நன்றி



டீக்கடையில் நண்பனோடு நின்றிருந்தேன். அந்தப் பக்கமாய் தளர்ந்த நடையில் சென்ற அந்த முதியவர்... ராகவன் சாரேதான். பார்த்து எத்தனை நாளாச்சு.‘‘சார்! என்னைத் தெரியுதா? நான்தான் பூங்கா நகர் தினேஷ்!’’ என்றேன்.‘‘ஓ... நல்லது தம்பி! நல்லா இருக்கீங்களா? இப்ப என்ன பண்றீங்க?’’ - தடுமாற்றமான குரலில் கேட்டார்.‘‘திருச்சியில பேங்க் ஆபீஸரா இருக்கேன் சார். வாங்களேன் டீ சாப்பிட்டுப் போகலாம்!’’ என் அன்புக்குக் கட்டுப்பட்டவராக வந்தார். மூவருமாக தேநீர் அருந்தினோம்.


‘‘என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆள் சார் நீங்க! உங்க கையாலதான் வேலை ஆர்டரை வாங்கினேன். அதை என்னைக்குமே மறக்க முடியாது!’’ என்றேன்.‘‘பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க தம்பி. நான் வர்றேன்!’’ - கூச்சமாக சொன்னபடி அவர் விடை பெற்றதும் பக்கத்திலிருந்த என் நண்பன் கேட்டான்... ‘‘யாருடா அவர்? பெரிய பேங்க் ஆபீஸரா?’’

‘‘சேச்சே... என்னை மாதிரி பல பேருக்கு வேலைக்கான ஆர்டர் கொடுத்தவர் அவர். எங்க ஏரியா போஸ்ட்மேனா இருந்தவர். என்னதான் நாம் படிச்சு வேலை வாங்கினாலும், அந்த ஆர்டரை போஸ்ட் மேன் கையாலதானே வாங்கணும்? அந்த நன்றியை மறக்கக் கூடாதில்லையா?’’நான் சொன்னதை நண்பனும் ஆமோதித்தான்.     

கு.அருணாசலம்