டார் டாராக்கிய டங்காமாரி ஆட்டம்!



கெயில் புயல் எச்சரிக்கை

உலகக் கோப்பையில் அதற்குள்ளாகவே உலை கொதிக்க ஆரம்பித்துவிட்டது. தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியதே இல்லை என்ற மோசமான வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது டோனி அண்ட் கோ. பல மாதங்களாக சதம் அடிக்க முடியாமல் பகாசுரப் பசியில் இருந்த கெயில், ஜிம்பாப்வேயை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறார்.

முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதையே நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்து உறுதி செய்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தென் ஆப்ரிக்காவையும் அடித்து நொறுக்கி ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டது இந்திய அணி.

‘‘அட்டர் வேஸ்ட்! அணியில் இருந்து தூக்குங்கள்’’ என்று ஆளாளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வாயடைத்துப் போக வைத்துவிட்டார் ஷிகர் தவான். உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக ரன் (137) அடித்த இந்திய வீரர் என்ற பெருமை இனி அவரிடம்.

 ரகானேயும் இந்த அளவுக்கு ரகளை செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தவான், கோஹ்லி, ரகானே கூட்டணி ஸ்கோர் 300ஐ தாண்டுவதை உறுதி செய்ய, அதே உற்சாகத்தோடு பவுலிங், ஃபீல்டிங்கிலும் பிரமாதப்படுத்தி தென் ஆப்ரிக்காவை 177 ரன்னில் சுருட்டி வீச, பி பிரிவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது இந்தியா.

முதலிடம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. இரண்டே வெற்றி யில் எல்லாமே தலைகீழாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் விலகிப் போய்க் கொண்டிருந்த அதிர்ஷ்ட தேவதைகள் அத்தனை பேரும், மகள் ஜீவாவின் வருகைக்குப் பிறகு டோனியை மீண்டும் மொய்க்கத் தொடங்கி விட்டார்கள்! ‘‘லன்ச், டின்னருக்கு வேறு வேறு வீரர்களோடு சேர்ந்து சாப்பிடுவதன் மூலமாக, அணியில் உள்ள அத்தனை பேருடனும் நெருக்கமாகப் பழகி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறார் கேப்டன்’’ என்கிறார்கள்.

கேலரியில் சச்சின் இருந்ததை சொல்லாவிட்டால் உதைபடுவோம். இந்திய வெற்றிக்கு இப்படி பலப்பல காரணங்கள்... புற்றீசலாய். மொத்தத்தில் இந்தியாவின் ரேட்டிங்கும் பில்டப்பும் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.

அதே சமயம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கி லாந்து என வலுவான அணிகள் அந்தப் பக்கத்தில் காத்திருக்கின்றன என்பதை இந்திய வீரர்கள் நினைவில் வைத்திருப்பது அவசியம். நாக் அவுட் சுற்றில் ஹாட்ரிக் வெற்றி மட்டுமே கோப்பையோடு நாடு திரும்ப உதவும் என்பதால் அதுவரை அடக்கி வாசிப்பது நல்லது.

அடுத்ததாக ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது கிறிஸ் கெயிலின் அதிரடி இரட்டை சதம். கான்பெராவில் மனிதர் ஆடிய ‘டங்காமாரி’ குத்தாட்டத்தில் டார் டாராகிப் போனது ஜிம்பாப்வே.

உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன் (215) மற்றும் முதல் இரட்டை சதம், ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம், 16 சிக்சர்களுடன் ரோகித், டிவில்லியர்ஸ் சாதனை சமன், சாமுவேல்ஸுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 372 ரன் சேர்த்து உலக சாதனை என்று புள்ளிவிவர நிபுணர்களையே தலை கிறுகிறுக்க வைத்த அசுரத்தனமான ஆட்டம் அது.

