தமிழ் பேரரசன் ராஜேந்திரன்



‘பெரிதினும் பெரிது...’ - இதுதான் ராஜேந்திரனின் தந்தை ராஜராஜனின் தேடல். அந்தத் தேடல்தான், உலகையே நிமிர்ந்து பார்க்கச் செய்த கலைப் பொக்கிஷமான தஞ்சை பெரிய கோயிலுக்கு வித்திட்டது. ராஜேந்திரன், தந்தையை விடவும் பெரிது விரும்பி. அதன் விளைவுதான் கங்கை கொண்ட சோழீச்சுரம்.

இறையன்பும், சைவத்தின்பால் கொண்ட அதிதீவிர நாட்டமும், தந்தைக்கு இணையாக தாமும் ஓர் பேராலயத்தை நிர்மாணிக்க வேண்டும் என்ற தீரா வேட்கையும் ராஜேந்திரனை உந்தியது. அந்த வேட்கையின் வெளிப்பாடாக, அழியாக் கலையாய் பேரழகைப் போர்த்திக்கொண்டு பூமிப்பரப்பில் அமர்ந்திருக்கிறது கங்கை கொண்ட சோழீச்சுரம். தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கை கொண்ட சோழீச்சுரம் பெண்மையின் நளினம்.

அக்காலத்தில் கோயில்களே நிர்வாக மையங்கள். சமயம் வளர்க்கும் இடமாக மட்டுமின்றி, கலைகள் வளர்க்கவும், செல்வம் சேமிக்கவும், மக்களைச் சந்திக்கவும் கோயில்களையே மன்னர்கள் பயன்படுத்தினார்கள். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் கூடை கூடையாக அள்ளப்படும் தங்கப் பொக்கிஷங்கள் அப்படியான அரச சேமிப்பு தான். இதையறிந்தே எதிரிகள், கோயில்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்களை அள்ளிச் சென்றார்கள்.

பெரும்பாலான மன்னர்களை அவர்கள் வடித்தெடுத்த கோயில்கள்தான் சரித்திரத்தில் நிற்கச் செய்தன. மூவேந்தர்களில் எவருடைய அரண்மனையும் காலங் கடந்து நிற்கவில்லை. ஆனால் கோயில்கள் எல்லா இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு சிதிலமற்று நிற்கின்றன என்றால், தங்கள் வாழிடங்களை விட அரசர்கள் கோயில்களை பலமாகவும், கவனமாகவும் வடித்தெடுத்தார்கள்.

தஞ்சை பெரிய கோயிலின் பிரமாண்டம் வியப்பென்றால், கங்கை கொண்ட சோழீச்சுரத்தின் பெருமை மிகு அடையாளம், அதன் பேரழகு. கற்களால் வரையப்பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்த்தெடுத்திருக்கிறான் ராஜேந்திரன். கோயிலின் முகப்பில் நிற்கையில், நம் மனதில் பெருமிதம் ததும்புகிறது. 

இந்தக் கோயிலைக் கட்டிய சிற்பி, குணவன். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜாராஜ சுந்தரமல்லப் பெருந்தச்சனின் மாணவன். தினமொரு யோசனை சொல்லி தன்னை அசர வைத்த குணவனுக்கு ‘நித்த வினோதப் பெருந்தச்சன்’ என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தான் ராஜராஜன். அந்த நித்த வினோதன்தான் கங்கை கொண்ட சோழீச்சுரத்தின் தலைமைச் சிற்பி. இலத்திச் சடையன், சீராளன் போன்ற புகழ்பெற்ற சிற்பிகளும் இக்கட்டுமானத்தில் பங்களிப்புச் செய்துள்ளனர்.

86க்கு 86 அடி அடிபீடமிட்டு 214 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டது தஞ்சைப் பெரிய கோயில். தன் தந்தை கட்டியெழுப்பிய அந்தப் பெருங்கோயிலைக் காட்டிலும் பெரிதாகக் கட்டுவதே ராஜேந்திரனின் திட்டம். அந்த நோக்கில் 100க்கு 100 அடியில் அடிபீடம் உருவாக்கப்பட்டது.

