பொண்ணுங்க ஈகோவை போக்கணும்!



பெண்கள் தின ஸ்பெஷல்

இனியா, ஆர்த்தியுடன் புதுமுகங்கள் ஈடன், அர்ச்சனா, சுபிக்ஷா, ரேஷ்மா என கலர்ஃபுல் ஹீரோயின்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் யூனிஃபார்மில் ஜிவ்வென்றிருக்கிறார் நதியா. ‘இனி வரும் நாட்கள்’ ஷூட்டிங் லன்ச் பிரேக்கில்தான் இந்த ஜாலி கலாட்டா.

 ‘‘முழுக்க முழுக்க பெண்கள் நடிக்கும் படமிது. படத்தில் ஹீரோவே கிடையாது...’’ என்கிறார் படத்தின் டைரக்டர் துளசிதாஸ். மலையாளத்தில் மூணு டஜன் படங்களை இயக்கியவர் இவர்.

‘‘பிரியதர்ஷன் தமிழில் இயக்கிய ‘சிநேகிதியே’வில் கூட ஹீரோ கிடையாதுதானே..?’’

‘‘ஆமாம். ஆனா, அதுல கூட ஒரே ஒரு சீனில் ஆண் போலீஸ் கேரக்டர் இருக்கும். இதுல அப்படி இல்லை. எந்த சீன்லயும் ஆண்கள் வரமாட்டாங்க. கோபிகாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்தினது நான்தான். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஜெயசூர்யானு எல்லாரையும் வச்சு படங்கள் பண்ணிட்டேன். 90கள்லயே தமிழ்ல படம் பண்ணியிருக்கேன். ‘வீட்டைப்பாரு நாட்டைப்பாரு’னு பேரு. அதில் சிவக்குமார் மெயின் ரோல் பண்ணியிருப்பார்.

இவ்வளவு நாள் கழிச்சி இப்பத்தான் திரும்பவும் தமிழ் பக்கம் வரத் தோணிச்சு. எல்லா சப்ஜெக்ட்டும் தொட்டாச்சு. வித்தியாசமா என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப, முழுக்க முழுக்க பெண்கள் நடிக்கும் படத்தை இயக்கலாம்னு முடிவாச்சு.

மலையாளத்துல ‘கேர்ள்ஸ்’. இந்தியப் படங்களோட லிஸ்ட் நிறைய சரி பார்த்து, உறுதி செஞ்ச பிறகுதான் அறிவிச்சோம். இவ்வளவு பர்ஃபெக்டா வெறும் பெண்கள் மட்டுமே நடிக்கிற முதல் படம் இதுதான். படத்தில மொத்தம் 7 ஹீரோயின்ஸ். ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவிகள்.

ஒரு டாக்குமென்ட்ரிக்காக காட்டுக்குப் போறாங்க. அப்போ அவங்க சந்திக்கிற பிரச்னைகளை திகில் கலந்து சொல்லியிருக்கோம். செம த்ரில்லரா வந்திருக்கு. 80 சதவிகித ஷூட்டிங் முடிஞ்சிருச்சு!’’

‘‘எல்லோருமே பொண்ணுங்க... கொடுத்து வச்ச டைரக்டர் சார் நீங்க?’’

‘‘ம்க்கும்... நீங்கதான் சொல்லிக்கணும். நாலு ஆம்பிளைங்க சேர்ந்து நடிச்சா அங்கே ஈகோ இருக்காது. எந்த காஸ்ட்யூம் கொடுத்தாலும் மறுக்காம போட்டுக்குவாங்க. ஆனா, இங்க படம் தொடங்கிய சமயத்திலேயே பொண்ணுங்களுக்குள்ள ஈகோ பத்திக்கிச்சு. ‘அவங்களுக்கு மட்டும் காஸ்ட்யூம் நல்லா இருக்கு. என்னோட டிரெஸ் கலர் சரியில்ல... டிசைன் சரியில்லை... லெக்கின்ஸ் வேண்டாம்...’னு ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

ஒரு நாள் எல்லாரையும் கூப்பிட்டு, ‘காஸ்ட்யூம்ஸ் நடிக்கப் போறதில்ல... உங்க முகம்தான் நடிக்கப் போகுது. நடிப்புல போட்டி போடுங்க... பொறாமைப் படாதீங்க’னு சொன்னேன். அப்புறம்தான் நிலைமை கட்டுக்குள்ள வந்துச்சு. அதுக்கு அப்புறம் எல்லாருமே அவங்கவங்க பெஸ்ட்டைக் கொடுத்தாங்க. நல்லா வந்திருக்கு!’’ ‘‘நதியா...’’

