மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன்
சுவாமிகள் என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?
மழலையாய் கேட்கிறது குழந்தை!
கைவிரித்துக் காட்டுகிறேன்.
போதவில்லை அதற்கு....
வாரி அணைத்து
நெற்றியில் முத்தமிட்டு
உச்சி முகர்ந்தபின்
குழந்தை கேள்வியைத் தொலைத்திருந்தது...
அப்போது புரிந்தது உலகில்
அனைத்தையும் வார்த்தையால்
சொல்லிவிட முடியாது என்று!

ஆம்! வார்த்தை செயலிழந்து நிற்கும் தருணங்களில் எல்லாம் ஒரு சின்ன ஸ்பரிசம் அத்தனையையும் சொல்லி முடித்துவிடுகிறது. ‘ ‘சிதம்பரம் செல்’ என்கிற உத்தரவு வந்த நொடிப்பொழுதில், முருகன் என்னுடன் இருக்கிறானா?’ என்கிற தவிப்பு எட்டிப் பார்த்தது.கேட்பவர், கொடுப்பவர் என்கிற எல்லையைக் கடந்து, நீயே எல்லாம் எனக்கு என்று சரணாகதியான பிறகு நினைவு... விருப்பம்... தேவை எல்லாம் தானாகவே இருவருக்கும் பொதுவாகிறது.குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்று உணர்ந்து உணவூட்டும் தாயுமாகிறான் இறைவன்.

பிறகு ஏன் தவிப்பு?

இது மனித இயல்பு... மனிதனாகப் பிறந்துவிட்டதாலேயே தனக்குப் பிடித்தது எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்கிற தீவிரத்தால்! தெருவில் விளையாடும் குழந்தை ஓடி வந்து வீட்டுக்குள் எட்டிப் பார்த்து, ‘‘அம்மா... அம்மா...’’ என்று கூப்பிடும். வெளியில் வந்து, ‘‘என்னடா வேணும்’’ எனக் கேட்கும் தாயிடம், ‘‘ஒண்ணுமில்ல...’’ எனச் சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஓடிவிடும் குழந்தை. அன்னையின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வது மட்டுமே குழந்தையின் நோக்கம்.

பெற்றவளுக்குப் புரியும் பிள்ளையின் பாசம். குகனுக்கும் தெரியும், குமரகுருதாசரின் அன்பு. பாம்பன் சுவாமிகளின் தவிப்பைத் தணிக்க முடிவெடுத்தான் முருகன். அது அந்தி வேளை.
பாம்பன் சுவாமிகள் கண் மூடி அமர்ந்திருந்தார்.

முருகன், மெல்ல அவர் மனதுள் நுழைந்தான். ‘‘உன்னிடம் உரிமையாய் கோபம் கொண்டு பழநிக்கு வராதே என்றேன் அல்லவா? இதோ பார், பழநியே உன்னிடம் வந்திருக்கிறது. மனம் திற’’ எனச் சொல்ல, ஒரு ஞான உலகம் விரிந்தது.

பழநியாண்டவர் ராஜனாய் நின்றார். ஆண்டியாய் அழகு காட்டினார். மெல்லிய தீப ஒளியில் மேல் நோக்கி வளைந்த இதழ் சிரிப்பு இதயம் திருடியது. உனக்கு மட்டும் ரகசியம் என்பதாய் தன் பின்னந்தலை சின்னக் குடுமியைக் காட்டிச் சிரித்தார். பாம்பன் சுவாமிகள் பேரானந்தக் கடலில் களித்தார். தீரா தாகம் தீர்ந்த திருப்தியில் திளைத்தார்.

‘‘உணவு போல போதுமென்ற திருப்தி என்னிடம் எழுவதே இல்லை. உன் அண்மை எனக்கு எப்போதும் தேவையாய் இருக்கிறது. உன்னைப் பார்க்கத் தவிக்கும் தருணங்களில் எல்லாம் காற்றில் கை வீசி தேடுகிறேன், நீ இருக்கிறாயா, இல்லையா என! எப்போதும் என்னோடு இரு. இது தவிர எனக்கு வேறெதுவும் வேண்டாம்’’ என முருகனைக் கட்டிக் கொண்டு கண் கலங்கினார்.

‘‘குமரகுருதாசரே... நொடிப்பொழுதும் உன்னை நீங்க மாட்டேன். இதோ நீ இப்போது உணரும் வாசனையே நான். இந்த வாசனை என் இருப்பை உனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். அச்சமே இல்லாமல் இரு. நானே நீயானாய் என்கிற நம்பிக்கையோடு இரு!’’ என உறுதி தந்தார். உலகின் உச்சபட்ச திருப்தியோடு குமரனின் பாதங்களில் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்தார் பாம்பன் சுவாமிகள்.அந்த இடத்தில் விபூதியும் தாமரைப் பூக்களும் கலந்த ரம்மியமான வாசனை நிறைந்தது.

