குழந்தைகள் தான் ஹீரோ ஹீரோயின்... சூர்யாவுக்கு கேரக்டர்தான்!பசங்க 2 பாண்டிராஜ்

‘பசங்க’ மூலம் சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழா வரை போய், தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் டைரக்டர் பாண்டிராஜ். குட்டிப் பசங்களின் உலகத்தில் அவர் நடத்திய பால்ய திருவிழா இந்தத் தடவை இன்னும் அழகோடு ‘பசங்க 2’ என வருகிறது.

‘‘பெரியவர்களின் உலகத்தில் குழந்தைகளுக்கான இடத்தை யோசிச்சுப் பார்த்திருக்கோமா? அவர்கள் மனநிலையில் இருந்தே ஒரு கதை சொல்வதற்கான செயல் திட்டம்தான் இந்த ‘பசங்க 2’!’’ - ஆழ்ந்து பேசுகிறார் பாண்டிராஜ்.

‘‘என்ன படங்கள் செய்தாலும் திடீரென குழந்தைகள் உலகத்திற்கு வந்து விடுகிறீர்கள்..?’’‘‘எல்லோரையும் போல எனக்கும் குழந்தைகளை ரொம்பப் பிடிக்கும். அவங்களை படம் பிடிக்க நிறைய  பொறுமையும், விட்டுப் பிடிக்கிற குணமும் வேண்டும். நிஜத்தில் எனக்கு அப்படியொரு கோபம் வரும். ஆனால், ‘பசங்க 2’ மாதிரி படம் பண்ணும்போது அது போன இடமே தெரியாது.

சமயங்களில் நான் கோமாளி மாதிரி ஆகிவிடுகிற கூத்தெல்லாம் நடக்கும். இதில் மூணு படத்திற்கான உழைப்பைப் போட்டிருக்கேன். சின்னக் குழந்தைகள், ரெண்டு குடும்பங்கள், வகுப்பு நிறைய குழந்தைகள்னுதான் சீன்கள்.

பாடல்களில் 1,000 குழந்தைகளுக்கு மேல் இருக்காங்க. இத்தனை குழந்தைகள் இருக்கும்போது எத்தனைக் குறும்புகள் இருக்கும்! குழந்தைகளுக்கென  ஒரு மாயம் உண்டே... அது இதில் நிகழ்ந்திருக்கிறது. நம் அன்புக்குரிய குழந்தைகளின் வாழ்க்கையைச் சொல்கிற குட்டி வானவில் இந்தப் படம்!’’

‘‘ ‘பசங்க 2’ எதைப் பேசும்?’’‘‘ஒரு தடவை நண்பர் ஒருத்தர், ‘இன்னொரு பெண் குழந்தை பெத்துக்கக் கூட ஆசை. ஆனால், ஒரு பையனோட நிறுத்திக்கிட்டேன். இவன் படுத்துற பாடே பெருசா இருக்கு. ஒரு இடத்தில நிக்க மாட்டான். ஸ்கூல்ல பையனை அடிச்சுட்டான், உட்கார மாட்டேங்கிறான்னு ஒரே கம்ப்ளைன்ட்ஸ். கிட்டத்தட்ட நாலு அபார்ட்மென்ட், நாலு ஸ்கூல் மாறிட்டோம்!’னு சொன்னார்.

இது டிஸ்ஆர்டர் இல்லை. பில்கேட்ஸ், மைக்கேல் ஜாக்ஸன் இப்படி வந்தவங்கதான். இவங்களுக்கு ஐ.க்யூ 130க்கு மேல இருக்கு. டயர்ட் ஆகாமல், எனர்ஜி இருந்துட்டே இருக்கும். இந்த ஹைப்பர் எப்படி வருது? நாம் வளரும்போது ஓடி விளையாட, குதிச்சுத் திரிய மரம், மைதானம், கில்லி, டெனிகாய்ட்னு ஆயிரம் இருந்தது. இப்ப 600 ஸ்கொயர் ஃபீட் வீட்டுல அடைச்சு வச்சு அவங்க கம்ப்யூட்டர் கேம்ஸ்ல நெருக்கமாயிட்டாங்க. இந்தக் குழந்தைகளைக் கையாள நமக்குத் தெரியலை.

‘தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு எப்போது குழந்தைகளை கொண்டாடப் போகிறோம்’னு அப்துல் ரகுமான் சொல்வார். குழந்தைகள் கையைப் புடிச்சிக்கிட்டு நாம முன்னாடி நடப்போம். அவங்க குருவியைப் பார்க்கிறாங்களா, சாக்கடையைப் பார்க்கிறாங்களானு நமக்கு கவனம் கிடையாது.

குழந்தைகளை முன்னே விட்டு பின்னாடி நடக்கும்போதுதான் நமக்கு நிறைய கதைகள் தெரியும். அவங்களின் அழகு உலகம் புரிபடும். கோபத்தையோ, அன்பையோ ஒரு பார்வைக்குள் படம் பிடிச்சுக் காட்டுகிற அவங்க பக்குவம் தெரியும். இதில் அப்படி ஒரு குட்டிப் பையன், அப்படி ஒரு குட்டிப் பெண்... அவங்களோடு சேர்ந்த ரெண்டு குடும்பம்... இதில் டிராவல் ஆகிப்போறோம்!’’

