சென்னையைத் தாக்கும் சூப்பர் பக்ஸ்!



ஆன்டி பயாட்டிக் ஆபத்து

ஒரு காலத்தில் சாதாரண பாக்டீரியாவாக, ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்பட்டு நடந்த நுண்ணுயிர்கள்தான் அவை. ஆனால் இப்போது அவை, ‘எந்திரன்’ பட சிட்டி ரோபோ போல, யாருக்கும் அடங்காத ‘கிருமி’னல்கள் ஆகிவிட்டன. மருந்துகள் எதற்குமே மட்டுப்படாத இந்த ‘சூப்பர் பக்ஸ்’ கிருமிகள், சென்னை, ஐதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களில்தான் வேகமாகப் பெருகி வருவதாகத் தெரிவித்துள்ளன சமீபத்திய ஆய்வுகள். இதற்கு மிக முக்கிய காரணமாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டுவது, ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத்தான்.

‘சூப்பர் பக்ஸைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், இனிமேல் அத்தியாவசியத் தேவை இன்றி யாருக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்து களைக் கொடுக்காதீர்கள்’ என மருத்துவர்களின் கூட்டமைப்பே அனைத்து மருத்துவர்களுக்கும் சர்க்குலர் அனுப்பியிருக்கிறது. அப்படி என்ன ஆன்டி பயாட்டிக்கில் பிரச்னை? சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவின் தலைமை டாக்டர் தேவராஜனிடம் கேட்டோம்...

‘‘ ‘ஜுரமா? ஒரு ஆன்டி பயாட்டிக் மாத்திரை வாங்கிப் போடு’ - இன்று கிராமத்தில் கூட இதுதான் கை வைத்தியமாகப் போய் விட்டது. ஏதோ குச்சி மிட்டாய், குருவி ரொட்டி மாதிரி மக்களிடம் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன ‘சளி மாத்திரை’ எனப்படும் ஆன்டி பயாட்டிக் மருந்துகள். இதுதான் பிரச்னைகள் அனைத்திற்கும் காரணம். சாதாரண சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வீரியம் குறைந்த வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியவை. ‘சளிக்கு மாத்திரை எடுத்துக்கொண்டால், ஒரு வாரத்தில் சரியாகி விடும்...

 மாத்திரை இல்லாவிட்டால் 7 நாளில் சரியாகி விடும்’ என நாங்களே ஜோக் அடிப்பதுண்டு. அது வெறும் ஜோக் அல்ல. நிஜமாகவே சின்னச் சின்ன வைரஸ் தொற்றுகளை வென்று தன்னைத் தானே சரியாக்கிக் கொள்ளும் திறன் நம் உடலுக்கு உண்டு. ஆனால், அதுவரை இங்கே யாருக்கும் பொறுமை இல்லை.

நாளைக்கே உடம்பு சரியாகி வேலைக்குப் போய் விட வேண்டும் என மருந்துக் கடைகளில் சக்தி வாய்ந்த ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கிப் போடுகிறார்கள். அப்போதைக்கு அந்த மாத்திரைகள் சளியை ஒரே நாளில் போக்கி நமக்கு நிம்மதி தரும். ஆனால், நீண்ட கால ஆரோக்கியத்தை யோசித்தால் ஒவ்வொரு ஆன்டிபயாட்டிக் மாத்திரையும் விஷம் போன்றவை’’ என அதிர்ச்சிகளை அடுக்கினார் அவர்.

‘‘ஆன்டிபயாட்டிக் என்பதே தவறானதல்ல... அது ஒரு ஃபிக்சட் டெபாஸிட் மாதிரி. பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் என மிக முக்கிய தருணங்களில்தான் ஃபிக்சட் டெபாஸிட்டைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, தினம் தினம் டீ சாப்பிடவெல்லாம் எடுத்து வீணாக்கக் கூடாது.

