குட்டிச்சுவர் சிந்தனைகள்



நாடாளுமன்றத் தேர்தலை விட, இந்த நடிகர் சங்கத் தேர்தலை எல்லா மீடியாக்களும் சமூக வலைத்தளங்களும் மொச்சு எடுத்திருச்சுங்க. அதுலயும் சமூக வலைத்தளங்களில் புரட்சி குரூப்பு, ‘நடிகர் சங்க தேர்தல் நாட்டுக்கு தேவையா? இந்த ஏழை விவசாயிங்க என்ன பாடு படுறாங்க தெரியுமா’னு சொல்லிட்டே,

 ‘நமீதா ஓட்டுப் போட வந்திடுச்சா’னு பதறுனது தனிக்கதை. பருப்பு விலையேற்றம், டீசல் விலையேற்றம்னு நாட்டுக்கு தேவையில்லாதத சொல்லாம, சில செய்தி சேனல்கள் ரெண்டு நாளா நடிகர் சங்க தேர்தலை மட்டும் காமிச்சு தங்கள் சமூகப் பொறுப்பை காட்டினது மிகப்பெரும் ஆறுதல்.

எது எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சு ரிசல்ட்டும் வந்தாச்சு. இப்படி ஒவ்வொரு மூணு வருஷத்துக்கும் அதிரிபுதிரியா தேர்தல் நடத்திக்கிட்டு இருக்கிறத விட்டுட்டு, இந்த சங்க காலத்தில இருந்த மாதிரி கேள்வி பதில் கேட்டு ராஜாவ தேர்ந்தெடுத்தா வேலை எம்புட்டு ஈசியா போயிடும்.

அதில்லாம நமக்கும் ஒரு அறிவாளியான ராஜா கிடைச்சாருனு பெருமையாவும் சொல்லிக்கலாம். இப்ப பாருங்க ஒரு மாதிரி வினாத்தாள் ரெடி பண்ணியிருக்கோம். இது இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற சிலபஸ் படி ரெடி பண்ணினது. அடுத்த தேர்தலப்ப, அதுக்கு ஏத்த மாதிரி பதில மாத்திக்குவோம்!

பிரிக்க முடியாதது? கேப்டனும் உதையும்
பிரியக் கூடாதது? பாக்யராஜும் முருங்கைக்காயும்
சேர்ந்தே இருப்பது? சசிகுமாரும் சமுத்திரக்கனியும்
சேராமல் இருப்பது? சிம்பு படமும் ரிலீஸ் தேதியும்
சொல்லக் கூடாதது? நடிகைகளின் வயசு

சொல்லக் கூடியது? நடிகைகளின் மனசு
சொல்லாமல் விடுவது? லாபக்கணக்கு
சொல்ல மறப்பது? நன்றிக்கணக்கு
பார்க்கக் கூடாதது? நைட்டுல பேய் படம்
பார்த்து ரசிப்பது? மொத நாள் அஜித் படம்
பாடல் என்பது? தம்மடிக்க போக

படம் என்பது?  படுத்துத் தூங்க
பன்ச் டயலாக் என்பது? முக்கிப் பேசுவது
பரிதாப டயலாக் என்பது? திக்கிப் பேசுவது
டான்ஸுக்கு? பாக்யராஜ்
ஃபைட்டுக்கு? ராமராஜ்
நடிப்புக்கு? பவர்ஸ்டார்

இடுப்புக்கு? சிம்ரன்
கலருக்கு? தமன்னா
ஃபிகருக்கு? இலியானா
ஓபனிங் சீனுக்கு? காலை காட்டணும்
கடைசி சீனுக்கு? சிரிப்பை காட்டணும்
ஷங்கர் படம்னா? ஆச்சரியம் வரும்

தங்கர் படம்னா? அழுகாச்சி வரும்
திராவிட அழகி? லட்சுமி மேனன்
திகட்டுற அழகி? நித்யா மேனன்
வானத்தில் பறப்பது? விஷாலோட ஜீப்பு
வணக்கத்துக்குரியது? சமந்தாவோட (சோப்பு) சீப்பு

குடும்ப படத்துக்கு? எஸ்.வி.சேகர்
குஜால் படத்துக்கு? எஸ்.ஜே.சூர்யா
அர்ஜுன்? இரும்பு அடிக்கு
ராஜ்கிரண்? எலும்பு கடிக்கு
சந்தானம்? ஹீரோ ஃப்ரெண்டுக்கு
சிவகார்த்திகேயன்? இன்றைய டிெரண்டுக்கு

நாட்டுல பாதி பேரு மாட்டுக்கறி திங்கக்கூடாதுன்னு சத்தம் போடுறாங்க. மீதிப் பேரு ‘எதையும் சாப்பிடுவேன், அது என் உரிமை’னு யுத்தம் செய்யறான். இந்த நிலைமைல, கோவைல மாட்டிறைச்சி சாப்பிடுவோர் நலச் சங்கம் சார்பா, அம்மா மெஸ்ல மாட்டிறைச்சி போடணும்னு மனு கொடுத்திருக்காங்களாம். நம்மாளுங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல. இவங்க தெரிஞ்சுதான் செய்யறாங்களா, இல்ல...