கண் திறந்த பாம்பன் சுவாமிகள் புத்துணர்வோடு சிதம்பரம் புறப்பட்டார். வாசனை கூடவே வந்தது. சிதம்பரம். தில்லை மரக்காடு. ஒலியும் ஒளியும் சேர்ந்து ஈசன் நடத்தும் ஆனந்த நடனம்தான் இந்த பிரபஞ்சம் என்று உணர்த்தும் புண்ணிய பூமி. எல்லையே இல்லாது, எல்லாமுமாக நிறைந்திருக்கும் இறைவனை ஆகாயமாகக் காணும் இடம்.
ஏன் ஆகாயமாகக் காண வேண்டும்?

முடிவின்மை. எந்த இடத்தில் தொடங்கியது, எங்கு நிறைவடையும் என்கிற வரையறை இல்லை. பூரணம்... இந்த ஆகாயம் இதயத்தில் தோன்றிவிட்டால் அதுதான் பேரின்பம். அந்த இடத்தில் ஈசன் மலர்ந்து ஆனந்த நடனமாடுவான் என்று சொல்லும் தலமிது. பாம்பன் சுவாமிகள் சிதம்பரம் மண்ணை மிதித்த கணத்தில் இப்படி பல விஷயங்கள் அரும்பிப் பூத்தன. அப்போது அலகிலா விளையாட்டுடையானின் பாதமே கதி என வாழ்ந்த ஒரு பக்தனின் வாழ்க்கை அவர் மனதில் விரியத் தொடங்கிது.

திருநீலகண்டர் தன் வீட்டு வாசலில் அமர்ந்து ஒரு மூங்கில் கழியால் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருந்தார். அவர் கைகள் பட்டு களிமண், பானையாய் மாறிக் கொண்டிருந்தது. மனசு மட்டும் சதா சிவநாமம் சொல்லிக் கொண்டே இருந்தது. அவர் அருகே இருந்த சிறிய மூங்கில் கழிக்குத் தெரியாது, பிரபஞ்சம் உள்ளவரை தாம் பேசப்படப் போகிறோம் என்று! சிதம்பரம் நகரில் திருநீலகண்டர் வெகு பிரசித்தம்.

தொழில் பானை செய்வது என்றாலும், அசாதாரண சிவபக்தர். அமுதம் கடைந்தபோது உலகைக் காக்க தாயுள்ளத்தோடு நஞ்சுண்ட ஈசனின் பெருமையையும், நாதனை நஞ்சு பாதித்துவிடக் கூடாதே என தவித்துத் தடுத்த பார்வதி யின் அன்பையும் சிலாகித்துப் பேசுவார். அதனாலேயே அடிக்கடி, ‘திருநீலகண்டம்... திருநீலகண்டம்...’ என்பார்.

‘‘திருநீலகண்டம்’’ என கம்பீரமாய் அழைத்தது ஒரு குரல். நிமிர்ந்து பார்த்தார் திருநீலகண்டர். ஒரு சிவயோகி கையில் திருவோட்டோடு நின்றிருந்தார். திருநீலகண்டர் அந்த சிவயோகியை வணங்கினார். திருநீலகண்டரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, ‘‘இதை பத்திரமாக வைத்திரு. பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன். இது சாதாரண திருவோடல்ல. ஆயிரம் பொன் கொடுத்தாலும் இதற்கு ஈடு ஆகாது’’ என்றார். ‘‘உத்தரவு சுவாமி’’ என்றார் திருநீலகண்டர். காலம் ஓடியது.

திடீரென ஒருநாள் சிவயோகி திரும்ப வந்தார். ‘‘நான் கொடுத்த திருவோட்டைக் கொண்டு வா’’ என்றார். உள்ளே சென்று வைத்த இடத்தில் பார்த்தார் திருநீலகண்டர். திருவோடு இல்லை. ‘‘காணவில்லை ஐயா! வேறொரு திருவோடு தருகிறேன்’’ என்று கை பிசைந்து நின்றார். ‘‘அதெல்லாம் முடியாது. அதன் மகிமையை நான் உனக்கு முன்னரே சொன்னேனே! நீ ஏமாற்றுகிறாய். உன் மகனைக் கூப்பிடு. திருவோடு காணவில்லை என அவன் மீது சத்தியம் செய்’’ என்றார் சிவயோகி. ‘‘எனக்கு வாரிசு இல்லை, சுவாமி.’’ - பதில் சொன்னார், திருநீலகண்டர்.காரணம் கேட்டார் யோகி! மௌனமாய் நின்றார் நீலகண்டர்.

‘‘சரி, உன் மனைவியின் விரல் பிடித்து திருக்கோயில் குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியம் செய்’’ என்றார் சிவயோகி. அந்த மூங்கில் கழியோடு வெளியே வந்தார் திருநீலகண்டர்.‘‘இது எதற்கு?’’
‘‘மனைவியை அவள் அனுமதி இல்லாமல் தொட மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். அதனால்தான் இது!’’ நம்ப மறுத்த சிவயோகி, பிரச்னையை தில்லை மூவாயிரம் பேர் சபைக்குக் கொண்டு சென்றார்.

