இணையக் குற்றங்களுக்கு குண்டர் சட்டம்!



கருத்து சுதந்திரத்தை முடக்கும் முயற்சியா?

வன்செயல் புரிபவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், தாதாக்கள் மற்றும் கூலிப்படையினரைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதே குண்டர் தடுப்புச் சட்டம். தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, பல்வேறு குற்றப்பின்னணியோடு இருக்கும் ஒருவர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என்று சந்தேகப்பட்டாலோ, அவரை விசாரணையின்றி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம்.

இந்த சட்டத்தை பாலியல் குற்றங்கள், இணையக் குற்றங்களுக்கும் நீட்டித்திருக்கிறது தமிழக அரசு. அதன்படி, ஒருவர் ஒரேயொரு குற்றச்செயலில் ஈடுபட்டால் கூட அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம். வங்கிப் பரிவர்த்தனைக் குற்றம் முதல், ‘சில வகை’ இணையதளப் பதிவுகள் வரை அனைத்தும் இணையக் குற்றங்களாக கருதப்படும்.

இச்சட்டம் பிளாக்கர்கள், சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. ‘‘கருத்து சுதந்திரத்தை நசுக்கும் ஆயுதமே இது’’ என்று குமுறுகிறார்கள் பலர். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் தீவிரமாக இயங்கும் சிலரிடம் இச்சட்டம் பற்றிப் பேசினோம்...

*ஜெயந்த் பிரபாகர்


இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள தனிமனித உரிமையை பறிக்கும் அப்பட்டமான அத்துமீறலே இந்தச் சட்டம். கடும்குற்றம் புரிந்தோருக்கு விதிக்கப்படும் ஒரு சட்டத்தை இணையப் பதிவர்களிடம் காட்டி மிரட்டுகிறது அரசு. விமர்சனங்களைப் பொறுக்க முடியாமல்தான் இப்படியான சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பல ஆக்கபூர்வமான வேலைகள் நடக்கின்றன. அரசு செய்யும் நல்ல பணிகளை இளைஞர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது இந்த வலைத்தளங்கள்தான்.

நான்கூட கடந்த வாரம், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் வந்தால் மிகவும் நல்லது’ என்று ஒரு பதிவு எழுதினேன். ஆக்கபூர்வமான விவாதம் நடந்தது. நாசா முதல் காஸா வரை எல்லா விஷயங்களும் இங்கே அலசப்படுகின்றன.

இந்த சட்டத்தால் பதிவர்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது. சாதாரணமாக கருத்துச் சொல்லக்கூட பலர் அஞ்சுகிறார்கள். யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு கொடுஞ்சட்டத்தை பொதுவெளியில் பிரயோகிப்பது நல்லதல்ல.

*கவிஞர் மனுஷ்ய புத்திரன்

குண்டர் தடுப்புக்காவல் சட்டம் என்பதே நீதிமன்ற நடைமுறைகளை மீறிய ஒரு ஜனநாயக விரோத சட்டம். இது காவல்துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் நூறில் 99 பேர், பின்பு ‘நிரபராதிகள்’ என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை மனித உரிமையை இந்தச் சட்டம் மீறுகிறது.

இணையக் குற்றங்களைப் பொறுத்தவரைக்கும் ஏற்கனவே கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் பல பிரிவுகள் பழி வாங்கும் நோக்குடன் பயன்படுத்தக்கூடியதாகவும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கக்கூடியதாகவும் இருக்கின்றன.

இணையக் குற்றத்துக்கான ‘66-ஏ’ சட்டப்பிரிவில், இணையக் குற்றம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அனுமதி தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்று எங்களைப் போன்றவர்கள் கோரி வருகிறோம். இருக்கிற சட்டமே ஏற்கனவே துஷ்பிரயோகம் செய்யப்படுகிற சூழலில், அதைவிடக் ஒரு கொடூரமான சட்டத்தைக் கொண்டு வருவது இன்னும் ஆபத்தானது.

குண்டர் தடுப்புச் சட்டம் என்பதே மீண்டும் மீண்டும் தவறு செய்யக்கூடிய தொழில்முறை குற்றவாளிகளைத் தடுத்து வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம். ஆனால் ‘முதல் முறை ஒருவர் தவறு செய்தாலே அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்’ என்று சொல்வது இந்த சட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

 அப்படியென்றால் ஏற்கனவே உள்ள சட்டங்கள் செயலிழந்து விட்டனவா? ஏன் அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை? இணையக் குற்றங்களைத் தடுக்கும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப அறிவும் அமைப்பும் நம் காவல்துறைக்கு இருக்கிறதா? இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளைத்தான் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

*உமா பார்வதி

இந்தச் சட்டத்தால், விவாதங்களில் ‘லைக்’ போடக் கூட அச்சமாக இருக்கிறது. சுதந்திர நாட்டில் மக்கள் தங்கள் கருத்துகளை அழுத்தமாக எடுத்து வைக்க முழு உரிமை உண்டு. அந்த உரிமையைப் பறிப்பது மனித உரிமை மீறல். 2011 முதல் சமூக வலைத்தளங்களில் இயங்குகிறேன். மிகப்பெரும் மாற்றங்களை சமூக வலைத்தளங்கள் உருவாக்கியுள்ளன. நிறைய இளைஞர்கள் விவாதிக்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்கள் பேசப்படுகிறது. குறிப்பாக ஏராளமான பெண்கள் வந்திருக்கிறார்கள்.

