ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 8

‘அன்று நான் அந்த வார்த்தைக்கு எண் மதிப்பையும் கண்டுபிடித்து விட்டேன். அப்பாவிடம் அதன் மதிப்பை சொல்லவும் பாராட்டினார். அப்படியே என்னை தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று தமிழின் இலக்கணப்பாடுகள் அறியச்செய்தார்.

எனது ஆர்வத்தைக் கண்டு தமிழின் செழுமையான நூல்களான அகத்தியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, ஐஞ்சிறுங் காப்பியங்கள், பெருங்கதை, நந்திக்கலம்பகம், கல்லாடம், வில்லிபாரதம், முத்தொள்ளாயிரம், திருமந்திரம், பெரியபுராணம், கம்பராமாயணம், நளவெண்பா, திருவாசகம், சிவஞானபோதம், திருவிளையாடற்புராணம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, மனோன்மணியம் என்று சகலத்தையும் நான் படிக்கும்படி செய்தார்.

என் நூலகத்தில் இன்றும் இந்த நூல்கள் பத்திரமாக உள்ளன. இதில் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தும் உ.வே.சாமிநாதய்யர் என்பவரால் எவ்வாறு கண்டறியப்பட்டன என்பதையும் எனக்குச் சொன்னார். இந்த விஷயத்தில் அய்யருடைய தேடல் எனக்கு ஆச்சரியம் தந்தது.

ஒரு குக்கிராமத்தில் ஒரு தமிழ்ப் புலவர் வீட்டுப் பரண் மேல் ஏட்டுக்கட்டுகளாக இவை இருந்தனவாம். அய்யர் அவர்கள் தேடிச் சென்றபோது அந்தப் புலவர் வீட்டிலில்லை. வெளியூர் சென்றிருக்கும் அவர் திரும்பி வர இரு நாட்களாகலாம் என்னும் நிலையில் அய்யர் அவர் வரும் வரை காத்திருந்து, அங்கு கிடந்த கட்டிலில் படுத்து உறங்கி, பிற இடங்களில் சாப்பிடாதவர் என்பதால் மரத்தடியில் தானே ஒரு பானையில் சோறு பொங்கிச் சாப்பிட்டு பின் அந்த தமிழ்ப்புலவர் வரவும் அவர் அனுமதியுடன் தானே பரண் மேல் ஏறி அந்த ஐம்பெரும் காப்பியங்களை அள்ளி எடுத்தாராம்!’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

அந்தக் குடுகுடுப்பைக்காரனை வாட்ச்மேனான தங்கவேலுவும் துரத்தத் தொடங்கினான்.
‘‘யோவ் போய்யா.... எங்க வந்து என்னத்தய்யா சொல்லிக்கிட்டிருக்கே..? போய்யா போய்யா...’’
ஆனால், குடுகுடுப்பைக்காரன் அசரவில்லை.

‘‘நான் சொல்லல... ஜக்கம்மா சொல்றா! அர்த்த ராத்திரில நான் பலன் சொல்ல வந்தப்பவே இதைத்தான் சொன்னேன். ரெண்டு நாள்தான்... எமன் வரப்போறது நிச்சயம்’’ என்ற குடுகுடுப்பைக்காரன் குரல் ஓரளவு உள்ளே அனந்த கிருஷ்ணன், பத்மாசினி காதிலும் விழுந்தது. ப்ரியா வரையில் குடுகுடுப்பைக்காரன் கேரக்டரே அவளுக்குப் புதியது.‘‘யார் மம்மி அது... என்னென்னமோ சொல்லிக்கிட்டிருக்கான்..?’’ என்றாள்.

‘‘குடுகுடுப்பைக்காரம்மா..! அவங்க சொன்னா அப்படியே பலிக்கும்... இத்தனை வருஷத்துல இப்படி அபசகுனமா ஒரு வார்த்தை சொல்லி நான் கேட்டதேயில்லை. இப்ப எனக்கே சுருக்குனு இருக்கு. ஐயோ யார் உயிருக்கு ஆபத்தோ தெரியலியே...’’ - என்ற பத்மாசினியை அனந்தகிருஷ்ணன் சற்று ஆவேசமாக வெறித்தார். பிறகு, ‘‘ஏய்... லூசு! அறிவில்ல உனக்கு... தெருவுல எவனோ என்னத்தையோ சொன்னா உடனே நம்பிடுவியா? உனக்கு சிக்ஸ்த் சென்ஸ்னு ஒண்ணு இருக்கா இல்லையா?’’ என்று வெடித்தார்.

