நிலம் பிடுங்கும் சட்டத்துக்கு என்ன அவசரம்?



எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கின்றன. நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கிறது. அன்னா ஹசாரே முதல் மேதா பட்கர் வரை அத்தனை பேரும் எதிர்த்துப் போராடுகிறார்கள்.

தேசம் முழுக்க எல்லா விவசாய சமூகங்களும் கொதிக்கின்றன. ஆனால், எதற்கும் செவி சாய்க்கத் தயாரில்லை மத்திய அரசு. விவசாயிகளிடமிருந்து கேள்விமுறையின்றி நிலங்களைப் பிடுங்கி தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் ‘நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை’ நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்கிறார் பிரதமர்.

நிலத்தோடு இந்தியர்களின் தொடர்பு உணர்வுபூர்வமானது. ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லும் சந்ததி சின்னமாக இருப்பது நிலம்தான். நிலத்தின் உரிமையாளன் தன் தேவைக்காக நிலத்தை விற்பது வேறு. தேசத்தின் கட்டமைப்பான சாலைப் பணிக்கோ, அணைகளுக்கோ, ரயில் பாதைகளுக்கோ நிலத்தை மனமுவந்து வழங்கலாம். ஆனால் தற்போது கொண்டு வரப்படுகிற அவசரச் சட்டம் மக்களின் உரிமையைப் பறிப்பதோடு, சர்வாதிகாரமாக நிலங்களைப் பிடுங்கி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க வகைசெய்கிறது என்பதே எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு.

ஏற்கனவே ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பிடுங்கப்பட்டு கான்க்ரீட் கட்டுமானங்களாக உருமாற்றப்பட்டு விட்ட நிலையில், மிஞ்சி
யிருக்கும் நிலங்களையும் கேள்வியே இல்லாமல் பறிக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்ற ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள்? 1894ல் பிரிட்டிஷ்காரர்கள்தான் இந்தியாவின் முதல் ‘நிலம் கையகப்படுத்துதல் சட்ட’த்தைக் கொண்டு வந்தார்கள். அதன்படி, மொத்த நிலமும் அரசுக்குச் சொந்தமானது. பட்டாதாரர்கள் நிலத்தின் ‘உரிமை’யாளர்கள்.

‘உரிமை’க்குரிய நஷ்டஈட்டைக் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் அரசு நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். நஷ்டஈட்டை அதிகப்படுத்தக் கோரலாமே தவிர, நிலத்தைத் தர மறுக்க முடியாது. சுதந்திரம் கிடைத்து 66 ஆண்டுகளாக வெள்ளையர்கள் உருவாக்கி வைத்த அதே சட்டத்தைப் பயன்படுத்தித்தான் இந்திய அரசுகள் மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி, அணைக்கட்டுகளையும், நிலக்கரிச் சுரங்கங்களையும், சாலைகளையும் உருவாக்கின.

நிலத்தை இழந்த மக்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு பற்றி எந்த அரசாங்கமும் கவலைப்படவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 2013ம் ஆண்டில் ‘நிலம் கையகப்படுத்துதல் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்ட’த்தைக் கொண்டுவந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அந்தச் சட்டத்தை பி.ஜே.பி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன.

அச்சட்டம், மக்களின் பக்க மிருந்து நிலம் கையகப்படுத்து தலைப் பார்த்தது. நிலத்தைக் கையகப்படுத்த அதன் உரிமையாளர் மட்டுமின்றி நிலத்தைப் பயன்படுத்துபவர்களின் ஒப்புதலையும் பெறவேண்டும் என்றது. மேய்ச்சல், புறம்போக்கு நிலங்களை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களின் நலனையும் முக்கியத்துவப்படுத்தியது.

அவர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்தையும் உறுதி செய்தது. நகர்ப்புற நிலங்களுக்கு சந்தை விலையை விட 2 மடங்கும், கிராமப்புற நிலங்களுக்கு 4 மடங்கும் அதிக விலை கொடுக்க வகை செய்தது. 80% நில உரிமையாளர்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தவிட வேண்டும் என்றும் உறுதிப்படுத்தியது.

அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்து இச்சட்டத்திற்கு ஆதரவளித்த பி.ஜே.பி, இப்போது அடியோடு மாற்றி மீண்டும் வெள்ளையர்களின் 1894 சட்டத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கிறது.

‘‘இந்தச் சட்டம், நிலத்தின் மீதான மக்களின் உரிமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது...’’ என்கிறார் சமூக ஆய்வாளர் குமார் அம்பாயிரம். ‘‘அரசு கேட்டால் மறுபேச்சில்லாமல் நிலத்தைத் தந்துவிட வேண்டும். நீதிமன்றத்துக்குச் செல்லவோ, இழப்பீடு போதவில்லை என்று முறையிடவோ முடியாது.

தலைமுறை தலைமுறையாக அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்கிற மக்களை நாடோடிகளாக அலைய விடத் துடிக்கிறது அரசு. ஏற்கனவே இந்தியாவை தனியார் நிறுவனங்கள் கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன. விவசாயம் உள்பட சிறு, குறு தொழில்கள் அனைத்தும் விளிம்புக்கு வந்துவிட்டன.

 ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா கம்பெனிக்காக 1000 ஏக்கருக்கு மேல் நிலத்தைக் கையகப்படுத்தித் தந்தார்கள். இன்று அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். டெல்லியில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தினார்கள். அதுவும் பயனற்றுக் கிடக்கிறது. திண்டுக்கல்லில் சிப்காட்டுக்காக 500 ஏக்கர் எடுத்தார்கள்.