ஆயினும் 186 அடியே கோபுரம் உயர்த்தப்பட்டது. திட்டமிட்டபடி உயரம் அதிகரிக்கப்படாமைக்கு காரணம் தெரியவில்லை. ஆனால் உள்ளிருக்கும் சோழீஸ்வரர், தஞ்சை பிரகதீஸ்வரரைக் காட்டிலும் பிரமாண்டமானவர். 13 அடி 3 அங்குலம் உயரம். ஒன்பது முழ அங்கவஸ்திரத்தால் இறைவனின் உடல் போர்த்துகிறார்கள். 11.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோயில் கட்டுமானத்துக்கான கற்கள், பெரம்பலூருக்கு அருகில் உள்ள சிற்றளி, பேரளி கிராமங்களில் உள்ள மலைகளில் இருந்து பெயர்த்துக் கொண்டு வரப்பட்டுள்ளன. 

தஞ்சை பெரிய கோயில் நான்கு பக்க கோபுர விமான அமைப்பைக் கொண்டது. கங்கை கொண்ட சோழீச்சுரம் எண்பக்க வடிவ திராவிட கட்டிடக்கலை நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் சிற்பங்கள் அனைத்தும், சைவத் திருமறைகள் சொல்லும் செய்திகளைக் காட்சிப்படுத்துகின்றன. தாம் வென்ற நாடுகளிலிருந்து வெற்றிச் சின்னங்களாகக் கொண்டு வரப்பட்ட பிரதான சிற்பங்களை இக்கோயிலில் நிறுவியுள்ளான் ராஜேந்திரன்.

சாளுக்கியத்திலிருந்து கொண்டு வந்த 20 கரங்கள் கொண்ட துர்க்கை, ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சூரியனை தாமரை வடிவில் சித்தரித்து, சுற்றிலும் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இச்சிற்பத்தை போன்ற வடிவம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை.

இக்கோயில் கட்டுமானப்பணி நிறைவுற்ற காலத்தில் ராஜேந்திரனின் படை கங்கையைக் கடந்து வெற்றிவாகை சூடியது. அங்கிருந்து பொற்குடங்களில் கொண்டு வரப்பட்ட கங்கை நீரைக்கொண்டே இக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கங்கை கொண்ட சோழீச்சுரத்தின் சிறப்புகள் பற்றி அதன் நிழலிலேயே திளைத்துக் கிடக்கும், ராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாண்டு விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோமகன் சொல்லும் செய்திகள் சிலிர்ப்பூட்டுகின்றன.  

‘‘இங்குள்ள ஒவ்வொரு சிற்பத்திலும் ஒவ்வொருவித தனித்தன்மை. சிற்ப சாஸ்திரம் குலையாமல் வடிவமைக்கப்பட்ட தில்லை ஆடவல்லான் சிற்பம் கலையின் உச்சம். முப்பரிமாணத்தில் எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்த்து புன்னகைத்தவாறே உலகையளந்து நிற்பதைப் பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கிறது. இங்கிருக்கும் நர்த்தன விநாயகர் தன் ஏழு பாகங்களிலும் ஏழுவிதமான ஒலி எழும்புகிறார்.

அர்த்த நாரீஸ்வரர் சிற்பத்தின் நளினம் வியக்க வைக்கிறது. அச்சிற்பத்தில் உயிர்ப்பும் உணர்ச்சியும் ததும்புகிறது. கருவறையின் உள்ளே சுற்றுப்புற பிரகாரத்தில் கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்குமாறு சந்திர காந்தக் கற்கள் கொண்டு வடிவமைத்துள்ளார்கள்.

சிற்பக்கலையின் உச்சமென இக்கோயிலை அடை யாளம் காட்டலாம்...’’ என்கிறார் அவர். மொகலாயர் படையெடுப்பில் இக்கோயில் தாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இதை அரசு அலுவலகங்களாக உபயோகித்துள்ளார்கள்.