ஆன்டிபயாட்டிக் விஷயத்தில் நாம் செய்து கொண்டிருப்பது அதுதான். கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு வீரியமான தொற்று நோய்களுக்குப் பயன்படுத்த வேண்டிய மருந்துகளையெல்லாம் நாம் காய்ச்சலுக்குப் பயன்படுத்துகிறோம். ஆரம்பத்தில் அதற்கு கட்டுப்பட்டு பொசுங்கிப் போகும் கிருமிகள், போகப் போக அதற்குப் பழகிவிடுகின்றன. அவைதான் இப்போது சூப்பர் பக்ஸாக விஸ்வரூபம் எடுத்து மனிதகுலத்தை மிரட்டுகின்றன’’ என்கிறார் தேவராஜன்.

இப்படி சகட்டுமேனிக்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதால் இன்னொரு ‘பக்க விளைவு’ம் உண்டு. ‘‘பிற்காலத்தில் தீவிரமான தொற்று நோய்கள் வந்தால், அப்போது எந்த ஆன்டிபயாட்டிக் மருந்துமே நம் உடலில் வேலை செய்யாது போகும். அப்படித்தான் காசநோய் மருந்துகளும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உபயோகமில்லாமல் போய்விட்டன’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

சென்னையில் செயல்படும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சௌமியா சுவாமிநாதன் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறார்.

‘‘ஒரு காலத்தில் ஃபர்ஸ்ட் லைன் என்று சொல்லப்படும் முதல் நிலை ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளே போதுமானவையாக இருந்தன. ஆனால், இன்று இந்த மாத்திரைகள் பலரின் உடலில் செயலாற்றுவதே இல்லை. காரணம், ஏற்கனவே உடலில் படிந்திருக்கும் தேவையில்லாத ஆன்டிபயாட்டிக் மருந்துகள்தான். சாப்பிடும் சிக்கனிலிருந்து, குடிக்கும் தண்ணீர் வரை அனைத்திலும் ஆன்டி பயாட்டிக் மருந்து கலந்திருக்கிறது. இதனால், நம் உடலும் கிருமிகளும் அந்த மருந்துகளுக்குப் பழகிவிட்டன.

இப்படிப்பட்ட நோயாளிகளை எம்.டி.ஆர்.டி.பி நோயாளிகள் என்றழைக்கிறோம். இவர்களுக்கு இரண்டாம் நிலையிலுள்ள மருந்துகளைக் கொடுத்தால்தான் காசநோய் குணமாகும். இதற்கு செலவும் அதிகம். பல மருந்துகளின் கூட்டுக் கலவையை நீண்ட காலத்துக்குக் கொடுப்பதால், பக்க விளைவாக வாந்தி, நரம்பு வலி போன்றவையும் ஏற்படலாம். இதனால் நோயாளிகள் சரியாக சிகிச்சையைத் தொடர்வதில்லை.

இதனாலேயே இரண்டாம் நிலை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் நான்கில் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது’’ எனக் கவலைப்படும் சௌமியா, ‘‘இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவாகப் பயன்படுத்துவது தான்’’ என்கிறார்.

‘‘உலகில் மொத்தம் இருக்கிற ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளின் எண்ணிக்கையே மிகக் குறைவு. கடந்த நான்கைந்து வருடங்களாக எந்தவித மருந்தும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்தைக் கண்டுபிடிக்க சுமார் பத்து வருடமாவது ஆய்வு செய்ய வேண்டும்.

அதற்கு ஆகும் செலவும்கூட அதிகமானது. ஆக, இருக்கும் மருந்துகளை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இவற்றை மருத்துவர்களின் பிரிஸ்கிரிப்ஷன்படி தான் கடைக்காரர்கள் கொடுக்க வேண்டும். இது மாதிரியான கட்டுப்பாடுகளை அரசே இறுக்கிப் பிடிக்க வேண்டும்’’ என்கிறார் அவர் உறுதியாக! பிற்காலத்தில் தீவிரமான தொற்று நோய்கள் வந்தால், அப்போது எந்த ஆன்டிபயாட்டிக் மருந்துமே நம் உடலில் வேலை செய்யாது போகும்.

டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்