‘‘என்ன நீங்க பேசறீங்க... குடுகுடுப்பைக்காரங்க சொன்னா சரியா இருக்குங்க. அவங்க சுடுகாட்டுல பூஜை பண்ணிட்டு வந்து சொல்றவங்க.’’‘‘எந்த சுடுகாட்டுல பத்மா? இப்ப எங்க இருக்கு சுடுகாடு? திரும்பின பக்கமெல்லாம் ஸ்டார் ஹோட்டல் லெவலுக்கு கிரிமிடோரியம்தான் இப்ப இருக்கு. இதுல இவன் எந்த சுடுகாட்டுக்கு போய் பூஜை பண்ணான்?’’‘‘ஏங்க... கிராமங்கள்ல இன்னும் சுடுகாடுதானே நடைமுறைல இருக்கு..?’’

‘‘அப்ப சுடுகாட்டுல பூஜை பண்ணா இந்த மாதிரி எல்லாம் சொல்ல முடியுமா..?’’ - ப்ரியா இடையில் புகுந்து கேட்டாள்.‘‘ப்ரியா... உங்கம்மா ஒரு படிச்ச லூசு. இவ சொல்றத நம்பி நீயும் கேக்கறியே. வேற விஷயம் பேசுங்க...’’‘‘அம்மா லூசை விடு டாடி. ஒருத்தன் நம் வீட்டு வாசல்ல எப்படி இப்படி எல்லாம் சொல்லலாம்.

இது மிரட்ற மாதிரி இல்ல... நாம ஏன் போலீசுக்கு போன் பண்ணக் கூடாது?’’‘‘தாராளமா பண்ணு... அப்ப தான் இந்த மாதிரி ஜோசியம் சொல்லி பயத்தை உருவாக்கி அப்புறம் அந்த பரிகாரம் சொல்றேன், இந்த பரிகாரம் சொல்றேன்னு பணம் புடுங்கற இவன் மாதிரி ஆட்களுக்கெல்லாம் புத்தி வரும்.’’

-அனந்தகிருஷ்ணன் ஆமோதித்திட, தங்கவேலு உள்ளே வந்தவனாக, ‘‘அவன் போயிட்டாங்க... இப்பல்லாம் வேலை வெட்டி இல்லாதவன்லாம் குடுகுடுப்பைக்காரனாயிடறான். பாவம் அவங்க’’ என்றான்.‘‘அப்படின்னா?’’ - ப்ரியா ஷார்ப்பாகக் கேட்டாள்.‘‘என்னம்மா கேக்கறீங்க?’’‘‘இல்ல, பாவம் அவங்கன்னியே..?’’

‘‘அதுங்களா...? குடுகுடுப்பைக்காரங்கன்னு ஒரு இனம்மா! குறி சொல்றதுதான் அவங்க தொழில். அமாவாசை ராத்திரி மயான பூசை செய்துட்டு வந்து வீட்டு வாசல்ல நின்னா, அவங்ககிட்ட அந்த வாசலே பேசும். அவ்வளவு பவர்! பொலபொலனு கொட்டிட்டு போயிட்டே இருப்பாங்க. இப்ப அவங்க எல்லாரும் பள்ளிக்கூடம் காலேஜ்னு போய் குலத்தொழிலை விட்டுட்டாங்க. இன்னிக்கு வந்தவன் வேலை வெட்டி இல்லாத எவனோம்மா... அதான் போடான்னதும் முறைச்சுக்கிட்டே போயிட்டான்.’’

‘‘ஓ... இப்படி வீடு வீடா வந்து ஜோசியம் மாதிரி சொல்றவங்களுக்குதான் குடுகுடுப்பைக்காரங்கனு பேரா?’’‘‘ஆமாம்மா... பட்டணத்துக் காரங்களுக்கு இதெல்லாம் புதுசாதாம்மா தெரியும். ஆனா காலகாலமா இது நம்ம நாட்டுல இருக்கற விஷயம்மா...’’
‘‘வெரி இன்ட்ரஸ்ட்டிங்...’’

