எமனையும் டானையும் வீழ்த்திய கிடாம்பி!



சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா இரட்டை ஜாக்பாட் அடிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மகளிர் பிரிவில் சாய்னா சாம்பியன் பட்டம் வென்றதில் ஆச்சரியம் அதிகமில்லை என்றாலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த்தின் வெற்றி பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குறிப்பாக சீன வீரர்களுக்கு!இறுதிப் போட்டியில் அவர் எதிர்கொண்டது ‘சூப்பர் டான்’ என்று மிரட்சியோடு அழைக்கப்படும் சீன ஷட்டில் சக்கரவர்த்தி லின் டான் என்பதால்தான் இந்த அதிர்ச்சி. ஐந்து முறை உலக சாம்பியன், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் என்று நிஜ ‘டான்’ ஆகவே பேட்மிண்டன் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருபவர். இந்த டிராகனை அதன் குகையிலேயே சந்தித்ததோடு, 21-19, 21-17 என நேர் செட்களில் மடக்கி அடக்கியதை கிடாம்பியாலேயே நம்ப முடியவில்லை!

‘‘இப்படி ஒரு மகத்தான வீரரை வீழ்த்துவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை’’ என்று உற்சாகத்தில் மிதக்கிறார் கிடாம்பி. இதில் விசேஷம் என்னவென்றால், ஐந்து மாதங்களுக்கு முன்னால் மரணத்தோடு மன்றாடியவர் இவர் என்பதுதான்.

இந்தியாவின் பேட்மிண்டன் தலைநகராக ஐதராபாத்தை மாற்றிய கோபிசந்த்தின் மாணவர்தான் இந்த கிடாம்பி ஸ்ரீகாந்த். கடந்த ஜூலையில் ஒரு நாள் பயிற்சிக்கு வந்த ஸ்ரீகாந்த்தை வெகு நேரமாகக் காணவில்லை. தேடிச் சென்ற நண்பர்கள், வாஷ் ரூமில் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிக் கிடந்தவரைப் பார்த்து பதறியடித்து தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஐ.சி.யு.வில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ‘‘அதி தீவிர மூளைக் காய்ச்சல்... இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது’’ என்று சொல்ல, உடைந்து நொறுங்கிய பெற்றோரை கோபிசந்த் சிரமப்பட்டு தேற்றினார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து எழுந்தாலும், அவரின் பேட்மிண்டன் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக்குறியானது. ‘‘நான் மறுபடியும் விளையாடுவேன்’’ என்று உறுதியாகச் சொன்ன ஸ்ரீகாந்த்தான் இன்று சீன ஓபனில் சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறார்.

கோபிசந்த் அகடமியில் அவர் சேர்ந்ததே பெரிய கதை. முதலில் அவரது அண்ணன்தான் அங்கு பிராக்டீஸ் செய்து வந்தார். 2008ல் கிடாம்பியை அழைத்து வந்த அவருடைய தந்தை, ‘‘சரியா படிக்கவும் மாட்டேங்கிறான்... உருப்படியா எதுவும் செய்யற மாதிரியும் தெரியல. நீங்கதான் பயிற்சி கொடுத்து ஏதாவது செய்யணும்’’ என்றார். ஆரம்பத்தில் தயங்கிய கோபி, பின்னர் மனதை மாற்றிக் கொண்டு அட்மிஷன் கொடுத்தார்.

இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில்தான் அவருக்கு கோச்சிங் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 2011ல்தான், ‘‘சரி! நீ சிங்கிள்ஸ் முயற்சி செய்’’ என்றார் கோபி. அதன் பிறகு நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரின்போது ஸ்ரீகாந்த் ஆட்டத்தைப் பார்த்த உலகின் நம்பர் 1 வீரர் லீ சோங் வெய்யின் பயிற்சியாளர் டே ஜி போக், ‘‘இந்தப் பையன் ஆடுறது, வெய் ஆட்டத்தை பார்க்கிற மாதிரியே இருக்கு. சீக்கிரமே இவன் பெரிய அளவுல வருவான்’’ என்று சொன்னார்.

அந்தக் கணிப்பு இவ்வளவு சீக்கிரம் பலிக்கும் என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மகளிர் ஒற்றையரில் சாய்னா, சிந்து; ஆண்கள் ஒற்றையரில் பாருபள்ளி காஷ்யப், கிடாம்பி ஸ்ரீகாந்த் என்று நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜொலிக்க ஆரம்பித்திருப்பதால் இந்திய பேட்மிண்டன் எதிர்காலம் பிரகாசமாகி இருக்கிறது.

சங்கர் பார்த்தசாரதி