மணப்பெண் இப்படியும் இருக்கலாம் பாஸ்!



புதுமை கல்யாண பயோடேட்டா!

பெயர்    :    இந்துஜா பிள்ளை என்கிற ஐ.பி
பாலினம்    :    டாம்பாய்
உயரம்    :    5.4
மதம்    :    நாத்திகம்
திருமணம்    :    தன்னையேமணந்துகொண்டவள்
படிப்பு    :    பி.இ

வருமானம் :         என் தேவைக்கு அதிகமாககூடுதல் விவரங்கள்: நான் பெண்மை நிறைந்த பெண்ணெல்லாம் இல்லை. எனக்கு பணம் செலவழிக்கும் வியாதி இல்லை. நீண்ட கூந்தல் வளர்க்க மாட்டேன். டி.வி பிடிக்காது. வாசிக்கும் பழக்கமே இல்லை.

 நன்றாகப் பழகுவேன்... ஆனால் நட்பை விரும்புவதில்லை. கல்யாணம் செய்துகொள்வதற்கான பொருளாக நான் இருக்க மாட்டேன். - கல்யாணத்துக்கு மணப்பெண் விவரம் தரச் சொன்னால், இப்படி யாராவது தருவார்களா? தந்திருக்கிறார் இந்தத் தமிழ்ப்பெண்... இதற்கென்றே இவர் தொடங்கியிருக்கும் marry.indhuja.com  தளம், லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘‘நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. சேலம்தான் ஊர். பி.இ முடிச்சிட்டு இப்ப பெங்களூருவுல வேலை பார்க்கறேன். 23 வயசு ஆயிடுச்சுன்னா வீட்ல மாப்பிள்ளை பார்க்க மாட்டாங்களா? எங்க வீட்லயும் பார்த்தாங்க.

நம்ம வீடுகள்ல எல்லாம் பி.இ படிச்சிட்டு வேலை பார்த்தாலே சாஃப்ட்வேர் எஞ்சினியர்னு சொல்லிக்குவாங்க. எங்க அம்மாவும் அப்படித்தான். பொண்ணு சாஃப்ட்வேர் எஞ்சினியரா இருக்கானு ஒரு மேட்ரிமோனியல்ல கொடுத்துட்டாங்க.

ஆனா, நான் செல்போன் ஆப் டிசைனிங் கம்பனியில மேனேஜ்மென்ட் வேலையில இருக்கேன். இது சாஃப்ட்வேர் எஞ்சினியரிங் கிடையாது. இந்த மேட்டர்லயே என்னைப் பத்தின சரியான தகவல் போய்ச் சேரலை பாருங்க.

இப்படி நம்மளைப் பத்தி ஆகா ஓகோனு பெத்தவங்க போடுற பில்டப்பைப் பார்த்து வர்ற மாப்பிள்ளை, நாளைக்கு அது சரியில்ல இது சரியில்லன்னா யாருக்கு நஷ்டம்? இதெல்லாம் புரிஞ்சுதான் என்னைப் பத்தி நானே ஒரு மணப்பெண் ப்ரொஃபைல் உருவாக்க நினைச்சேன்.

நார்மலா நம்ம ஊரு வரன் பார்க்கும் வெப்சைட்ல வழக்கமா ஒரு ஃபார்ம் வச்சிருக்காங்க. அதுலதான் நம்ம விவரங்களை நிரப்பணும். என் கேரக்டர் அதுக்கும் மேல... ஃபார்மெல்லாம் பத்தாது. அதனால தான் தனி வெப்சைட்டே தொடங்கிட்டேன்!’’ - பெரிய இன்ட்ரோ என்றாலும் நறுக்கென கொடுக்கிறார் இந்துஜா.தான் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என இவர் போட்டிருக்கும் எதிர்பார்ப்புகள் இதையெல்லாம் விட டெரர் ரகம்.

“ஒரு பையன்(இது முதல் குவாலிபிகேஷன்)... தாடி வைத்திருந்தால் நல்லது... உலகத்தை தரிசிக்கும் ஆசை இருக்கணும். அவன் தேவைக்கு அவன் சம்பாதிச்சுக்கணும். தன் வேலையை வெறுக்கக் கூடாது.