‘‘ப்ரியா, போதும், இந்த பேச்ச விடு. பை த பை நான் உயிர் தப்பி வந்துருக்கேன். எப்படின்னு கேள்...’’- அனந்தகிருஷ்ணன் டாபிக் மாறினார். தங்கவேலுவும் விலகினான்.
‘‘டாட்... என்ன சொல்றே நீ?’’

‘‘ஆமாம்மா... இன்னிக்கு நியூஸ்ல கூட ஒரு ஃப்ளைட் அப்ஸ்காண்ட்னு படிச்சிருப்பியே?’’‘‘ஆமாமா... அதுக்கென்ன டாட்?’’‘‘அதுல நான் போக வேண்டியது. நல்லவேளையாக டிக்கட் கன்ஃபார்ம் ஆகாம நான் வேற ஃப்ளைட்ட பிடிச்சு வந்தேன்!’’‘‘அப்படியா?’’‘‘ஆமாம்மா... அதுல போயிருந்தா உங்கம்மா கலர் கலரா புடவை கட்றாளே... அப்படி கட்ட முடியாத நிலை வந்துருக்கும்.’’
‘‘டாடி... ஏன் இப்படி எல்லாம் பேசறே... அதான் நல்லபடியா வந்துட்டீங்களே - அப்புறம் என்ன?’’

‘‘சொல்றேம்மா... இப்ப நினைச்சாலும் எனக்கு பகீர்னு இருக்கு. பாவம் சைன்டிஸ்ட் பகீரதன்...! நம்ப நாட்டுக்கு பெரிய இழப்பு...’’‘‘டாடி... அவர் திரும்ப வரப்போறதில்லங்கறது உன் முடிவா?’’‘‘வந்தா சந்தோஷம்... ஆனா இதுக்கு முந்தி மாயமான எந்த ஃப்ளைட்ட கண்டுபிடிச்சாங்க - இதைக் கண்டுபிடிக்க..?’’- அப்பாவும் மகளும் விவாதத்தில் இறங்கிவிட்ட நிலையில் பத்மாசினி அந்த டிராகன் முத்திரை கொண்ட சூட்கேஸைத் திறக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்க... அதைக் கவனித்த அனந்தகிருஷ்ணன், ‘‘பத்மா... அது ரிமோட் லாக்ல இருக்கு.

இரு ரிமோட்ட ஆன் பண்றேன்’’ என்று பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டி அளவு ரிமோட் ஒன்றை எடுத்து கட்டை விரலால் அழுத்தவும் அந்த சூட்கேசிடமும் ஒரு சப்தம் கேட்டது. பத்மாவும் திறந்து பார்த்தாள். உள்ளே ஏராளமான புடவைகள்! சைனா சில்க்ஸ்... அடுத்த நொடியே இந்திய பெண்களுக்கு மோட்சத்தையும் விட மேலானவை புடவைகள் என்பதை பத்மாசினி தன் பிளந்த வாய் கொண்டு நிரூபித்தாள்.

‘‘பாத்தியா ப்ரியா உங்கம்மாவை... இந்த நாட்டுல நான் வேல பாக்கற ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியோ இல்ல ஒரு ஐ.டி கம்பெனியோ கூட பெரிய லாபமில்லம்மா. லாபம்னா நகைக்கடையும் புடவைக் கடையும்தான்..! எவ்வளவு அடிச்சாலும் தாங்கின காமெடியன் வடிவேலுவைவிட இவங்க மோசம்...

எவ்வளவு ஏமாத்தினாலும் தாங்கறாங்க...’’ என்று மகளிடம் ஜாலியானார் அனந்தகிருஷ்ணன். அப்போது வாசற்புறம் கணபதி சுப்ரமணியனின் ஹாரன் சப்தம். தங்கவேலு கேட்டைத் திறக்க கார் உள்நுழைய வள்ளுவரோடு கணபதி சுப்ரமணியனும் இறங்கினார். பத்மாசினி அந்தப் பெட்டியோடு விலகிவிட்டாள்.