 தவிர ராணுவ கேந்திரமாகவும் இருந்துள்ளது. இதன் மகத்துவம் உணராத ஆங்கிலேய அதிகாரிகள், கோயிலின் முதல் திருச்சுற்று மதிலையும் இரண்டாம் திருச்சுற்று மதிலையும் பெயர்த்து, அக்கற்களைக் கொண்டு அணைக்கரை பாலத்தையும், வெள்ளாற்று குறுக்குப் பாலத்தையும் கட்டியுள்ளார்கள்.

தஞ்சை பெரிய கோயிலையும் கங்கை கொண்ட சோழீச்சுரத்தையும் இணைத்துச் சொல்லும் சர்ச்சை ஒன்றுண்டு... ‘ராஜராஜ னுக்கு ஒரு பழக்கம். அவன் மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளானால் அரண்மனைக்குள் நுழைய மாட்டான்.

சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்து பேரரசர்களாக உயர்ந்த ராஷ்டிரகூடர்களை வெல்ல முடியாத வருத்தம் ராஜராஜனுக்கு இருந்தது. ‘அவர்களை வென்று அவர்களின் தலைநகரான மாணியகேடத்தை (இப்போது மால்கட்) அழித்தால்தான் அரண்மனைக்குள் வருவேன்’ என்று வெளிச் சென்று தங்கிவிட்டான் ராஜராஜன். தந்தையின் மனத்துயரம் அறிந்த ராஜேந்திரன், படை திரட்டிச் சென்று ராஷ்டிரகூடர்களை வென்று மாணியகேடத்தை தீக்கிரையாக்கி விட்டு வந்து தந்தையை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். 

அதைப்போல, ராஜராஜனின் கனவாக இருந்த பெரிய கோயில் கட்டுமானப்பணிகள், பிரதிஷ்டை அனைத்தும் நிறைவுற்றபிறகு ‘மூலவர் பிரதிஷ்டை ஆகமப்படி சரியாக அமையவில்லை’ என்று சமயப் பெரியவர்கள் ராஜராஜனிடம் முறையிட்டனர். இதனால் மனம் வருந்திய ராஜராஜன், அரண்மனைக்குள் நுழைய விருப்பமின்றி வெளியில் தங்கினான். போர் என்றவுடன் படைநடத்தும் திறன் பெற்ற ராஜேந்திரனுக்கு தந்தையின் இந்த மனவருத்தத்தை தீர்க்க முடியவில்லை.

‘இதைப் போலவே ஒரு பெருங் கோயில் கட்டி உங்கள் மனத்துயர் போக்குவேன்’ என்று தந்தைக்கு உறுதியளித்தான். அதை ஏற்று ராஜராஜன் அரண்மனைக் குள் நுழைந்தான். ஆனால் ராஜராஜன் இருந்தவரை அது கைகூடவில்லை. அவன் மறைவுக்குப் பிறகு பெருவலிமை பெற்ற அரசனாக அரியணை ஏறி புதியதொரு தலைநகரை உருவாக்க முனைந்தபோது, தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே கங்கை கொண்ட சோழீச்சுரத்தை ஆகமம் சிதையாமல் வடித்தெடுத்தான் ராஜேந்திரன்.

முதலில் தந்தை உருவாக்கிய பெரிய கோயிலை விடவும் பெரிதாகக் கட்ட திட்டமிட்ட ராஜேந்திரன், பிறகு தந்தைக்குச் செய்யும் மரியாதையாக தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்’ என்று சில வரலாற்றாசிரியர்களும், ஆன்மிகப் பெரியவர்களும் சொல்கிறார்கள். சோழர் மரபை உச்சத்தில் ஏற்றிய கங்கை கொண்ட சோழனின் இறுதிக் காலத்தை அடுத்த வாரம் தரிசிக்கலாம்... 

வெ.நீலகண்டன்