கோலம்



‘‘இனிமே நான் கோலம் போட மாட்டேன்!’’ - பயங்கரமாய் கூச்சலிட்டாள் மாதவி. விடிகாலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அவளின் கழுத்து செயினை அறுத்துக்கொண்டு பறந்துவிட்டான் ஒரு ஹெல்மெட் ஆசாமி. பத்து பவுன் செயின் அம்போ! வீட்டின் முன் கூடி நின்று குசலம் விசாரித்தார்கள் அக்கம்பக்கத்தினர்.

‘‘காலம் கெட்டுக் கிடக்கும்மா... இனிமே நீ கோலமெல்லாம் போட வேணாம்’’ - மாதவியின் மாமியார் கம்மிய குரலில் சொன்னாள்.நடிப்பாக வெளிக்காட்டிக் கொண்டிருந்த பயம், பதற்றமெல்லாம் தாண்டி, மாதவியின் உள் மனதில் சந்தோஷம் பளிச்சிட்டது.நேற்று வரை இதே மாமியார் என்னவெல்லாம் பேசினாள்...

‘‘பொண்ணுன்னா காலையில் எழுந்திருக்கணும். குளிச்சு முழுகணும். வாசல்ல தண்ணி தெளிச்சி, கூட்டி பெருக்கி, கோலம் போடணும்!’’ - புதிதாய் கல்யாணமாகி வந்த மாதவியை பாடாய்ப்படுத்தினாள் மாமியார். கோலம் போட கொஞ்சம் லேட்டாலும் கரித்துக் கொட்டுவாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாதவி, கணவனுடன் சேர்ந்து செய்த செட்டப்தான் இது.
‘‘ஏங்க, உங்க ஃப்ரெண்ட் கரெக்டா வந்து செயினை அறுத்துட்டாருங்க. ஆபரேஷன் சக்ஸஸ்!’’ என்றாள் மாதவி கணவனிடம்!

‘‘அய்யோ, என் ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லையாம். இப்பத்தான் போன் பண்ணினான். இவன் யாரோ தெரியலடி!’’ என்றான் கணவன் கலவரமாக!

பிஎம்வி