அமைதி‘‘ஏங்க, நாம வேற ஏரியாவுல வீடு வாங்கிட்டதாலதானே இந்த வீட்டை விற்கறோம். ஆண்டவன் புண்ணியத்துல பணக்கஷ்டம் இல்லையே! அப்புறம் ஏன் இப்படிப் பண்ணினீங்க?’’ - பாரியிடம் கேட்டாள் அவர் மனைவி விஜயா.‘‘என்ன பண்ணிட்டேன்?’’

‘‘நேத்து உங்க நண்பர் ஞானசேகரன் 5 லட்சத்துக்கு நம்ம வீட்டை கேட்டதுக்கு ‘எனக்கு வீட்டை விக்கிற ஐடியாவே இல்லை’ன்னு சொன்னீங்க. இப்ப வேற ஒரு ஆள்கிட்ட அஞ்சரை லட்சத்துக்கு பேசி முடிச்சிட்டீங்க. சின்ன வயசுல இருந்து உங்களோட பழகற நண்பர்தானே... 50 ஆயிரத்தைப் பாக்காம அவருக்கு நம்ம வீட்டைக் கொடுத்தாதான் என்ன?’’

மனைவியின் ஆதங்கத்தைக் கேட்டு பாரி சிரித்தார். ‘‘விஜயா, நண்பனுக்காக 4 லட்சத்துக்குக் கூட வீட்டைத் தரலாம். ஆனா, இந்த வீட்டுக்கு முன்னால டாஸ்மாக் கடை இருக்கு. தினமும் குடிகாரங்களோட ஆபாசப் பேச்சு, சண்டைன்னு நாம் பட்ட அவதியை என் நண்பனும் படணுமா? பாவம், அவன் இப்போதான் ரிட்டயர் ஆகி கடைசி காலத்தில் அமைதியா வாழ ஆசைப்படுறான். அவனுக்கு இங்க அது கிடைக்குமா? ஆனா, இப்ப இந்த வீட்டை வாங்கியிருக்கவர் பிரபல ரவுடி. எதையும் கண்டு அஞ்ச மாட்டார். அவருக்கு இந்த வீடு ஓகே!’’ என்றார் அவர்.கணவனின் நல்ல உள்ளம் புரிந்தது விஜயாவுக்கு!                

எஸ்.விசாலம்