ரொம்ப குடும்பப் பையனா இல்லாம இருந்தா பெட்டர். குழந்தைகளை வெறுப்பவனுக்கு கூடுதல் மார்க் உண்டு. நல்ல குரலும் கவர்ச்சிகரமான தோற்றமும் இருந்தால் சூப்பர். ஒரு 30 நிமிஷமாவது பேசுறதுக்கு சரக்கிருக்கணும்!”- இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது சரியா?

‘‘ஏங்க கூடாது? எப்ப பார்த்தாலும் ஃபேமிலி சென்டிமென்ட்னு இருக்க இதென்ன சீரியலா? வாழ்க்கை. குழந்தைகளை வெறுக்கணும்னு நான் போட்டிருக்கேன். அதுக்காக ரோட்ல போற குழந்தைகளையெல்லாம் கிள்ளி வைக்கணும்னு அர்த்தமில்ல. கண்டிப்பா ஒரு குழந்தையைப் பெத்துக்கிட்டு, அதை குண்டா வளர்த்து, கான்வென்ட்டுக்கு அனுப்பி, படிக்கலைன்னா அடிச்சி டார்ச்சர் பண்றது இருக்கில்ல...

அந்த வழக்கமான மனநிலை வேணாம்னு நினைக்கிறேன். குழந்தை பிறந்தா அதை இயல்பா வளர்க்கணும். இல்லாட்டி பெத்துக்கவே கூடாது!’’ என்கிற இந்துஜாவுக்கு இப்போது வந்து குவிகின்றனவாம் எக்கச்சக்க கல்யாண ப்ரபோசல்ஸ்!

‘‘பசங்க நிறைய பேர் ‘உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் தேடிட்டிருந்தேன்’னு ஃபீல் பண்றாங்க. ‘கட்டுனா உன்னதான் கட்டணும்’னு கிளம்புறாங்க. ஆனா, நம்ம வெப்சைட்டை அவங்க அப்பா, அம்மாகிட்ட காட்டும்போது செம டோஸ் விழுது. ‘இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகுமா’னு கழுவிக் கழுவி ஊத்தறாங்க! என்னங்க பண்றது? இயல்பா இருக்கறது இங்கே அவ்வளவு தப்பா தெரியுது!’’‘‘உங்க அப்பா, அம்மா என்ன சொன்னாங்க?’’

‘‘அவங்க ஹேப்பி... பொண்ணுக்கு இப்படி வரன் குவியுதே... சந்தோஷமாதானே இருக்கும். உள்ளதைச் சொல்லிடறது பெஸ்ட்டுனுதான் இப்ப அவங்களும் நினைக்கிறாங்க. கல்யாணத்துக்காக நாம தலையைக் குனிஞ்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு நடிக்க முடியும்? கழுத்து வலிக்காது?

இன்னிக்கு அதிகமாகிட்டிருக்குற டைவர்ஸுக்கும் குடும்பப் பிரச்னைகளுக்கும் என்ன காரணம் தெரியுமா? கழுத்தை நீட்டும் போதும் கயித்தைக் கட்டும்போதும் ஆம்பளையும் பொம்பளையும் வேற ஆள் மாதிரி தன்னை வெளிக்காட்டிக்கறதுதான்.

போகப் போக அது பொய்யினு தெரியும்போது பிரச்னை ஆகுது. சும்மா ஃபேஸ்புக்ல சீன் போடுறதை நம்பி கல்யாணம் வரை ரிஸ்க் எடுக்குறவங்க அதிகமாகிட்டாங்க. போலியான எதிர்பார்ப்புகளோட அப்படியொரு மோசமான கல்யாண வாழ்க்கை பொண்ணு க்கு அமையணும்னு எந்த அப்பா அம்மா விரும்புவாங்க... சொல்லுங்க?’’ - படபட பட்டாசாய் வெடித்து முடிக்கிறார் இந்துஜா. இது தமிழச்சிக்கே உரிய தில்!

- டி.ரஞ்சித்