வயிறு



ஆற்றைத் தாண்டித்தான் அடுத்த ஊருக்குப் போக வேண்டும். அதற்கு குறுகிய மரப்பாலம் ஒன்றைப் போட்டிருந்தார்கள். ஒருவர் மட்டுமே நடக்க முடிகிற அந்தப் பாலத்தில் அந்த ஐந்து வயதுச் சிறுவன் அசட்டையாய் ஆடிப் பாடிக்கொண்டு நடந்தான்.

பின்னாலேயே அவன் அப்பாவும் அம்மாவும் உயிரைக் கையில் பிடித்தபடி!‘‘டேய், கொஞ்சம் தவறினாலும் உசிரு போச்சு. பார்த்து மெதுவா போடா!’’ - அப்பா காட்டுக் கத்தலாய்ச் சொன்னார்.பையன் அதை சற்றும் மதித்ததாகத் தெரியவில்லை.

‘‘நீயாச்சும் அவனை ஒழுங்கா கையைப் பிடிச்சி கூட்டிப் போயேன்!’’ அவர் தன் மனைவியை ஏவினார்.அந்தப் பெண் மகனை இழுத்துப் பிடித்து அரவணைப்பாக நடத்தி மறுகரையில் கால் வைத்த பிறகுதான் இருவருக்கும் உயிரே வந்தது. இனிதான் அவர்கள் பிழைப்பைப் பார்க்க வேண்டும்.‘‘அய்யா வாங்க... அம்மா வாங்க... ஒரு ஜாண் வயித்துக்காக கயித்துல ஆடுற புள்ளயப் பாருங்க. தட்டுல காச தாராளமா போடுங்க சார்...

போடுங்க...’’ - அந்தச் சிறுவனின் அப்பா மேளமடித்தபடி கூவினார். அம்மா உண்டியலை ஏந்திக்கொண்டு கூட்டத்தின் மத்தியில் வந்தாள். உயரக் கம்பங்களில் கட்டியிருந்த கயிறு மேல் நடந்துகொண்டிருந்தான் அந்தக் கழைக்கூத்தாடிச் சிறுவன்.    
           
கே.ஆனந்தன்