ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை



பிறருக்கென வாழும் ஜே.கே என்கிற சர்வானந்தின் தியாகம் சொல்லும் கதை.எதையும் ஐடியாவிற்குள் கொண்டு வந்து, ரசனை சேர்த்து விற்பனைக்கு வைத்துவிடும் சாமர்த்தியசாலி சர்வானந்த்.

அதிரடியாக உழைத்து அவர் நகரத்தின் பெரும் பணக்காரர்களுக்கே எரிச்சல் உண்டாக்க, அந்த எதிர்ப்பிலிருந்தும் சாமர்த்தியமாக வெளியே வருகிறார் சர்வானந்த். நித்யா மேனனும், சர்வானந்தும் இலக்கணம் மீறாத காதலோடு இருக்க, சர்வானந்தின் லட்சியப் பயணம் என்ன ஆனது என்பதுதான் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’யின் பக்கங்கள்.

எதையும் நினைத்தால் வியாபாரம் ஆக்கலாம் என நினைக்கும் சிந்தனையே படத்தின் புது அடையாளத்திற்கு துணை செய்கிறது. காலையில் பரபரப்பாக அலுவலகங்களுக்குச் செல்லும் தம்பதியினரின் வீடு அலங்கோலத்திலிருந்து அலங்காரமாகும் ஐடியா வெரிகுட்!சதா துறுதுறுவென்றிருக்கிற புத்திசாலி இளைஞனாக களை கட்டுகிறார் சர்வானந்த். ‘எங்கேயும் எப்போதும்’மில் பார்த்த அதே ஜென்டில்மேன் லுக்... கொஞ்சம் பேச்சில் தெலுங்கு வாடை வீசினாலும் தமிழில் உரையாடுகிற அழகு சூப்பர்.

ஆனால், மற்ற வேளைகளில் சதா இறுக்கத்தோடு, ஏதோ வேண்டுதல் மாதிரி இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. இருப்பினும், வம்பு தும்பு இல்லாத இளைஞனுக்கு சர்வானந்த் சிறந்த மாதிரி. படம் மொத்தமும் ஒரு தியாக உருவகத்திற்கு ரெடியாவது கண்கூடு. ஆனால் அதற்காக இடையில் இருக்கிற குதூகலமான இடங்களைக் கூட சீரியஸ் ஆக்குவதைத் தவிர்த்திருக்கலாம்.

எப்போதும் அழகான காதலை அருமையாய் பதிவு செய்யும் சேரன், இதில் ‘அதுக்கும் மேல’ காவியக் காதலுக்குக் கொண்டு போகிறார். சமயத்தில் ஹீரோவும் ஹீரோயினும் காதலிக்கிறார்களா இல்லையா என்பதிலேயே சந்தேகம் வருகிறது. அவ்வளவு டீசன்ட்!

கொஞ்ச நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜ் பிரகாசம். நித்யா மேனன் வழக்கம் போல் ஜொலிக்கிறார். அவர் ரேஞ்சுக்கு ஊதித் தள்ளுகிற வேடம்தான். அப்படியே செய்கிறார். நித்யா மேனன், சர்வானந்தின் கோவா பயணம் அழகான காதல் கவிதை. ஒரே ஒரு பாட்டில் கோவாவின் மொத்த அழகையும் காட்டிவிட்டு நிமிர்கிறது கேமரா. இப்படியொரு நண்பன், இவன் வாழ்க்கையில் இப்படித்தான் நடந்தது என வாழ்க்கைக் கதையைப் பதிவு செய்யும் பாணியில் படம் இருப்பதால், சராசரி ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய திருப்பங்கள் இல்லை. ஆனாலும், இந்த தைரியம் தமிழ் சினிமாவிற்கு புதுசுதான்.

சந்தானத்தை என்ன தான் அடக்கி ஒடுக்கி நடிக்க வைத்தாலும் குறும்பு ஆங்காங்கே கொப்பளிக்கிறது. மொத்தப் படத்தையும் உறுத்தாத ஒளிப்பதிவால் அழகியல் கூட்டுகிறது சித்தார்த்தின் கேமரா. பாடல்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜீவித்திருக்கிறார். ‘ஃபேஸ்புக் லாகின் பண்ணு...’ பாடல் மெகா ஹிட். பின்பகுதியைப் பொறுத்தவரை, பயணித்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் பயணிக்கும் உணர்வு. பத்து நிமிஷம் வெளியே போய்விட்டு வந்தாலும் ஒன்றும் நேர்ந்து விடாது என்கிற எண்ணம் வருகிறது.

சர்வானந்த் - நித்யா மேனன் காதலுக்கு இன்னும் உரமும் காட்சிகளும் சேர்த்திருக்கலாம். உன்னதம், தியாகம், காதல் உணர வைக்கும் அன்பு, எல்லாமே இருக்கிறது... ஆனால், சேரனின் வழக்கமான ரசனை அத்தியாயங்களின் லாவகம்தான் கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனாலும் இந்த ‘ஜேகே’யை நண்பனாக்கிக் கொள்ள முடியும்!

- குங்குமம் விமர்சனக் குழு