காரை விட்டு இறங்கின வள்ளுவர் தங்கவேலுவை ஒரு மாதிரி பார்த்தார். தங்கவேலு அவரை உள்ளே விட மறுத்திருந்தான். இப்போதோ பெட்டி படுக்கையோடு வந்து நிற்கிறார்.
‘‘என்ன பாக்கறே... நான் இப்படி கார்ல வந்து இறங்குவேன்னு நீ நினைக்கலல்ல..?’’ - அவனிடம் கேட்கவும் அவன் விழித்தான். ‘‘நீங்க வாங்க மிஸ்டர் வள்ளுவர். தங்கவேலு, லக்கேஜை எடுத்துக்கிட்டு போய் என் ரூமுக்கு பக்கத்து ரூம்ல வச்சுடு’’ என்றார் கணபதி சுப்ரமணியன்.

இருவரும் ஹாலுக்குள் பிரவேசித்திட, ப்ரியா ஆச்சரியமாகப் பார்த்தாள்.‘‘என்ன குட்டி பாக்கறே... இவர்தான் அந்த வள்ளுவர்!’’‘‘ஓ... வெரி நைஸ்... ஹலோ சார்...’’

வள்ளுவர் சிரித்தார். அனந்த கிருஷ்ணனிடம் விழிப்பு!‘‘என்னடா நீ எப்ப வந்தே?’’‘‘ஜஸ்ட் நௌ...’’‘‘விசிட் ட்ரிப்தான் போல இருக்கே?’’‘‘அஃப்கோர்ஸ்...’’‘‘ஓ.கே.... டேக் ரெஸ்ட்... மிஸ்டர் வள்ளுவர், இவன் என் ஒரே மகன் அனந்தகிருஷ்ணன். மாசம் முப்பது நாள்னா அதுல இருபது நாள் வெளிநாட்டுலதான் இருப்பான். இவ என் செல்லப்பேத்தி ப்ரியதர்ஷினி... ஆனா நான் குட்டினுதான் கூப்பிடுவேன்!’’

‘‘இனி அப்படி கூப்பிடாதீங்கய்யா...’’  - வள்ளுவர் பட்டென்று சொல்லவும் கணபதி சுப்ரமணியனின் முகத்தில் சற்று திகைப்பு. ‘‘குட்டிங்கற பேர் நல்ல பேர் இல்லங்க. ஆண் பிள்ளைகள குட்டினு கூப்பிட்டு வளர்த்தா ரவுடிப் பயலாகிடுவாங்க. பெண்களும் திருட்டு, பொய்னு தப்பா நடக்க அஞ்சமாட்டாங்க. அதான் சொன்னேன்...’’
‘‘என்ன நியூமராலஜியா?’’

‘‘இல்லீங்க... நான் சொன்னது சப்தவிலாசங்க...’’‘‘சப்தவிலாசமா?’’‘‘ஆமாங்க... சப்தவிலாசம்னு ஒரு ஏட்டுக் கட்டு இருக்குது. அதுல நம்ம பேச்சைப் பத்தி விரிவா சொல்லியிருக்கு. நமக்கான பேருங்கறது ஒரு சாவி மாதிரி... அதைக்கொண்டு தான் நம்மை ஒருத்தர் திறக்கறார். ஆகையால், ஒரு வார்த்தைல நல்ல அதிர்வோட பேர் இருக்கணும்னு அதுல சொல்லியிருக்கு. பட்டு, குட்டி, ஈஸ்வரிங்கற பேரெல்லாம் அதிக அதிர்வு கொண்டவை.’’‘‘அப்ப உங்க உதிரமுத்துங்கற பேர்?’’

‘‘ரத்தத்தை குறிக்குதுங்க... ரத்தம்கறது இரண்டாவது தாய்ப்பால். அதுவும் காலமும் ஒண்ணுங்க... காலம் நிக்காம ஓடிக்கிட்டே இருக்கற மாதிரிதான் ரத்தமும் ஓடிக்கிட்டு இருக்கு. ரத்தம் ஒருத்தர் உடம்புல நிக்கும்போது அவர் வரைல காலமும் நின்னு போயிடுது.இதை மனிதன் தன் அறிவால எல்லாம் எந்த வகையிலயும் உருவாக்க முடியாது. இது உருவாகணும்னா உயிருள்ள உடம்பு வேணும்.