அரசின் திட்டங்கள், அரசியல்வாதிகளின் போக்குகள் பற்றியெல்லாம் பேசப்படுகிறது. சிலர் எல்லை மீறலாம். அவர்களையும் இவ்வளவு கடுமையாக தண்டிக்கத் தேவையில்லை. ஏற்கனவே பல சட்டங்கள் இருக்கின்றன. அரசியல் சார்ந்த ஒரு விஷயத்தை அதே கண்ணோட்டத்தில் அணுகாமல், ஒரு கடுமையான சட்டத்தின் மூலம் அணுகுவது, வாயடைக்கும் முயற்சி. ஜனநாயக நாட்டுக்கு இது சரிப்படாது.

*தமிழ்ப்பெண் விலாசினி

இணையக் குற்றம் என்பதற்கு இதுவரை எந்த அளவுகோலும் தீர்மானிக்கப்படவில்லை. ஏற்கனவே குண்டர் சட்டம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்கிறோம். இணையக் குற்றம் என்ற பெயரில் சமூக வலைத்தளப் பதிவுகளையும் சட்டத்துக்குள் உள்ளடக்கியிருப்பது அச்சத்தை உருவாக் குகிறது. உலகெங்கும் மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் வெளிப்படுத்தவே சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில்தான் அது நசுக்கப்படுகிறது.

ஏற்கனவே மும்பையில் ஒரு அரசியல் தலைவரைப் பற்றி எழுதிய பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்கள். மேற்கு வங்கத்தில் கேலிச்சித்திரம் போட்ட ஒரு பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழக அரசும் அதுமாதிரியான ஒரு சூழலை நோக்கித்தான் செல்கிறதா?

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் வாய் திறக்க முடியாத அளவுக்கு அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. வலைத்தளங்களின் குரலையும் நசுக்கி விட்டால் விமர்சனங்களே எழாது என்று எண்ணு கிறார்களா? அரசு சகிப்புத்தன்மையோடு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். மிரட்டக் கூடாது.  

*சிவ சிவா

அன்னா ஹசாரேவின் போராட்டமாகட்டும், நிர்பயா பாலியல் வன்முறை சம்பவமாகட்டும்... அப்போதான மிகப்பெரும் மக்கள் எழுச்சிக்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்தான். மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததற்கும், பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்ததற்கும் பின்னணியில் சமூக வலைத்தளங்களுக்கு கணிசமான பங்கு உண்டு. இவ்வளவு வலிமை மிகுந்த ஊடகத்தை ஒரு சட்டத்தின் மூலம் முடக்க முனைவது சரியல்ல. இணையக் குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

ஆனால் அதை வேறு தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்க முடியும். ரவுடிகளுக்கும், மாபியாக்களுக்கும் பயன்படுத்துகிற ஒரு சட்டத்தை இணையக் குற்றங்களுக்கு பயன்படுத்துவது நியாயமல்ல. இந்த சட்டம் வந்தபிறகு பெண்கள் பேசவே அஞ்சுகிறார்கள். அண்மைக்காலமாக டாஸ்மாக் பற்றி வலைத்தளங்களில் பெருமளவு விவாதிக்கப் படுகிறது. ‘அம்மா திட்டங்கள்’ பற்றியும் கடும் விமர்சனங்கள் எழுகின்றன. அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளமுடியாமல்தான் குண்டர் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். சர்வாதிகார நாடுகளில் கூட இப்படியான நிலை இல்லை.

*சுமி சுமா

இளைஞர்களின் குரலை நெறிக்கும் முயற்சி இது. அரசு நிர்வாகத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் எழுத முடியாது என்கிற ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்க முனைகிறது அரசு. சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் தனிமனித தாக்குதலில் ஈடுபடலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மாற்றுக் கருத்தில்லை. குண்டர் சட்டத்தை ஏவும் அதிகாரம் காவல்துறையின் கையில் இருப்பதால், யாரின் மீதும் அதை பிரயோகிக்கலாம். ஆளுங்கட்சிக்கு எதிராக எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்க முடியாது.

குண்டர் தடுப்பு சட்டத்தைக் காட்டி மிரட்டுவதை விடுத்து சைபர் க்ரைம் துறையை வலுப்படுத்தலாம். எனக்குத் தெரிந்து ஏராளமான புகார்கள் சைபர் க்ரைமில் உறங்குகின்றன. வெளிநாடுகளில் சைபர் குற்றங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதைப் போன்றதொரு நிலையை இங்கே உருவாக்க வேண்டும். அதை விடுத்து, கருத்து சுதந்திரத்தை முடக்கி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை மிரட்டக் கூடாது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் நூறில் 99 பேர், பின்பு நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- வெ.நீலகண்டன்