிடந்தார். கால்கள் தாமாக நடந்தன. கண்கள் இலக்கு இல்லாமல் பார்த்தன. எல்லாவற்றிலும் தன்னைக் கண்டார். தனக்கு வேறாக, தன்னிலிருந்து அன்னியமாக இந்த உலகில் எதுவும் இல்லை என்கிற உயர்ந்த நிலையில் யாதுமாகி நின்றார்.

கடவுள் என்கிற பெரிய கற்கண்டிலிருந்து சீராக செதுக்கிய இனிப்புத் துண்டுகளாக இருக்கும் உயிர்கள் எல்லாம் தோன்றின. நீயும் கற்கண்டு. நானும் கற்கண்டு. மரமும் கற்கண்டு மாடும் கற்கண்டு எல்லாம் கற்கண்டு. பிறகு, எங்கிருந்து வரும் வேற்றுமை? சகலத்தின் மீதும் அன்பு பொங்கியது.

ஒரு ஆட்டுக் குட்டியின் குதியல் ஏன் என்பது தெளிவாய்த் தெரிந்தது. செடியின் அசைவு எதற்கு என்பதும் புரிந்தது. புரிதலுக்கு வார்த்தை தேவை இல்லாமல் போயிருந்தது. சகலமும் மனதால் கடத்தப்பட்டது. புல் தரையில் கால் வைக்கக் கூசினார். ஆனால், புற்கள் அந்தப் பாதம் தாங்க விரும்புவதையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. வலிக்குமோ என மெல்லப் பாதம் பதித்தார். பாதம் வருடிய புற்கள் தங்கள் அன்பை ஸ்பரிசத்தால் கூறின. புல்லிற்கு பாரம் தெரியவில்லை.

எப்படி? இது, பௌதீகம் தாண்டிய விஷயம். காதலிலும் கடவுளிலும் சாத்தியமாகும் ரசாயனம்; இரண்டிலும் ஆதாரமாய் அன்பு இருக்கிறது. குமரகுருதாசர் இறையன்பில் மூழ்கித் திளைத்தபடி வாய் திறக்க விருப்பமே இல்லாது ஊரினுள் வந்து சேர்ந்தபோது நன்றாக விடிந்திருந்தது. உடையநாயகம் பிள்ளை குமரகுருதாசரை எதிர்கொண்டழைத்து வந்தார்.

 ஓர் ஆசனத்தில் அமர்த்தினார். அருந்த பால் கொடுத்தார். இதற்குள், ‘‘சாமி தவம் முடிச்சு ஊருக்குள்ள வந்திடுச்சாமே...’’ என்கிற விசாரிப்புகள் ஊரின் அத்தனை உதடு களாலும் உச்சரிக்கப்பட்டு, பலரது காதுகளை நிறைத்திருந்தது.

வாசலில் பாமர மக்கள் பக்தியோடு நிறைந்திருந்தார்கள்.‘‘சாமி என்ன சொல்லுச்சு... நல்ல மழை வருமா... காடு, கழனி நல்லா விளையுமா...?’’ - தேவைகள் கேள்விகளாய் இரைந்தன.‘‘சாமி இன்னும் பேசவே இல்லையாம்! மௌனமா இருக்காராம்?’’‘‘சாமி வாய் திறக்காம இருந்தா நமக்கெல்லாம் யாரு நல்லது சொல்லுவா?’’‘‘பொறுங்க...

பொறுங்க... சாமி பேசும்...’’ - அவர்களாகவே கேள்விகள் கேட்டு, அதற்கு அவர்களாகவே பதிலும் சொல்லிக்கொண்டார்கள்.சுவாமியின் சீடர்கள் மௌனம் கலைத்து உபதேசம் செய்தருள கோரிக்கை வைத்தார்கள். ‘இந்த மௌனம் எனக்குப் பிடித்திருக்கிறது’ என எழுதிக் காட்டினார் குமரகுருதாசர். ஆனால், முருகன் தவக்குழியில் இருந்து எழுப்பி அனுப்பியது பேசாதிருக்கவா? கோரிக்கை பலமாய் வைக்கப்பட்டது.

‘பெரிய புராணத்தில் கயிறு சார்த்திப் பார்க்கலாம். திருஞானசம்பந்தர் புராணம் வந்தால் பேசுகிறேன்’ என எழுதிக் காட்டினார். கயிறு சார்த்துதல் என்பது, ஒரு புத்தகத்தின் நடுவே ஏதோ ஒரு பக்கத்துக்கு இடையில் கயிற்றை இடையிட்டு திறந்து பார்ப்பது. புத்தகத்தில் நாம் நினைக்கும் பகுதி அந்தப் பக்கத்தில் இருந்தால் நல்ல நிமித்தம். அவர் சொன்னபடியே கயிறு சார்த்திப் பார்க்க, திருஞானசம்பந்தர் புராணமே வந்தது. மெல்ல பேச முயன்ற குமரகுருதாசரின் திருவாக்கில் மூன்றாவது நாளிலிருந்து சத்திய வார்த்தைகள் உதிர்ந்தன.