உயிருள்ள உடம்புங்கறது கடவுளோட படைப்பு. அந்த வகையில ரத்தம் கடவுளோட படைப்பு. ஆகையால் இதை தானம் செய்யறதும் பெரிய விஷயம்ங்க...’’ - உதிரமுத்து வள்ளுவர் சொன்ன கருத்தைக் கேட்டு ப்ரியா, அனந்தகிருஷ்ணன், கணபதி சுப்ரமணியன் என்று மூன்று பேருமே பதில் கூற முடியாத ஒரு சிந்தனைக்கு ஆளாகியிருந்தனர்.

‘‘என்னங்க எதுவும் பேசாம வெறிக்கிறீங்க... நான் சொன்னதெல்லாம் சத்யம்ங்க... ரத்தம் காலத்தோட சம்பந்தப்பட்டதால நானும் காலம் சம்பந்தப்பட்ட ஜோசியனா இருக்கேங்க...’’
‘‘மிஸ்டர் வள்ளுவர்! உங்களை என்னால பாம்புன்னும் நினைக்க முடியல... பழுதுன்னும் நினைக்க முடியல. நீங்க சொன்ன விஷயங்கள் யோசிக்க வேண்டியவைதான். ஆனா எனக்கு இந்த நியூமராலஜிலல்லாம் நம்பிக்கை கிடையாது. அதுலயும் பேர்ல ஸ்பெல்லிங்ல ஒரு ‘ஏ’வை கூட்டிக்கறது குறைச்சுக்கறது எல்லாம் என் வரைல காமெடி!’’‘‘காமெடியா நினைச்சா சிரிச்சிட்டு போங்க. ஆனா நீங்க சிரிக்கறதால நியூமராலஜிக்கு எந்த கேடும் வந்துடப்போறதில்ல... அத ஞாபகத்துல வச்சுக்குங்க...’’

வந்த வேகத்தில் நின்றபடியே பேசிக்கொண்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது.‘‘உக்காருங்க வள்ளுவர்... எங்க அந்த முத்தழகு’’ - அவர் கேட்க, அவளும் எதிரில் வர, ‘‘யாராவது வீட்டுக்கு வந்தா குடிக்க தரணும்கற ஹாஸ்பிடாலிடி உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?’’- கணபதி சுப்ரமணியன் முத்தழகுமேல் பாய அவளும் சற்று விதிர்த்தாள்.
‘‘போ... போய் காஃபி கொண்டு வா...’’

‘‘ஐயா அந்த கருமமெல்லாம் வேண்டாங்க. மோர் போதும். முடிஞ்சா அதுல கொஞ்சம் கொத்தமல்லியை கிள்ளிப்போட்டு கொண்டுவாம்மா...’’ என்று திருத்தினார் வள்ளுவர்.‘‘ஓ... காஃபி உங்களுக்கு பிடிக்காதோ?’’‘‘ஆமாங்க... அதுக்கு எங்க அகராதில மலைமோகினினு பேர். மோரை நாங்க ராஜமோகினிம்போம்.

மலைமோகினி பிடிச்சா பித்தம் தலைக்கு ஏறும். சீக்கிரமே நரை விழும். கபாலம் எண்ணெய் பூக்கும். யோக விஷயங்களோட போராட வேண்டி வந்துடும். ராஜமோகினி அப்படியில்ல... சிறுநீரகமும், கணையமும் இவளால சுகமா இருக்கும். மலச்சிக்கல் வராது. குறிப்பா வியர்வை நாறாது. இந்த டி.வி விளம்பரத்துல வர்ற மாதிரி புஸ்சு புஸ்சுனு அமில திரவங்களை நாட வேண்டாம்’’
- என்றபடியே சோபாவில் அமர்ந்த வள்ளுவர், அமர்ந்த வேகத்தில் எழுந்தவராக கீழே கார்ப்பெட் மேல் சப்பணமிட்டு அமர்ந்தார்.‘‘என்ன இது... மேல உக்காருங்க...’’

