ஸ்வீட் பாக்ஸ் சமந்தா!ஆச்சி மனோரமா வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் அதைத் தாண்டி வந்து சாதித்த விதத்தையும் படித்து மெய்சிலிர்த்தேன்!
- கே.வி.ரமாமணி, காங்கேயம்.

‘வைரமுத்து சிறுகதைகள்’ வெளியீட்டில் ‘வைரமுத்துவுக்கு நான் போட்டி’ என நெகிழ்ந்த கலைஞரின் பாராட்டைப் படித்து எங்கள் மனங்களும் நெகிழ்ந்தன.
- ஜி.வி.மணிமேகலை, சிதம்பரம்.

தனுஷின் ‘தங்கமகன்’ படத்தில் நடிக்கும் எமி, போட்டோவில் வந்தே எங்கள் மனதைப் பந்தாடிவிட்டார். படத்தில் வேறு செம மாடர்ன் கேரக்டரா? வரட்டும்... வரட்டும்!
- எஸ்.பால்பாண்டி, மதுரை.

ஆன்லைன் பார்மஸிகளை அனுமதித்து பன்னாட்டு முதலாளிகளை ‘கல்லா’ கட்ட வைக்கும் மத்திய அரசை என்னவென்று சொல்வது? மக்கள் உயிருடன் இப்படி விளையாடலாமா?
- இரா.குணசுந்தரி, சேலம்.

‘10 எண்றதுக்குள்ள’ படப் பேட்டி சரவெடி. தீபாவளி போனஸாக சுண்டியிழுக்கிற சமந்தாவின் கலர் ஸ்டில்களைப் பார்க்க ஸ்வீட் பாக்ஸைத் திறந்தது போலிருந்தது!
- நெ.வி.சுதாகரன், கன்னியாகுமரி.

திருக்குறளை தன் தாய் மொழியான லாட்விய மொழியில் மொழிபெயர்க்கும் தமிழ்நாட்டு மருமகள் ஆஸ்ட்ராவின் பணி பாராட்டுக்குரியது, ஊக்குவிக்கப்பட வேண்டியது!
- செ.உமாபதி, திண்டுக்கல்.

‘ரம்மி சூதாட்டமே இல்லை’ என உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதைப் படித்து அதிர்ந்தேன். அப்புறம் எது சூதாட்டமாம்? கண்ணாமூச்சி, பாண்டியாட்டம் இதெல்லாமா?
- டி.எல்.சுந்தரராமன், விழுப்புரம்.

‘ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்டா’ எனும் நோயால் எலும்புகள் நொறுங்கி வந்தாலும் மனமுடையாத ராஜாராமன் வியக்க வைத்தார். அந்த இரும்பு இளைஞனை நினைத்து பெருமை கொள்கிறோம்!
- சி.பி.ஆனந்தவள்ளி, கோவை.

‘நான் உங்கள் ரசிகன்’ தொடரில் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படம் ஏன் தோல்வியுற்றது என்பதற்காக பாரதிராஜாவும் அவரது குழுவினரும் ஆராய்ச்சி செய்த விதம் பற்றி விளக்கியிருந்தது அருமை. உள்ளதை உள்ளபடி உள்ளத்தில் இருந்து சொல்கிறார் மனோபாலா!
- டி.ராஜசோழன், தஞ்சாவூர்.

அய்யா, சிட்னி ஆராய்ச்சியாளர்களே, உடற்பயிற்சிக்கு பதில் மாத்திரை கண்டுபிடிப்பது சரி; அப்படியே பசிக்காமல் இருக்கவும் மாத்திரை கண்டுபிடித்தால் கோடி புண்ணியமய்யா!
- பி.கே.முத்துக்குமாரி, திருநெல்வேலி.