‘‘என் டைரக்ஷன்ல எப்போவோ அவங்க நடிச்சிருக்க வேண்டியது. இப்போதான் சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு. இன்னமும் அதே அழகு நதியாகிட்ட. அதைத் தாண்டி அவங்க டெடிகேஷன் பிரமிப்பா இருக்கு. டென்ஷன் இல்லாமல், கேரக்டரை உள்வாங்கி, மோல்ட் பண்ணி... ரொம்பவே ஹோம்வொர்க் பண்றாங்க.

அதே மாதிரி காமெடி ஆர்த்தி, நடிப்பில் நல்லா ஸ்கோர் பண்றாங்க. இனியா பத்தி தமிழ் ஆடியன்ஸுக்கு நல்லா தெரியும். கம்பம், தேனி, வாகமன், தேக்கடி, நாகர்கோவில்ல ஷூட்டிங் நடந்திருக்கு. பொதுவா படம் முழுக்க பொண்ணுங்கன்னா சோகம், சென்டிமென்ட்னு பொண்ணுங்க டேஸ்ட்டாதான் இருக்கும்னு ஒரு மாயை இருக்கு.

அதை உடைக்கறோம். இப்ப திகில் படங்களுக்குனு ஒரு தனி இடம் இருக்கே... அதை சரியா பிடிச்சி மிரட்டப் போகுது இந்தப் படம்! சஞ்சீவ் சங்கர் கேமரா, எம்.ஜி.ஸ்ரீகுமார் மியூசிக்னு நல்ல டீமோட ஏப்ரல்ல களமிறங்குறோம்.

’’‘‘மல்லுவுட்ல மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம வச்சு, படம் பண்ணிட்டீங்க... கமல், ரஜினி எல்லாம் உங்க மைண்ட்ல இல்லையா?’’‘‘நான் பிறந்து வளர்ந்தது கேரளாவா இருந்தாலும், கோடம்பாக்கம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னோட டைரக்ஷன்ல 9 படங்கள்ல ஜெயராம் நடிச்சிருக்கார்.

ஆர்.பி.சௌத்ரி சார் தயாரிப்பில், சில்க் ஸ்மிதா நடித்த ‘லயனம்’ படம் நான் இயக்கினதுதான். ‘புது வசந்தம்’ படக் கதையை விக்ரமன் ஆர்.பி.சௌத்ரி சார்கிட்ட சொன்னப்போ கூடவே நானும் இருந்தேன். அப்பவே தமிழ்ல நான் படம் பண்ணியிருக்க வேண்டியது. ஆனா, ‘லயனம்’ ஹிட் ஆகி, தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். கமல் சாருக்கு பிரமாதமான சப்ஜெக்ட் ஒண்ணு வச்சிருக்கேன்.

1994ல என்னோட ‘வீட்டைப்பாரு நாட்டைப்பாரு’ ஆடியோ ஃபங்ஷனுக்கு ரஜினி சாரைக் கூப்பிட ‘அன்பாலயா’ பிரபாகரனோட ரஜினி சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் வீட்ல இல்லை. ‘இப்போ வந்துடுவார்’னு மேனேஜர் சொன்னார். கொஞ்ச நேரம் கழிச்சு ரஜினி வந்தார். செம டயர்டா இருக்கறது முகத்திலேயே தெரிஞ்சது. ஆனா, வந்ததும், ‘ஸாரி... ஸாரி, வெயிட் பண்ண வச்சிட்டேன்’னு வருத்தம் தெரிவிச்சார். ‘வொய் ஃபுக்கு உடம்பு சரியில்ல...

நைட் எல்லாம் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்’னு அவர் சொன்னதும் நான் நெகிழ்ந்துட்டேன். அவர் ரேஞ்சுக்கு இதையெல்லாம் சொல்லி மன்னிப்பு கேக்கணுமா என்ன? அப்புறம் அவரே அஞ்சு நிமிஷத்துல ஃப்ரெஷ் ஆகி, எங்களோட போட்டோஸ் எடுத்துக்கிட்டார். அப்பவே அவர் கையாலேயே ஆடியோவை ரிலீஸ் பண்ணினோம். அந்த போட்டோவை இன்னும் பொக்கிஷமா பாதுகாத்து வச்சிருக்கேன்!’’

-மை.பாரதிராஜா