பிரப்பன்வலசையைச் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாய் வந்து சுவாமிகளை தரிசித்து விட்டுச் சென்றார்கள். அவரைப் பார்த்தாலே பாவம் தீரும் என நம்பினார்கள். சுவாமிகள் புத்தாடை ஏற்றுக்கொண்டு பாம்பனுக்கு வரவேண்டும் என சீடர்கள் வேண்டினார்கள். ‘‘என் நாயகன் முருகன் கௌபீனத்தோடுதான் இருக்கிறான். எனக்கும் அதுவே போதும்’’ என்றார். ‘‘சரி, ஒரு வெள்ளை வஸ்திரத்தை மட்டுமாவது மேலே போர்த்திக் கொள்ள வேண்டும்’’ என வேண்டினார்கள். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

ஒரு அதிகாலையில் பிரப்பன்வலசை மக்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தம் சீடர்கள் சூழ பாம்பன் திரும்பினார். பாம்பன்வாசிகள் குமரகுருதாசரை தரிசித்து மகிழ்ந்தார்கள். அவரது கைகளால் திருநீறு வாங்கி நிம்மதி கண்டார்கள். பிரப்பன்வலசை குமரகுருதாசரின் தவ பூமி. அவரது பிறவி இலக்கில் ஒன்று, இந்த இடத்தில்தான் நிறைவேறியது.

அதனால்தான் சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தி உபதேசம் அருளியதையும், முருகப் பெருமான் தனக்கு பிரப்பன்வலசையில் உபதேசம் செய்ததையும், ‘உயரிய ஆல் நிழற்கீழ் அரன் உரைத்ததும் ஓதெனக்கு இறை சொனதும் பயிலவொண் ணாத இத் தகரவித்தையின் முடிபாம்; அது தகரமெனும் அயிர்மலி புண்டரிக உறையுள் ஓங்கு வித்தையெனுமொர் அறிவுவெளிப் பெயர் நபம் என்றுணர்ந்து ஒளிவரைப் பெயரினன் சாமியைப் பேணுமினே’ என்று திருப்பாவில் பாடுகிறார்.

நாட்கள் மெல்ல நகர்ந்தன. பிரப்பன்வலசையிலிருந்து வந்து 15 மாதங்கள் ஓடிவிட்டன. குமரனின் நினைவோடு, வழிபாடு, தியானம் என நாட்களை நகர்த்தினார் குமரகுருதாசர். ஒரு நாள் இரண்டு இஸ்லாமியப் பெரியவர்கள் குமரகுருதாசரை தரிசிக்க வந்தார்கள். அவர்கள் முகத்தில் அதீத பரபரப்பு. ‘‘என்னவாயிற்று?’’ என்று கேட்டார் குமரகுருதாசர். அப்போது வரும் வழியில் தாழம்பூ காட்டில் தாங்கள் கண்ட காட்சியை விழி விரிய விவரிக்கத் தொடங்கினார்கள்...

‘‘ஒரு பெரிய பாம்பும் கீரிப்பிள்ளையும் வெகு நேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் கீரி பின்னடைந்து ஓடியது. பாம்பு அதைப் பார்த்த வண்ணம் இருந்தது. ‘கீரிப்பிள்ளைதான் ஓடி விட்டதே...

இந்த பாம்பு ஏன் இன்னும் நகராமல் நிற்கிறது’ என்றபடி நாங்கள் ஒரு மரத்தடியில் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் ஒரு கீரிப்பிள்ளைக் கூட்டமே வந்தது. அதில் ஒரு வெண்நிறக் கீரிப்பிள்ளையை இரண்டு கீரிகள் தோளில் தூக்கி வந்தன.

அதுதான் அந்தக் கூட்டத்தின் தலைவன் போல் இருந்தது. அந்த வெண்ணிற கீரிப்பிள்ளை, கம்பீரமாக பாம்புக்கு முன்னால் சுமார் 30 அடி தூரத்தில் நின்றது. தன் விழிகளை விரித்து பாம்பைத் தீர்க்கமாய்ப் பார்த்தது.

கீரியின் கண்களில் இருந்து தீ போன்ற ஒரு ஒளி புறப்பட்டு பாம்பைத் தாக்க, பாம்பு சுருண்டு விழுந்துவிட்டது. கீரிக்கூட்டம் வெற்றிக் களிப்போடு திரும்பி விட்டது. ஒரு கீரிப்பிள்ளைக்கு இவ்வளவு சக்தி இருக்குமா? அதுதான் சாமி ஆச்சரியம்’’ என்றார்கள்.புன்னகைத்தார் குமரகுருதாசர்.