‘‘இல்லய்யா... இந்த மெத்த சுகம் உடம்புக்கு நல்லதில்ல. கால்மடக்கி உட்கார்றதுதான் சரியான பழக்கம். இந்த நாற்காலி பழக்கம் ராஜாக்களுக்கு சரி. நான்லாம் சாமான்யன்...’’ - வள்ளுவர் வார்த்தைக்கு வார்த்தை அசர அடித்தார். சாமான்யன் என்று சொல்லிக்கொண்டாலும் ப்ரியாவின் மனது ஒரு குருநாத கம்பீரம் அவரிடம் இருப்பதாகக் கருதியது.
ப்ரியாவும் அசந்துதான் போயிருந்தாள்.

அவளுக்குள் இப்போது ஒரு சந்தேகம். அதைக் கேட்கவும் செய்தாள்.‘‘ஆமாம்... காபியை நீங்க மலைமோகினின்னு எதனால சொன்னீங்க?’’‘‘அதுவாம்மா... மோகினின்னா மோகத்தை உண்டாக்கி ஆசையை உண்டாக்கி நம்பளை சிக்க வைக்கற ஒரு சக்தின்னு அர்த்தம். காப்பிக்கொட்டை மலைல விளையறதாலயும், நம்பள அடிமைப் படுத்திட்றதாலயும் அப்படிச் சொல்வோம். இதுல ராஜமோகினின்னு மோரை சொல்லவும் காரணமுண்டு. மோருக்கு அடிமையானா உடம்பு ராஜா மாதிரி இருக்கும். அதனால தான் அந்த பேர்...’’

-வள்ளுவரின்  விளக்கம் மிக நேர்த்தியாக இருந்தது. இப்படிப்பட்டவரா இன்னும் இரண்டு நாளில் சாகப்போகிறவர்? அவரைப் பார்த்தாலும் அப்படித் தெரியவில்லை. தன் ஜோசியத்தை நம்பும் அவரிடம் பயமிருப்பதாகவும் தெரிய வில்லை. அதே சமயம் சற்று முன் குடுகுடுப்பைக்காரன் வாசலில் சொன்னது ப்ரியாவுக்குள் நினைவுக்கு வரவும் அவளிடம் ஒரு அசாதாரண மாற்றம்! 

இளம்பிறை

பெண்ணுரிமை என்பது வாழ்வின் குறிக்கோளை அடைய தடையற்று இருப்பதிலும் அதை உணர்வதிலும் இருக்கிறது. பெண் விடுதலை என்பது யாரும் யாரிடமும் கெஞ்சிப்பெறும் பிச்சையல்ல. அது பிறப்புரிமை. நம் மனதின் விடுதலையை நேசிக்கும், உணரும் அதேநேரத்தில் மற்றவரின் விடுதலை உணர்வைப் போற்றுவதிலும் மதிப்பதிலும் அதன் உன்னதம் கூடுகிறது.

கவிதா முரளிதரன்

சமூகத்தின் நியாயத் தராசுகள் ஆண்கள் என்று வரும்போது இயல்பாகவும், பெண்கள் என்று வரும்போது கலாசாரத்தின் மீதேறி நின்றும் எடை போடுவது ஏன்? ஒரு பெண் தானும் ஒரு மனுஷியாக (மனிதராக!) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம்தான் பெண்ணியம். அதற்கான தீர்வுதான் பெண்ணுரிமை. பெண்ணுரிமை என்பது மனித உரிமை!

வண்ணதாசன்
கற்றைச் சிறகுடன் வானில் பறப்பது
ஒற்றை இறகாக காற்றில் மிதப்பது
குடை இருக்கும்போதும் மழையில் நனைவது
கூடு இருக்கும்போதும் கிளையில் அமர்வது
வேண்டும் என்பதை தேர்ந்து எடுப்பது
வேண்டாம் என்பதை திடமாய் மறுப்பது
பெண்ணென பிறரால் உணர்த்தப்படாதது
பெண் என தானே தன்னை உணர்வது

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்