எனக்குள் ஒருவன்



ஒரே ஒரு மாத்திரை, இருவேறு உலகங்கள், மனிதர்கள் என இரண்டு வாழ்க்கையை ஒரே நேரத்தில் மாற்றி மாற்றிக் காட்டும் ஃபேன்டஸி கற்பனையே இந்த ‘எனக்குள் ஒருவன்’.கன்னடத்தில் ஹிட்டடித்த ‘லூசியா’ போட்ட தமிழ் வேஷம்தான் இந்தப் படம். கொஞ்சம் கவனம் தொலைந்தால் திகைப்பூட்டும் நெரிசல் கதையை முடிந்த வரையில் தெளிவான பாதையில் கொண்டு போன செய்நேர்த்திக்காகவே அறிமுக இயக்குநர் பிரசாத் ராமருக்கு பொக்கே!

தொடர்ந்த ஆச்சரியம் சித்தார்த்! சரியோ, தவறோ... பிடிக்கிற மாதிரியும் வித்தியாசமாகவும் தேர்ந்தெடுப்பதில் அவர் காட்டும் அக்கறைதான் சூப்பர்! டார்ச் அடித்து டிக்கெட் பார்த்து, வரிசையில் அனுப்பும் தியேட்டர் பாய்... கொஞ்சம் திமிரும் அதிக நேர்த்தியுமான சூப்பர் ஸ்டார்...

இப்படி இரண்டு விதங்களில் அடையாளம் தெரியாத வித்தியாசம் காட்டுகிறார். மாற்றி மாற்றி ஒரே ஆளாக முழு நேரம் வந்தாலும் அலுக்கவே அலுக்காதது அவர் நடிப்பு. தியேட்டர் பாயாக வெள்ளந்தியாகப் பேசி தியேட்டர்காரர் நரேனுக்கு விசுவாசம் காட்டுபவர், அடுத்த ஃப்ரேமில் ஏற்றிச் சீவிய நெற்றியுடன் கூலிங் கிளாஸில் ஊடுருவி பதில் சொல்லும்போது, அடடா! இப்படியே கடந்தால் இந்த இளைஞனுக்கு இன்னும் காத்திருக்கின்றன உயரங்கள்!

தூக்கம் வராத வியாதி இவ்வளவு விபரீதத்தில் கொண்டு போய் விடுமா என்ற பயங்கரத்திலேயே நகர்கிறது படம். காஃபி டே அவுட்டிங், பார்ட்டி டேட்டிங், அலட்சியத்தில் அதே நேரத்தில் சிக்கன வார்த்தைகள் பேசும் சுவாரஸ்யம் என சூப்பர் ஸ்டாரை கொண்டு போயிருக்கும் இயக்குநர், கடைசி வரைக்கும் அந்த டெம்போவை தவற விடாமல் இருப்பது சிறப்பு.

ஹீரோ சித்தார்த்திடம் நெருங்குவதிலும், தியேட்டர் பாய் அன்பில் நெகிழ்வதிலும் தீபா சன்னதி மாறுபட்ட நடிப்பில் வேகம் காட்டுகிறார். ஹீரோவாக நெருக்கத்தில் துள்ளுவது, அவரே சீண்டும்போது ஒரு நொடி யோசித்து, மறுநொடியில் காதலில் உருகுவது... பொண்ணுக்கு நடிப்பும் பிரைட்! கொஞ்சம் சிம்ரனின் சாயல் இல்லாமல் இல்லை.

மாத்திரை விற்கும் ஜான் விஜய், தியேட்டர் ஓனர் நரேன், நடிகை சிருஷ்டி என கேரக்டர்கள் எல்லாமே நச் ஸ்கெட்ச். தியேட்டர் பாய் - முதலாளி நட்பில் நேசம் விரிவது அழகு. அவ்வளவு சாஃப்ட்டாக புகுந்து நடிப்பதில் நரேன் நாளுக்கு நாள் மிளிர்கிறார்.சந்தோஷ் நாராயணன் என்று பெயரைப் பார்க்காமல் கூட சொல்ல முடிகிறது. மெலடியில் மனம் வருடும் சந்தோஷ், பின்னணியில் சுமார்! ‘பிரபலமாகவே...’, ‘ஏன்டி இப்படி...’ பாடல்கள் எடுத்த விதத்திலும், டியூன் போட்ட விதத்திலும் அள்ளுகின்றன.

அடுத்தடுத்து இரண்டு கேரக்டர்களின் விவரிப்பில் நடுநடுவே சுத்த விடுவது நிஜம். கொஞ்சம் திரும்பி கதவுப் பக்கம் பார்த்துவிட்டால் கூட, அடுத்து படத்தில் என்ன நேர்ந்தது என ஊகிப்பது சிரமம். கடைசியில் யார்தான் அசல் என்பது அதிர்ச்சி க்ளைமேக்ஸ். கோபி அமர்நாத்தின் கேமரா இருளில், பயத்தில், வீதிகளில் என பல வடிவம் எடுத்து சிறக்கிறது. அடுத்தடுத்த திருப்பங்களில், இன்னும் வேகமாக, குழப்பமில்லாமல் சென்றிருந்தால் இன்னும் ‘எனக்குள் ஒருவன்’ நெருங்கியிருப்பான்!

 குங்குமம் விமர்சனக் குழு