தவான் போலவே கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி நெருக்கடியில் இருந்தார் கெயில். 19 மாதமாக ஒரு சதம் கூட இல்லை... இனி டி20க்குதான் லாயக்கு, டீமிலிருந்து உடனடியாகத் தூக்க வேண்டும் என்று தலைக்கு மேல் கத்திகள் ரவுண்டு கட்டின. எல்.பி.டபுள்யூ அபாயத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியவர், நிதானமாகவே ரன் குவிப்பை ஆரம்பித்தார். ஒவ்வொரு 50 ரன்னுக்கும் அவர் எடுத்துக் கொண்ட பந்துகளின் எண்ணிக்கையை வைத்தே (51, 54, 21, 12) ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்சிப்படுத்திவிட முடியும். 

அயர்லாந்திடம் அடைந்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து மீண்டுள்ள வெஸ்ட் இண்டீஸை, மார்ச் 6ம் தேதி பெர்த் மைதானத்தில் சந்திக்கிறது இந்திய அணி. சர்வ ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், நாமும் கெயில் புயலில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.சராசரியாக இரண்டு ஆட்டத்துக்கு ஒரு சதம் என்று போய்க் கொண்டிருப்பதால் இந்த முறை இதிலும் புதிய சாதனை உறுதி.

இதற்கு, ஃபீல்டிங் கட்டுப்பாட்டில் அறிமுகமாகி உள்ள புதிய விதிமுறைகளே காரணம் என்கிறார்கள். கிறிஸ் கெயில் வேறு இரட்டை சதம் விளாசி உசுப்பி விட்டிருப்பதால் வார்னர், மேக்ஸ்வெல், கோரி ஆண்டர்சன், பிரெண்டன் மெக்கல்லம், டிவில்லியர்ஸ், அப்ரிடி போன்ற அதிரடி மன்னர்கள் எல்லாம் கைகள் துறுதுறுக்க காத்திருக்கிறார்கள். இலங்கை, பாகிஸ்தான், இங்கி லாந்து அணிகளுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அலட்சியப்படுத்துவது ஆபத்து.

களத்துக்கு வெளியே களேபரம் என்றால்... முக்கியமான போட்டிக்கு முன்பாக நைட் கிளப்பில் ஆட்டம் போட்ட பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவர் மொயின் கானை ‘ஆணியே பிடுங்க வேண்டாம்’ என்று உடனடியாக நாடு திரும்பச் சொல்லிவிட்டார்கள். பெரிசு யூனிஸ் கான் பெயரில் போலி ட்விட்டர் அக்கவுன்ட் தொடங்கி, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டதும் பரபரத்தது.

ஊர் சுற்றிவிட்டு இரவு பத்து மணிக்கு மேல் ஓட்டலுக்கு வந்த வங்கதேச வீரர் அல் அமீன் உசேன் வெளியேற்றம் (சூதாட்ட புக்கிகளுடன் பேசியதாகவும் புகைகிறது), பாகிஸ்தான் வீரர்களின் மோசமான ஆட்டம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி லாகூர் கோர்ட்டில் மனு தாக்கல்... இப்படி கூடவே சைடு டிஷ்கள்.

இந்திய அணி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியதுமே பற்றிக்கொண்டது ட்விட்டர் இணையதளம். ‘இந்தப் பக்கம் எம்.எஸ்.டி... அந்தப் பக்கம் ஏ.பி.டி... நடுவுல மெலிசா ஒரு கோடு’ என்று ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த ரன் அவுட்டுக்கு அற்புதமான கமென்ட் போட்டு அசத்தி இருந்தார்கள்.

ஏபிடி: டேய், நாங்க பாகிஸ்தான் இல்லடா... தென் ஆப்ரிக்கா! எம்எஸ்டி: அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, பச்சை சட்ட போட்டிருந்தா அடிப்போம்! எப்படித்தான் இப்படி இன்னோவேட்டிவா ரூம் போடாமலே யோசிக்கிறாய்ங்களோ?

- ஷங்கர் பார்த்தசாரதி