செல்வாரல்லர்



தற்செயலாகவே
பலமுறை பார்த்துக் கொண்டோம்...
பெருமாள்புரத்தின்
அந்தப் பள்ளிக்கூட வாசலில்
குழந்தையை அழைத்துச் செல்ல
இருவருமே காத்திருக்கின்றோம்...

அவள் அவளது குழந்தைக்காக
நான் எனது குழந்தைக்காக!
திரும்பித் திரும்பி பார்க்கிறாள்,

பார்வைகளின் சந்திப்பு
புன்னகையாக மாறிவிடக் கூடாதென்கிற
பக்குவத்தில்.
பார்த்துத் தொலைந்த
காலங்களின் மிச்சம்...

தொலைத்துப் பார்க்கும்
அச்சமாய் நீண்டுகொண்டிருக்கின்றது
காற்றடைத்த பைகள்
காலமடைத்த வலிகளால்
நிரம்பிப் போயிருந்தன
இக்கணத்தின் கனம்
அக்கணத்தில் காதலாயிருந்தது

சந்திப்பின் இறுக்கத்தை
தாங்க முடியாத மரம்
காற்றை உசுப்பி
சிலிர்த்துக் கொண்டது
உதிர்ந்துகொண்டிருக்கும்
சருகுகளும்

நினைவுகளும்
மௌனத்தின் முகமூடியை
மெல்ல மெல்லப்
பிய்த்துக்கொண்டிருக்கிறது
எந்நேரமும்
ஒரு துரோகம் நிகழ்த்தப்பட்டு விடலாம்.

எந்நேரமும் வந்துவிடலாம்
கண்ணிலிருந்து துளிகளோ
பள்ளியிலிருந்து குழந்தைகளோ
தற்செயலாகவே
பலமுறை பார்த்துக் கொண்டோம்...

வேண்டுமென்றே பார்க்காமல்
பிரிந்து சென்றோம்.
காத்திருப்பு
ஒரே குழந்தைக்காக
இருந்திருக்கக்கூடாதா?

ரசிகவ் ஞானியார்