சிகரம் தொடு



‘காவல்துறையைத் தேர்ந்தெடு’ என அப்பா கெஞ்ச, ‘அந்தப் பக்கமே போகாதே’ என காதலி மிரட்ட, விக்ரம் பிரபு என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் ‘சிகரம் தொடு’ படத்தின் டூ லைன். ஆசைப்படுகிற அப்பாவின் கதையும், தவிர்க்க நினைக்கிற மகனின் விருப்பமும் இணைந்ததுதான் திரைக்கதை. அப்பா சத்யராஜின் ஆசை நிறைவேறியதா என்பதே க்ளைமேக்ஸ் பரபரப்பு.

கலவரத்தில் அப்பா ஒரு காலை இழந்ததால், சிறுவயதிலிருந்தே விக்ரம் பிரபுவுக்கு காக்கிச் சட்டை அலர்ஜி. வளர வளர அந்த வெறுப்பும் வளருகிறது. நடுவே வருகிற காதலியும் போலீஸ் வேலை வேண்டாம் என்றே கண்டிஷன் போட, தீர்மானம் கெட்டிப் படுகிறது. எல்லாவற்றையும் மீறி ஏ.டி.எம் கொள்ளையர்கள் குறுக்கே வர, அடுத்து என்ன செய்தார் விக்ரம் பிரபு என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பத்திரிகையைத் திறந்தால் பக்கத்துக்கு பக்கம் அடிபடும் ஏ.டி.எம் கொள்ளைகளை உபகதையாய்த் தேர்வு செய்ததால், ஆரம்பப் பாசக்கதை திகில் சித்திரமாக மாறிவிடுகிறது. அப்பாவாக சத்யராஜ் நிஜமாகவே சென்டிமென்டில் பிழிகிறார்.

போலீஸ் வேலையை மகன் மேற்கொள்ள அவர் எடுத்துக்கொள்கிற சிரத்தை, அக்கறை... அதுவே நம்மை கதையில் ஒன்ற வைத்து விடுகிறது. எதற்கெடுத்தாலும் காவல்துறையை வாரும் சமயத்தில், இந்தப் படம் அதற்குத் தருவது சல்யூட். அப்பாவின் பிரியத்திற்கு மருகுவதும், போலீஸ் வேலையில் வெறுப்பு கொள்வதுமாக செம ஸ்கெட்ச் அடித்து ஒரு பொஸிஷனில் அமர்ந்துவிட்டார் விக்ரம் பிரபு.

ஆனால், ரொமான்ஸ் விஷயத்தில் என்ன செய்தாலும் ஒட்டவே இல்லையே! ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வீட்டிலிருந்து வந்த மாதிரி இப்படி ஒட்டாதது ஏன்? ஆனாலும், ஆக்ஷனில் அதிரடிப்பது, ஏ.டி.எம் கொள்ளையர்களை கட்டம் கட்டி காவு வாங்குவது என ஆல்ரவுண்டில் பின்னுகிறார். அந்த ஆறடி உயர மும் அவருக்கு முழு ஒத்துழைப்பு. என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான்... உயர்த்தி கத்தாமலும் அழுது வடியாமலும் காவல்துறையின் கம்பீர முகம் காட்டுகிறார் சத்யராஜ். வட இந்திய டூரில் வந்த பெண்ணாக மோனல்... நிச்சயம் நல்வரவு. கொஞ்சம் நடிக்கவும் கற்றுக்கொண்டால் உறுதியாகச் சொல்லலாம் ஒரு இடம்.

படத்தின் லேட்டஸ்ட் புது விஷயம்... ஏ.டி.எம் கொள்ளையின் அசத்தல் உண்மைகள். கதையோடு ‘நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா’ என நமக்கே எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். பேங்க்கிலேயே வேலை பார்த்துக்கொண்டு இரவில் கொடூர முகம் காட்டும் கௌரவ், வில்லனாகவும் இயக்குநராகவும் திகில் முத்திரை பதிக்கிறார்.

வட இந்தியாவை சுற்றிப் பார்க்காதவர்களுக்கு காட்ட எத்தனை இடம், எத்தனை கோணம், எத்தனை சடங்குகள்! சும்மா நதியை, கோயில் திருவிழாவைக் காட்டிவிட்டு விடைபெற்றது ஏனோ? செம பில்டப்போடு முடியப் போகிறது என எதிர்பார்த்த பின்பகுதி, கடைசியில் இவ்வளவு தத்தி நடப்பது ஏன்? கடைசியாக பரபரவென்று எதிர்பார்த்தால், சீனி வெடி வெடித்தது போல் கொஞ்சம் ஏமாற்றம்.

ஆரம்ப சென்டிமென்ட்களை கொஞ்சம் பட்டை தீட்டியிருந்தால், பின்பகுதி ஏ.டி.எம் தகிடுதத்தங்கள் சூடு பிடித்திருக்கும். பாடல் காட்சிகளில் விஜய் உலக நாதனின் கேமரா, அழகில் துள்ளுகிறது. இமான் பாடல்களில் ஏனோ சுணக்கம்? ஆனால், பின்னணியில் திகில் ட்விஸ்ட் ஏற்றுகிறது இசை. ‘சிகரம் தொட’ நினைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்!

- குங்குமம் விமர்சனக் குழு