அங்கு இதுவரை பெரிய அளவில் எந்தத் தொழிலும் நடக்கவில்லை. இப்போது அருகில் இருக்கிற லந்தக்கோட்டையில் 500 ஏக்கர் எடுக்க முயற்சிக்கிறார்கள். இப்படி பறிக்கப்படுகிற நிலம் குறிப்பிட்ட திட்டத்துக்குப் பயன்படாவிட்டால் வாங்கியவர்களிடமே திருப்பித் தரவேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை.

‘வேலை தருகிறோம்’ என்ற வார்த்தைக்கு மயங்கி, நிலத்தைக் கொடுத்துவிட்டு வாட்ச்மேனாகவும், கூலியாகவும் அதே நிலத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள் மக்கள். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இன்றுவரை போதுமான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. 30 வருடங்களுக்கு முன் நாகர்கோவிலில் அரிய மணல் ஆலைக்காக எடுக்கப்பட்ட நிலத்துக்கும் இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.

இச்சூழலில், இப்படியொரு அசுரச்சட்டம் கொண்டு வருவது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும்’’ என்கிறார் குமார் அம்பாயிரம். சமூக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனும் இதையே வலியுறுத்துகிறார். ‘‘ஒரு மனிதரின் நிலத்தை எடுத்து நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்த நேர்ந்தால், அந்த இழப்பால் அவருடைய வாழ்க்கைத்தரம் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

முடிந்தால் அவருடைய வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற இந்திய அரசியல் சட்டம் ‘நில உரிமையை உயிர் உரிமைகளில் ஒன்றாக’ச் சேர்க்கிறது. ஆனால் இங்கே நிலம் கையகப்படுத்தல் என்பது வன்முறையாக நிகழ்கிறது.

ஒரு கையில் பணக்கட்டும், இன்னொரு கையில் லத்தியுமாகத்தான் நிலம் எடுக்க வருகிறார்கள். நீங்கள் எந்தக் கோரிக்கையை முன்வைத்து களத்துக்கு வந்தாலும் பதில் சொல்ல போலீஸ்தான் வருகிறது. ஆங்கிலேயர் காலம் தொட்டு இன்று வரை பல்லாயிரம் இந்தியர்கள் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு கூலிகளாக மாறியிருக்கிறார்கள். அதில் 80% பழங்குடிகள். 10% தலித்துகள். மீதமுள்ள 10% பிற்படுத்த சமூக மக்கள்.

2013ல் கொண்டு வரப்பட்ட சட்டம், நிலையைக் கொஞ்சம் திடப்படுத்தியது. இழப்பீடு, மறுவாழ்வு பற்றியும் பேசியது. ஓரளவுக்கு நம்பிக்கை துளிர்விட்ட தருணத்தில், பி.ஜே.பி அரசு மீண்டும் தேசத்தின் போக்கையே மாற்ற முனைகிறது. அரசுத் திட்டங்களுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளரிடம் எந்தக் கருத்தும் கேட்கத் தேவையில்லை.

மறுபேச்சில்லாமல் நிலத்தைக் கொடுத்துவிட வேண்டும். நிலத்துக்கான நஷ்ட ஈட்டை சூழலுக்கேற்றவாறு அரசு தீர்மானிக்கும். அதுபற்றி கேள்வி எழுப்பமுடியாது. நிலத்தின் பட்டாதாரர் தவிர வேறு எவருக்கும் நஷ்ட ஈடு தரப்பட மாட்டாது. மீள்குடியேற்றம், வாழ்வாதாரத்துக்கும் அரசு பொறுப்பேற்காது. இதுதான் அவசரச் சட்டத்தின் உள்ளடக்கம். ‘நிலத்தைக் கேட்டால் கொடுத்துவிட்டு ஓடிப்போ...’ அவ்வளவுதான்.

‘தேசிய நலன்’ என்பதை இந்த அரசு ‘நிறுவனங்களின் நலன்’ என்றே பார்க்கிறது. காரணம், ஆட்சியை நிர்ணயிக்கும் அதிகாரம், மக்களின் கையில் இருந்து நிறுவனங்களின் கைகளுக்குப் போய்விட்டது. மேலைநாடுகள் நிராகரிக்கிற தொழில்களை எல்லாம் சுமந்துகொண்டு இந்தியாவுக்கு வருகிற பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கும் சாதகமாகவே இந்த அவசரச் சட்டம் வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் எல்லாக் கதவுகளையும் மூடுகிறார்கள்.

நில உரிமையாளனுக்குரிய குறைந்தபட்ச உரிமைகளையும் பறிக்கிறார்கள். இந்தச் சட்டத்தை அனுமதித்தால் மக்களின் வாழ்வுரிமையே கேள்விக்குறியாகும்...’’ என்று எச்சரிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன். ‘‘நிலம் கையகப்படுத்தலில் இருக்கும் நெருக்கடியால் நிறுவனங்கள் வரத் தயங்குகின்றன.

புதிய தொழிற்சாலைகள் வராததால் வளர்ச்சி முடங்கி விட்டது. அந்நிலையை மாற்றவே இந்த அவசரச் சட்டம்’’ என்கிறது மத்திய அரசு. ‘நிறுவனங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி’ என்று நம்புகிற ஒரு அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?ஆங்கிலேயர் காலம் தொட்டு இன்று வரை பல்லாயிரம் இந்தியர்கள் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு கூலிகளாக மாறியிருக்கிறார்கள். எல்லோரும் அடித்தட்டு மக்கள்!

வெ.நீலகண்டன்