‘‘இதில் சூர்யா எப்படி... ஆச்சரியம்!’’‘‘இதில் நிறைய நல்ல விஷயங்களை பாடம் நடத்தாமல் பக்குவமா சொல்லியிருக்கோம். குழந்தைகளின் கனவைப் புரிஞ்சுக்கிற விதம், இந்தச் சமூகம் அவங்களைக் கையாள்கிற பொறுப்பு பத்தியெல்லாம் நான் சொல்றதை விட சூர்யா மாதிரி ஒருத்தர் சொன்னா நல்லா இருக்கும். உங்களுக்கு கதை சொல்லணும்னு வாட்ஸ் அப் செய்தேன். ‘நான் கோவால இருக்கேன்.

ஈவினிங் வர்றீங்களா’னு பதில் வந்தது. நான் அதை சரியா படிக்காம சென்னையில் இருக்கார்னு நினைச்சிட்டு ‘வர்றேன்’னு சொல்லிட்டேன். அப்புறம், அரக்கப் பரக்க ஃப்ளைட் பிடிச்சி அதே ஈவ்னிங்ல அவர்கிட்ட போய் ஆஜர் ஆகிட்டேன். அவருக்கே ஷாக்! அடுத்து, ‘சார்... உங்களுக்குக் கதை சொல்ல வரலை. நாம இரண்டு பேரும் சேர்ந்த பேனரில் செய்தால் இந்தப் படம் நல்லா போகும்’னு சொன்னேன்.

கதையைக் கேட்டுட்டு, ‘இதை எத்தனை வருஷமா வச்சிருக்கீங்க’ன்னு கேட்டார். குழந்தைகள் பத்தி சின்னச் சின்ன டீடெயில் குருவி மாதிரி சேகரிச்சு வச்சிருந்தது அவரை ஆச்சரியப்படுத்தியிருக்கணும். ‘இந்த டாக்டர் கேரக்டர் நீங்க பண்ணினா நல்லாயிருக்கும். நினைச்சுப் பாருங்க’னு சொன்னேன். ‘ஓகே... நான் பண்றேன்’னு உடனே சொல்லிட்டார். அவ்வளவுதான்... இதில் அவரின் கேரக்டர் அவருக்கே புதுசு!’’‘‘அமலாபாலுக்கும் இடமிருக்கு போல...’’

‘‘அமலாவுக்கு அப்பதான் கல்யாணம் முடிஞ்சிருந்தது. ‘இனிமே நடிக்கவே மாட்டேன்’னு சொல்லிக்கிட்டு இருந்த நேரம். அப்ப பார்த்த ஒரு பேட்டியில் ‘சூர்யாவோட நடிக்கணும்னு இருந்தேன். நடிக்க முடியாமப் போச்சு’னு சொல்லியிருந்தார். பாவம், இந்தப் புள்ளை ஆசையை ஏன் நிறைவேத்தாம விட்டு வைக்கணும்னு என் நண்பர் டைரக்டர் விஜய்கிட்டே சொன்னேன். டீச்சர் ரோல், நல்ல ரோல், சினிமாவை விட்டுப் போகும்போது திருப்தியாப் போகட்டும்னு சொன்னேன். ‘சார், அவங்களுக்கு நடிக்கிற ஐடியா இல்லை. உங்களுக்காகக் கேட்டுப் பார்க்கிறேன்’னு சொன்னார். கதையை அமலாகிட்டே சொல்லி ஓகே வாங்கினேன். இப்ப அவங்க பேரு வெண்பா. பிரமாதப்படுத்தியிருக்காங்க.

கவின், நயனானு ஏழரை வயதுக் குழந்தைங்க ரெண்டு பேர்தான் ஹீரோ, ஹீரோயின்ஸ். சூர்யா, அமலா, பிந்துமாதவி, முனீஸ்காந்த், கார்த்திக் எல்லோரும் இதில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ்தான். நான், கேமராமேன் பாலசுப்ரமணியெம், பிந்துமாதவி யாருமே இந்தப் படத்தை பிஸினஸா பார்க்கலை. சம்பளம் பத்தி பேச்சு வந்தப்போ சூர்யாகிட்ட ‘மாசம் 5 லட்சம் கொடுங்க. ஆபீஸ், அசிஸ்டென்ட்ஸ் செலவுக்கு ஆகும்.

 பின்னாடி கொடுக்கிறதைக் கொடுங்க’னு சொன்னேன். ‘நாலு மாசத்தில் படத்தை முடிக்கிறேன்’னு சொன்னேன். அவரே ‘என்னங்க இப்படி சொல்றீங்க’னு கேட்டுட்டார். எந்த ஸ்கூல் நல்லது, சி.பி.எஸ்.இ, கவர்மென்ட், மெட்ரிகுலேஷன்னு வரிசைப்படுத்தும்போது ‘உலகத்திலேயே சிறந்த வகுப்பறை தாயின் கருவறை’னு ஒரு லைனும் வருது. அதை மீறி இங்கே ஒண்ணுமே கிடையாது. அபிமன்யு, பிரகலாதன் விஷயத்தில் என்ன நடந்ததோ அதுதான். படம் பார்த்திட்டு ‘நல்ல படம் செய்திருக்கீங்க’னு மலர்ச்சியில் சொன்னார் சூர்யா!’’

‘‘ ‘இது நம்ம ஆளு’ எப்ப வெளிவரும்?’’‘‘இந்த வருஷத்துக்குள்ள வந்திரும். இந்த வருஷத்திற்குள்ளே ‘பசங்க 2’, ‘இது நம்ம ஆளு’, ‘கதகளி’னு வெவ்வேறு அனுபவ வகைகள். என்னை எந்த வகைக்குள்ளும் அடைச்சு வச்சிடக் கூடாது என்பதுதான் என் ஆசை!’’

- நா.கதிர்வேலன்