அவர்களும் விசாரித்தனர். இனியும் மறைக்க முடியாதென முடிவு செய்த திருநீலகண்டர், ‘‘இது நாற்பது வருட பிணக்கு. புத்தி கெட்டு ஒரு நாள் தாசி வீட்டுக்குச் சென்றேன். அதனால் கோபமான என் மனைவி, ‘நீலகண்டத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்மைத் தீண்ட வேண்டாதீர்’ என்று கூறினாள்.

அன்று முதல் என் மனைவியையோ, வேறு எந்த ஒரு பெண்ணையோ நான் தீண்டுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன். அதனால்தான் இந்த மூங்கில் கழி’ என்றவர், மூங்கிலின் ஒரு முனையை அவரும் மற்றொரு முனையை மனைவியும் பற்றிட குளத்தில் மூழ்கி எழுந்தனர்.

முதியவர்களாய் மூழ்கியவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய இளமையோடு எழுந்தனர்! சிவயோகி மறைந்து சிவனே உமையோடு தோன்றி, புலனடக்கத்திற்கும் பக்திக்கும் உதாரணமாய்த் திகழ்ந்த நீலகண்ட நாயனாரையும் அவரது மனைவியையும் வாழ்த்தினர். தில்லைவாழ் அந்தணர்கள் கரம் தூக்கி ஈசனையும் நீலகண்ட நாயனாரையும் வணங்கினர். அந்த மூங்கில் இதோ இன்றும் பேசப்படுகிறது!


பாம்பன் சுவாமிகளும் ‘திரு நீலகண்டம்... திருநீலகண்டம்...’ என முணுமுணுத்தார். மெல்ல ஆலய வலம் வந்து நடராஜப் பெருமானையும் சிவகாமி அம்மையையும் கண்குளிர தரிசித்தார். ‘இங்கு நாம் செய்ய வேண்டிய வேலை என்ன’ என யோசித்தபோது, ‘‘குயவன் பேட்டை போ’’ என்றான் குகன். எங்கே இருக்கிறது? எப்படிப் போவது?

பாம்பன் சுவாமிகள் தரிசனம் சிதம்பரம்


பாம்பன் சுவாமிகள் சிதம்பரம் வந்தபோது அவரது சீடரானார், நைனா சுவாமிகள். பாம்பன் சுவாமிகள் முக்தி அடைந்த பிறகு அவர் தங்கியிருந்த இடத்தை வாங்கி, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பெயரில் மடாலயம் அமைத்தார் நைனா சுவாமிகள்.

தற்போது வெகு சிறப்பாக இந்த மடாலயம் இயங்கி வருகிறது. அவரது மகன் டாக்டர் பசுபதி, மடாலயத்தை நிர்வகித்து வருகிறார். இந்த ஆலயத்தின் பௌர்ணமி வழிபாடும், அப்போது தரப்படும் தீர்த்தமும் வெகு பிரசித்தம். இது தீராத நோய் எல்லாம் தீர்க்கும் என்பது பக்தர்களின் அனுபவம்.முகவரி: ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடாலயம், 86/1, சபாநாயகர் தெரு, (சிதம்பரம்-மயிலாடுதுறை சாலை) சிதம்பரம் - 608 001. தொடர்புக்கு: 94431 16288 / 75022 75159 / 04144 224067.

என் தந்தை பாம்பன் சுவாமிகள்

‘‘நான் அரசு ஊழியனாக 1970ல் சென்னைக்கு வந்தேன். இங்கு அடுத்த ஆண்டே என் தாயார் மறைந்தார். சின்ன வயதிலேயே தம்பியையும் தங்கையையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு. திக்குத் தெரியாத நான் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதிக்குச் சென்று அழுதேன். அடுத்த சில மாதங்களிலேயே தங்கைக்கு திருமணம் முடிந்தது. மாப்பிள்ளையின் சொந்த ஊர் பாம்பன். என் உடன் பிறந்தோருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு நானும் திருமணம் செய்துகொண்டேன்.

சொந்த வீடு கட்டி திருமுல்லை வாயிலில் குடியேறினேன். ஒரு ரவுடிக் கூட்டம் குடித்துவிட்டு ஒரு தம்பதியரை அடித்து துவம்சம் செய்தபோது தட்டிக் கேட்ட என்னையும் அடித்து நொறுக்கியது. உதவிக்கு யாருமில்லை. அப்போது பைக்கில் வந்த ஒரு இளைஞன் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினான். அது முருகனே!’’ என நெகிழும் முகவை ரா.ரகுபதி, ‘‘பெற்றோர் இல்லாத எனக்கு பாம்பன் சுவாமிதான் தகப்பன்’’ என்று உருகுகிறார்.

எல்லாம் தரும் குரு மந்திரம்

‘ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ’

இந்த நாமம் மிகவும் சக்தி வாய்ந்தது. பாம்பன் சுவாமிகளை குருவாக ஏற்றுக்கொண்டு, தீவிர நம்பிக்கையோடு இந்த நாமத்தை எந்நேரமும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கற்பக விருட்சம் போன்று இது வேண்டியதை எல்லாம் தரும்!

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்