முடிஞ்சவரை நடிக்காம இருந்திருக்கேன்!



கார்த்தி

‘‘ஹாய், ஈவினிங் சிக்ஸ்... ஓகே?’’ - புன்னகையுடன் அலைபேசினார் கார்த்தி. முதல் படத்திலேயே புருவம் உயர்த்த வைத்து அசத்திய கலைஞன். சிறு தூறல் குளிப்பாட்ட, குளிர் காற்று தாலாட்ட... அவர் வீடு போய்ச் சேர்ந்தபோது தேநீரில் ஆரம்பித்து கிடைத்தது அவரது ‘மெட்ராஸ்’ படத்தின் முழு நீள சித்திரம்.

‘‘ ‘மெட்ராஸ்’ எனக்காக எழுதின கதையில்ல. ஆனா, ஸ்கிரிப்ட்டை படிச்சுப் பார்க்கும்போது மனசுக்கு நெருக்கமா வந்துச்சு. அன்பும், கோபமும், எளிமையும், உண்மையுமா வாழுற வட சென்னை மக்களின் வாழ்க்கையைப் பேசுற படம். ‘இதில் நான் இருந்தா எப்படியிருக்கும்?’னு டைரக்டர் பா.ரஞ்சித்கிட்ட கேட்டப்போ, அவரும் சந்தோஷமா சம்மதிச்சார். விளைவு, இதோ பார்க்கப் போற ‘மெட்ராஸ்’ ’’ -கிரிஸ்டல் கிளியராகப் பேசுகிறார் கார்த்தி.

‘‘யதார்த்த வகையைச் சேர்ந்தது பா.ரஞ்சித்தின் ஸ்டைல். ‘மெட்ராஸ்’ பார்க்க எப்படி தயாரிப்போட வரணும்?’’‘‘வட சென்னையைப் பத்தி நாம் வச்சிருக்கிறது நல்ல அபிப்பிராயமில்ல. அவங்க மொத்த வாழ்க்கையே க்ரைம் சார்ந்ததுன்னு நினைக்கறோம். ஊரில் எந்த வம்பு சண்டை, அடிதடி, குத்துவெட்டு நடந்தாலும் அவங்களுக்கு பங்கு இருக்கும்னு இயல்பாவே நம்புறோம்.

 ஆனா, அன்பால வாழ்ந்துட்டு இருக்கிற உலகம் அது. அவங்ககிட்ட இருக்கிற காதல், வலி, ஆக்ரோஷம், துரோகம், அன்பு, வெற்றி எல்லாம் வேற மாதிரி. உங்களுக்கு தி.நகர்ல ஒரு நண்பன் இருந்தா, அவன் காலேஜ் முடிச்சு, யு.எஸ் பற்றி பேசுவான். ஆனா, வியாசர்பாடி நண்பன் அடுத்தவங்க நலன் பற்றியே கவலைப்படுவான்.

அந்த வாழ்க்கை கொஞ்சமும் நகாசு பண்ணாமல், ஏத்தி வச்சு சொல்லாமல் அச்சு அசலா வந்திருக்கு. சொல்லியே ஆகணும்ங்கிற உண்மை இதில் இருக்கு. என்னால முடிஞ்சவரை இதில் நடிக்காம இருந்திருக்கேன். என்னை ரஞ்சித்தின் கேரக்டரில் புகுத்திக்கிட்டாலே போதும். இதில், ஏகப்பட்ட கூத்துப்பட்டறை நடிகர்கள்.

அவர்களின் இயல்பான நடிப்புக்கு ஏத்த மாதிரி என்னைத்தான் மாத்திக்க வேண்டியிருந்துச்சு. நான்தான் ஹீரோன்னு இதில் எந்த பில்டப்பும் கிடையாது. ஆகக் கடைசியில் பாருங்க... உங்களுக்கு இதில் வித்தியாசமான கார்த்தி கிடைப்பான். இதற்கு மக்கள் ஆதர விருந்தால், இன்னும் இதுபோல் நான் தொடர்வேன்...’’

‘‘இந்தப் படத்தின் ஸ்டில்களில் கூட உயிரோட்டம். நீங்க நடுவில் காமெடிக்கு போயிட்டீங்க. இப்ப வேறு மாதிரி எண்ணம் எப்படி வந்தது?’’‘‘இங்கே பகலில் வந்து பாருங்க... வெள்ளை, மஞ்சள், சிவப்புன்னு வண்ணங்கள் கலந்து வீடுகள் இருக்கும்.

