ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



நடிகை ஹிலாரி டஃப், தனது கணவர் மைக் காம்ரியை பிரியப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே ஹிலாரியின் முன்னாள் காதலர் ஆரோன் கார்ட்டர் பரவசமாகி விட்டார். ‘‘என் பழைய தவறுகளை எல்லாம் திருத்திக் கொள்கிறேன். என்னை ஏற்றுக் கொள்’’ என ஹிலாரிக்கு தூது விட்டிருக்கிறார்.

கிரிக்கெட்டர் ஷேன் வார்னேவின் முன்னாள் காதலி எலிசபெத் ஹர்லி தன் முத்தத்தை ஏலம் விட்டார். எய்ட்ஸ் சிகிச்சைக்காக இயங்கும் ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டவே இந்த ஏலம். ஜூலியன் பார்தி என்பவர் 49 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க, ஒரு பெரிய அரங்கில், பலர் முன்னிலையில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டு பணத்தை வசூலித்தார்.

கங்கணா ரனாவத் முதன்முதலாக ஒரு குறும்படம் இயக்கியிருக்கிறார். ‘தி டச்’ என்ற அந்தப் படம் ஒரு நாய்க்கும் நான்கு வயது சிறுவனுக்குமான பிணைப்பைப் பற்றியது. அமெரிக்காவில் திரைக்கதை பயிற்சி எடுத்த பிறகு அவரின் முதல் முயற்சி இது. ‘‘அடுத்தது சினிமாதான். ஆனால் சீரியஸான கலைப்படமெல்லாம் இல்லை. கமர்ஷியல் ஹிட்டாக ஒரு ரொமான்டிக் காமெடி’’ என்கிறார் கங்கணா.

தியா மிர்ஸா தனது திருமணத் தேதியை அறிவித்து விட்டார். அக்டோபர் 18ம் தேதி திருமணம். அதன்பின் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு படத் தயாரிப்பில் இன்னும் தீவிரமாக இறங்கப் போகிறாராம். ‘‘சில ஆண்டுகள் தயாரிப்பில் அனுபவம் சேகரித்துக் கொண்டு இயக்குனர் ஆவதே லட்சியம்’’ என்கிறார் தியா.

‘ஃபைண்டிங் ஃபேன்னி’ படம் செம கலெக்ஷன் அள்ளுவதோடு, ஹீரோயினாக கனமான ரோலில் நடித்த தீபிகா படுகோனேவுக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. டைரக்டர் ஹோமி அடாஜானியாவிடம் முதலில் இந்தக் கதையைக் கேட்டது சோனம் கபூர். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. ப்ரீமியர் ஷோவில் படம் பார்த்தவர், தீபிகாவை பாராட்டித் தள்ளி விட்டார். சோனமுக்கும் தீபிகாவுக்கும் சண்டை என செய்திகளைப் படித்தவர்கள் எல்லாம் ஷாக்கில் உறைந்தார்கள் அந்தக் கணத்தில்!