தெரியாம செய்யறாங்களான்னே புரியல. நம்மாளுங்கள விட்டா காலைல ஆப்பமும் ஆட்டுக்குடலும், மத்தியானம் கெட்டித் தயிர் பச்சடியோட கோழிக்கால் முட்டை வச்ச மட்டன் பிரியாணியும், நைட்டு நெய் தோசையும் நாலு கரண்டி மீன் குழம்பும் கூடவே ரெண்டு ஆஃப்பாயில், கடைசியா 2 வாழைப்பழமும் கேட்டாலும் கேட்பாங்க. இவங்கள குற்றம் சொல்லி என்ன பண்றது?

கிலோ அம்பது ரூபா விற்ற துவரம் பருப்பு, இப்ப கிலோ 250 ரூபாய்க்கு துயரம் பருப்பா விற்குது. உளுத்தம்பருப்பு விலை கிலோ 70 ரூபால இருந்து இப்ப 170 ரூபாய்க்கு மேல போயி, உயர்ந்த பருப்பா விற்குது. நம்ம கடலைப் பருப்பு கூட இப்ப கடவுள் பருப்பா இருக்குன்னா பாருங்க. இப்படி நிலைமை இருக்கிறப்ப, சும்மா இருக்கிறதே சுகம்னு சொல்ல வைக்கிற மாதிரி நூறு பேருக்கு மட்டும் சோறு போட்டா, அப்புறம் அவங்க எக்ஸ்ட்ரா லெக் பீஸு கேக்காமலா இருப்பாங்க?

நாட்டு மக்கள் பலரும் கெட்டுப்போகக் காரணம், நாலே நாலு திரைகள்தான்... வெள்ளித்திரை, சின்னத்திரை, கணினித்திரை மற்றும் கைப்பேசித் திரை. இவற்றையெல்லாம் எவ்வளவு நேரம் பார்க்கிறோமோ அந்தளவு ஒருவர் கெட்டுப்போகலாம். ஆனால் புத்தகங்களை ஒருவர் எவ்வளவு நேரம் பார்க்கிறாரோ, அந்த அளவுக்கு கெட்ட எண்ணங்களை விட்டுப்போகிறார்.

நாம் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்தே அகிலத்தின் அற்புதங்களை அள்ளித்தரும், நமது அறிவு பெருக சொல்லித்தரும் அலாவுதீனின் அற்புத விளக்குதான் புத்தகம். அமராவதி யின் வெட்கத்தை, அனார்கலியின் துக்கத்தை, அலெக்ஸாண்டரின் வீரத்தை, அண்டார்டிகாவின் தூரத்தை, சோமாலிய வறட்சியை, சோவியத் புரட்சியை, கீதை சொல்லும் மெய்ஞானத்தை, குளோனிங் சொல்லும் விஞ்ஞானத்தையென...

எதை அறிய விரும்புகிறோமோ, அதை நம் உள்ளங்கையில் வைத்து உள்ளங்களில் பதிய வைப்பவையே புத்தகங்கள். பள்ளிப் புத்தகங்கள் எதிர்காலத்திற்கான ஏணிகள் என்றால், பொதுப் புத்தகங்கள் நிகழ்கால ஞானிகள்.  பாடப் புத்தகங்களைப் படிப்பது மதிப்பெண்கள் பெற்றுத் தரும், அதே சமயம் பொது நூல்களையும் படிப்பது  வாழ்க்கையில் மதிப்பைப் பெற்றுத் தரும். சரி, இதையெல்லாம் எதுக்கு இப்ப சொல்றோம்னு நினைக்கிறீங்களா? தீபாவளிக்கு ‘தினகரன் தீபாவளி மலர்’ முன்பதிவு செஞ்சிடுங்க... அதுக்குத்தான்.

* பொண்ண லவ் பண்ண வைக்க கைய கிழிச்சுக்கிறான், பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு சட்டைய கிழிச்சுக்கிறான்.
* பொண்ண லவ் பண்ண வைக்க தனியா மண்டைய பிச்சுக்கிறான், பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு பொதுவெளில மண்டைய பிச்சுக்கிறான்.
* பொண்ண லவ் பண்ண வைக்கும் வரை தனக்குத் தானே சத்தமில்லாம பேசி திட்டம் போடுறான், பொண்ண லவ் பண்ண வச்ச பிறகு தனக்குத் தானே சத்தமா பேசி பைத்தியமாட்டம் திரியறான்.
* பொண்ண லவ் பண்றதுக்காக ஃபிரண்ட்ஸ கழட்டி விட யோசிக்கிற அவனே, லவ் பண்ற பொண்ண கழட்டி விட ஃபிரண்ட்ஸ ஐடியா கேட்கிறான்.
* இப்படி கடைசி வரை, பொண்ணுங்க மேட்டர்ல தண்ணி கலக்காத பாலைத் தேடிப் போறேன்னு நினைச்சுக்கிட்டு பால்ல கலக்க வச்சு இருக்கிற தண்ணியவே கடைசி வரை கையில ஏந்துறான்.