டெல்லியில் சார்லிஸ் ஏஞ்சல்ஸ்..!



பெண்கள் தின ஸ்பெஷல்

பெண்களைக் காக்கும் கராத்தே கரங்கள்!

சார்லிஸ் ஏஞ்சல்ஸ்... இப்படித்தான் அழைக்கிறார்கள் டெல்லி பெண் போலீஸில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த அணியை! நாற்பது பெண் கான்ஸ்டபிள்கள் கொண்ட சிறிய படைதான். என்றாலும், டெல்லியில் நடந்தேறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க குறி வைத்துக் கிளம்பியிருக்கிறது இந்த குங்ஃபூ அணி! கடந்த 2012ல் ஓடும் பஸ்சில் மாணவி நிர்பயாவுக்கு நேர்ந்த அவலம் நாட்டையே உலுக்கிப் போட்டது. இதன் பிறகும் தலைநகரில் பாலியல் பலாத்காரக் குற்றங்கள் குறையவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் அங்கே 2 ஆயிரம் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது கடந்த 2013ம் ஆண்டை விட 31.6 சதவீதம் அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஒரு பலாத்கார சம்பவம் நடப்பதாக அரசின் புள்ளியியல் கணக்கு தெரிவிக்கிறது. இப்படி அதிகரித்துவரும் பாலியல் சம்பவங்களால் அதிர்ந்து போன டெல்லி காவல்துறை பல்வேறு வழிகளை மேற்கொண்டது.

பள்ளி மாணவிகள் மற்றும் வீட்டுப் பெண்களுக்கு தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளெல்லாம் கூட அளிக்கப்பட்டன. ஆனால், அப்போதும் பலாத்கார சம்பவங்கள் குறையவில்லை. இதனால், டெல்லிக்கு இந்தியாவின் ‘ரேப் கேபிடல்’ என்கிற அவப்பெயர் வந்து சேர்ந்தது. இந்தக் களங்கத்தைப் போக்கவே இப்படியொரு டீம் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

இதிலுள்ள 40 பெண் கான்ஸ்டபிள்களுக்கும் கடந்த ஒரு மாதமாக கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் முக்கிய வீதிகள், பள்ளிக்கூடங்கள், மெட்ரோ நிலையங்கள் என பெண்கள் அதிகம் புழங்கும் ஏரியாவிற்குள் யூனிபார்ம் இன்றி சாதாரண உடைகளிலேயே வலம் வருவார்கள்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் ரோமியோக்களை அங்கேயே ‘கவனி’ப்பதுதான் இவர்களின் வேலை! ‘‘இனி, நாங்கள் எந்த மோசமான நடத்தைகளையும் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவோம்’’ என்கிறார் இந்த அணியின் தலைவர் பாரதி வாத்வா.

1970களில் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் பாப்புலராக வலம் வந்த க்ரைம் தொடர்தான் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். பின்னாளில், ஹாலிவுட் படமாக வெளிவந்து சக்கைபோடு போட்டது. தனியார் புலனாய்வு நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பெண்கள் செய்யும் சாகசமே இதன் கதைக் களம். அதனால்தான் இந்த அணியை இப்படியொரு பெயரில் அழைக்கிறார்கள்.

‘‘இது ஒரு நல்ல முயற்சி. ஆனால், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நகரத்திற்கு 40 கான்ஸ்டபிள்கள் போதாது. இன்னும் நிறைய பெண் கான்ஸ்டபிள்களுக்கு இந்தப் பயிற்சியை அளிக்க வேண்டும்!’’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

- பேராச்சி கண்ணன்