ஃபீலிங்!



‘‘இந்த சீட் வேண்டாம்... என்னை வேற சீட்டுக்கு மாத்திடுங்க சார்..!’’ - சற்று கவலையுடன் மேனேஜரிடம் கேட்டாள் பத்மினி.
‘‘ஏன்? என்ன பிரச்னை?’’

‘‘தினமும், அவர் காலமாகிட்டார், இவர் மரணமடைஞ்சுட்டார்னு வெறும் மரண லெட்டர்ஸாவே வருது... சென்ட்டிமென்ட்டலா ஃபீல் பண்றேன். வேற எதுவுமில்லே!’’ என்றாள் அவள்.
மேனேஜர் சொன்னார்... ‘‘இது இன்சூரன்ஸ் கம்பெனிம்மா. டெத் க்ளைம் செக்ஷன்ல அப்படித்தான் லெட்டர்ஸ் வரும். இதுக்கு சங்கடப்பட முடியுமா? சீக்கிரமே வேற செக்ஷனுக்கு மாத்திடறேன்..! அங்கே போய் நல்லா ஃபீல் பண்ணுங்க. அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கம்மா!’’

பத்மினி சீட்டுக்குத் திரும்பி வந்து அமர்ந்தபோது, அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி கும்பிடு போட்டுச் சொன்னார்...‘‘ரொம்ப தாங்க்ஸ் மேடம்... எங்க வீட்டுக்காரர் காலமானதும் எங்களுக்குச் சேர வேண்டிய இன்சூரன்ஸ் தொகையை நீங்க உடனே செட்டில் பண்ணினதாலே, ரொம்ப நாளா நின்னு போயிருந்த என் பொண்ணு கல்யாணம் நிச்சயமாகிடுச்சு.

 இந்தாங்க கல்யாணப் பத்திரிகை!’’பத்திரிகையை வாங்கியதும் மீண்டும் மேனேஜர் அறைக்குப் போனாள் பத்மினி.‘‘நான் இந்த சீட்லயே கண்டினியூ பண்றேன் சார்!’’ - சொல்லிவிட்டு வந்த அவளை வியப்போடு பார்த்தார் மேனேஜர்.    

பம்மல் நாகராஜன்