நேர்முகம்... நேர்மை முகம்!



நாஞ்சில் நாடனின் ‘கைம்மண் அளவு’, அற்புதத் தமிழ் விருந்து. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் செம்மொழித் தமிழுக்கு என ஒரு நாற்காலி இல்லை என்ற சோகமும் ஏக்கமும் நெஞ்சை நெருடியது!
- என்.சண்முகம், திருவண்ணாமலை.

புகழ் போதையில் தள்ளாட்டம் போடாத சிவகார்த்திகேயனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவரது அவையடக்கமான நேர்மை முகம், நேர்முகத்தில் வெளிப்பட்டது!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஆச்சி மனோரமா பற்றிய பகீர் வதந்தி எல்லோருக்கும்தான் பரவியது. அவரை பேட்டியெடுத்து, போட்டோ எடுத்து, ஆச்சி ஹேப்பி என அவர் ரசிகர்களுக்கு நிம்மதி தந்தது ‘குங்குமம்’ மட்டும்தான்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

‘தயாரிப்பு ஃபர்ஸ்ட், டைரக்ஷன் நெக்ஸ்ட்’ என்று சிம்ரன் சொல்வதெல்லாம் சரிதான். இரண்டுக்கும் ‘இடை’யில் நடிப்பு என ஒன்று இருக்கிறதே... அதைத் தொடர்ந்தால்தானே எங்களுக்கும் அவருக்கும் ‘இடை’வெளி இல்லாதிருக்கும்!
- மு.மதிவாணன், அரூர்.

ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் இணையும் ஓரினச் சேர்க்கை குறித்த விவாதம் பலருக்கு பாலியல் தீர்வுக்கான வழி வகுக்கத் தவறவில்லை!
- இராம.கண்ணன், திருநெல்வேலி-2.

உயரமானவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிரமம்தான். ஆனால், அதையே ப்ளஸ் ஆக்கி போட்டோகிராபர்களாக அவர்கள் ‘உயர்வது’ சூப்பர் மூவ்! உயரமானவர்கள் அசோசியேஷன் வாழ்க, வளர்க!
- ப.இசக்கி பாண்டியன், சென்னை-81.

‘வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என அன்றே சொன்னார் அண்ணா. இன்றும் வடக்கு ஆட்சியாளர்கள் தமிழக ரயில்வே திட்டங்களை திட்டமிட்டுப் புறக்கணிப்பது, இந்திய இறை
யாண்மைக்கே செய்கிற துரோகம்!
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

போனால் வரமுடியாது எனத் தெரிந்தும் செவ்வாய் கிரகப் பயணத்துக்கு தயாராகி நிற்கும் சாரதா, சாதாரணப் பெண் அல்ல... பாரதத் தாயின் வீரக் குழந்தை!
- கன்யாரி, நாகர்கோவில்.

‘மீண்டும் பரணுக்குப் போனது பாகிஸ்தான் பட்டாசு’ கட்டுரையைப் படித்து முடிப்பதற்குள் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா, உள்ளூர் பட்டாசுகளை பரணில் இருந்து இறக்கிவிட்டதே!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

படத்தின் நஷ்டத்தை விநியோகஸ்தர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை நல்ல மனதோடு ரஜினி ஏற்படுத்தியதால்தான் அது ‘லிங்கா’ வரை தொடர்கிறது. இதுதான் தன் தலையில் தானே மண்..!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.