ஆனா, ராத்திரி யில் அதுவே பயம் காட்டும். கேபிள் ஒயர்கள் வானத்தையே மறைக்கும். பகலில் பார்க்கிற சர்ச், ஈவினிங் சூரியன் மறையும்போது பார்த்தா அம்பது நூறு மெழுகுவத்திகள் தகதகனு தங்கமும் மஞ்சளுமா ஒரு கலரை இறைச்சு மனசை என்னமோ பண்ணுது.

எதிரெதிர் வீடுகளுக்கு இடையில் கயிறு கட்டி துணி காயப்போடுவது கூட அழகு தான். எனக்கு இங்கே எல்லாமே வித்தியாசமா இருந்தது. கதையோட கையைப் பிடிச்சுக்கிட்டுப் போறார் ரஞ்சித். அவர்கூட சேர்ந்து நடக்க வேண்டியது மட்டும்தான் நம்ம கடமை. ஒரு இடத்தைக் கூட இவ்வளவு கேரக்டரில் நுழைச்சுக் காட்ட முடியுமான்னு ஆச்சரியப்பட்டிருக்கேன். கேமராமேன் முரளி கூட இதில் வெளியே தெரியாத ஒரு கேரக்டர்தான்.’’ ‘‘நீங்க ரொம்ப மாறிட்டீங்க... சினிமாவையும் மாத்திட்டீங்க!’’

‘‘நான் நல்ல கதையைத்தான் தேடுறேன். கிடைக்கணுமே. இது கூட நானா படிச்சுப் புடிச்ச ஸ்கிரிப்ட்தான். ‘சமீப காலமா நீங்க மனசுக்குள் ஒட்டலை’ன்னு பேச்சு வந்தது எனக்குத் தெரியும். நான் இதுல நடிக்காம நடிச்சிருக்கேன்.

இதெல்லாம் எனக்கு புதுசு. ஹீரோ, ஹீரோன்னு நினைச்சுக்கிட்டு இறங்கி பழக்கமாப் போச்சு. ஆனா இதில் அழுகையைக் கூட நிஜமா அழுது செய்திருக்கேன். எமோஷனில் நான் எந்த மிகை உணர்ச்சியும் காட்டலை. வட சென்னை பையனைத்தான் நீங்க பார்ப்பீங்க. என்னோட முழு நம்பிக்கைப் படம் ‘மெட்ராஸ்’!’’‘‘இப்போ ஹீரோக்கள் மாறி, படங்கள் வேற வடிவத்தில் வருது... கவனிக்கிறீங்களா?’’

‘‘அய்யா... பாரதிராஜா எப்பவோ வழக்கமான ஹீரோக்களை மாத்திக் காட்டிட்டார். பார்த்திபன் சார் ‘புதிய பாதை’யில் காட்டியது வேற பாதை. ‘பருத்தி வீரன்’ல சராசரி ஹீரோவை உடைச்சுக் காட்டினோம். வரலாறு முக்கியம் தலைவரே... மறந்துடாதீங்க!’’‘‘பொண்ணு புதுசா? அருமையா இருக்கு!’’

‘‘யூனிட்ல கேத்ரின் வந்து சேரும்போது தமிழில் ஒரு வார்த்தை தெரியாது. துபாய்ல வளர்ந்த மாடர்ன் பொண்ணு. அவங்க இப்ப சென்னையின் எல்லா பாஷையும் பேசுவாங்க. போராட்டத்துல பேசுகிற பொண்ணா படத்தில் அவங்க வர்றாங்க. துளி மேக்கப் இல்லை. அந்த நிறத்திற்கு அப்படியே இருந்தாலே போதும்!’’
‘‘பாடல்கள் அருமையா இருக்கு...’’

‘‘எனக்கு எப்பவும் சந்தோஷ் நாராயணன் பிடிக்கும். அவர் டியூன்கள் நிறைய வித்தியாசம் தருது. ‘நான் நீ’ பாடல், ‘காகிதக் கப்பல்’ இதெல்லாம் சான்ஸே இல்லை. ஒரு ஹீரோ மாதிரி அவர் படங்களைப் பொறுமையா தேர்ந்தெடுக்கிறார். சினிமாவில் அதிர்ஷ்டம் எதுவும் இல்லை... ஆரம்பத்திலிருந்து உழைப்புதான் என்னைத் தூக்கிட்டு வந்திருக்கு. ரஞ்சித் மாதிரி டைரக்டர்கள் அகப்படும்போது வேற ஏரியா, வாழ்க்கை, மனிதநேயம், தமிழ் உணர்வு... எல்லாமே புரியுது!’’

- நா.கதிர்வேலன்