‘‘இது வியக்கத்தக்க விஷயமில்லை. இங்கு உயர்ந்த ஞானிகள், மகான்களுக்கு இது சாதாரணமாக வாய்த்துள்ள சக்தி. சிவபெருமான் மன்மதனை நெற்றிக் கண்ணால்தானே சாம்பலாக்கினார்’’ என்று விளக்கினார். ‘ஒருமுகப்பட்ட மனதின் ஆற்றல், இறைத் தன்மையை அடைகிறது. இந்த பூமியில்தான் சகல ஜீவன்களும் முக்தியை நோக்கி நகர்கிறது’ என்பதையும் தன் ‘திட்பம்’ எனும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

மன்மத ஆண்டு ஆடி மாதம் மீண்டும் அவர் தல யாத்திரை மேற்கொண்டார். காளிமுத்துப்பிள்ளை என்கிற அன்பர் உடன்வர, திருக்குன் றக்குடி, திருப்புத்தூர், திருக்கானாப்பேரூர் தலங்களை தரிசித்துவிட்டு திருவனந்தபுரம் வந்தார். சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் வீட்டில் தங்கினார். அங்கிருந்து திருநெல்வேலி வந்தார்.

சிக்கநரசையன் என்னும் ஊரில் ஆற்றின் நடுவே அமைந்துள்ள குன்றில் அருளும் குமரனைப் பாடினார். ஆடி மாதம் 28ம்நாள் நெல்லையப்பரையும் முருகனையும் தரிசித்தவர், கோயில் சிதிலமடைந்து கிடப்பதைக் கண்டு, ‘சீருடை ஆரியனே...’ எனத் தொடங்கும் சீரிய பதிகத்தைப் பாடி, ஆலயம் பொலிவு பெற வேண்டிக்கொண்டார். அது அடுத்த ஆண்டே நிறைவேறியது.

மீண்டும் சிக்கநரசையனுக்கே திரும்பினார். அங்கே, ‘திருச்சிந்துபுரம்’ பதிகம் பாடி, திருச்செந்தூர் முருகனுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி, ‘திருக்கன்னி நாடு’ பதிகம் பாடி அருளினார். அங்கிருந்து திருக்கொடுமளூர் நகர்ந்தவர், பிரப்பன்வலசை வந்து, மீண்டும் பாம்பனை அடைந்தார். இந்த முறை பாம்பன் வந்தவருக்கு, பாம்பனை விட்டு விரைவில் விடுபட வேண்டும் என்கிற வேட்கை உதித்தது. உறவையும் ஊரையும் உதறிவிட உரிய நாள் பார்த்துக் காத்திருந்தார் குமரகுருதாசர். குகன் என்ன செய்யப் போகிறான்?

நடக்க வைத்த சுவாமிகள்!

‘‘என் மகள் ஜெய் மோஷாயினிக்கு 8 வயது. அவளுக்கு சின்ன வயதிலிருந்தே கால் பலமில்லாமல் மெலிந்திருந்தது. நடக்கச் சிரமப்படுவாள். இதனால் எங்கள் குடும்பமே வருத்தத்தில் வாடியது. சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்க்கச் சொன்னார் எங்கள் டாக்டர். நம்பிக்கையுடன் சென்னைக்கு வந்தோம். பிஸியோதெரபி மூலம் சரி செய்துவிடலாம் என்றார்கள். சிகிச்சை தொடங்கிய 4வது நாள், மகளின் எலும்பு முறிந்துவிட்டது.

மருத்துவமனை தரப்பில், ‘அறுவை சிகிச்சை செய்து ப்ளேட் வைத்துவிடலாம். கட்டணம் வேண்டாம்’ என்றார்கள். ஒரு வார சிகிச்சைக்கு வந்த நாங்கள், 2 மாதம் தங்க வேண்டிய கட்டாயம். அப்போது மருத்துவமனைக்கு வந்த ஓர் அன்பர், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகளின் அற்புதங்களைப் பற்றிச் சொன்னார். என் மகளை அழைத்துக்கொண்டு அங்கு சென்று வணங்கினோம். அங்கு வந்த ஒருவர், ஒரு சித்த மருத்துவமனைக்குப் போகச் சொல்லி வழி காட்டினார்.

அடடா, பெரிய அளவில் அலைக்கழித்த பிரச்னையை அவர்கள் சில நாட்களில் சரி செய்து எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று, எங்கள் மகள் நன்றாக நடக்கிறாள். இது பாம்பன் சுவாமிகளின் கருணை’’ என்று நெகிழ்ச்சியோடு சொல்லும் ஜெய்சங்கர் சுப்பிரமணியம், இலங்கைவாசி. மாத்தளை அருகே உள்ள களுதாவளையில் வசிக்கிறார்.

பாம்பன் சுவாமிகள் அருளிய துயர் துரத்தும்
 மந்திரம் மள்ளலே றேண்சிகி
 யிவரு மஞ்சனைஉள்ளுவோ ரோங்க
வனுணர்வு சந்ததங்கொள்ளுவீ
ராந்தக னினைவு கொண்டிடின்
தள்ளுவார் காண்கணத் தறுகண் யாவையும்

(ஒளி பரவும்)
படம்: புதூர் சரவணன்

எஸ்.ஆர்.செந்தில்குமார்