ஆசை



பரசுவையும் பட்டம்மாளையும் பிள்ளைகள் சூழ்ந்து நின்றார்கள்.‘‘அப்பா, பிள்ளைங்க நாங்க மூணு பேரும் பெங்களூருல இருக்கோம். நீங்க மட்டும் ஏன் சென்னையில தனியா கஷ்டப்படணும்? பேசாம இந்த வீட்டை வித்துட்டு எங்களோட வந்துடுங்க!’’ என்றான் மூத்த மகன், அனைவருக்கும் பொதுவாக.‘‘அப்பா அம்மாவை நான் கூட்டிட்டுப் போறேன்... நான் கூட்டிட்டுப் போறேன்’’ என மூவருக்குள் பாசப் போட்டியும் தோன்றி மறைந்தது. பரசு வாய் திறந்தார்...

‘‘சரிப்பா... உங்க பாசத்தை எங்களால மீற முடியலை. பேசாம இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, நாங்க ரெண்டு பேரும் உங்களோட வந்துடறோம்’’ என்றார் ஒரு முடிவோடு. பிள்ளைகள் மூவருக்குமே அதிர்ச்சி. சட்டென பின்வாங்கினார்கள் அவர்கள். ‘‘இல்லப்பா... வாடகைக்கு விட்டா வீடு பாழாப் போயிடும். நீங்க இருந்து கவனிக்கிற மாதிரி வராது. நாங்க கிளம்பறோம். ஒரு போன் பண்ணினா, உடனே வந்து நிக்கப் போறோம்!’’ என்றார்கள் ஒரே குரலில்.

‘‘பார்த்தியா பட்டம்மா. இது பாசமில்லை... வீட்டை வித்தா இன்றைய தேதிக்கு மூணு கோடி ரூபாய் கிடைக்கும். அதுல ஆளுக்கொரு பங்கு கிடைக்குமே என்கிற ஆசை’’ - மெல்லிய குரலில் பட்டம்மாளிடம் சொன்னார் பரசு. இருவருக்குமே கண்கள் கலங்கின!                    

ராஜன்புத்திரன்