குடும்பங்கள்ல பாஸிட்டிவ் மனிதர்களே இல்லையோ!



இயக்குநர் டி.பி.கஜேந்திரன் அதிர்ச்சி

குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், விசு, வி.சேகர் வரிசையில் வருபவர் டி.பி.கஜேந்திரன். ‘வீடு மனைவி மக்கள்’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘தாயா தாரமா’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிளாஸ் மாதவன்’ முதற்கொண்டு கடைசியாக வந்த ‘மகனே என் மருமகனே’ வரை இவர் படங்கள் எல்லாமே ஃபேமிலி சென்டிமென்ட்களை அள்ளிவீசும்.

வடபழனியில் உள்ள டி.பி.ஜி நெஸ்ட் ஹோட்டலில் நம்மை வரவேற்கிறார் மனிதர். ‘‘என் பூர்வீக வீட்டைத்தான் இப்போ ஹோட்டலா மாத்தியிருக்கேன். ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல இங்கே வந்திடுவேன்!’’ - உதவியாளரிடம் ரெண்டு டீ சொல்லிவிட்டு ரெடியாகிறார் டி.பி.ஜி.‘‘அப்போ ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை விசு சார் வெறும் 13 லட்ச ரூபாய்ல பண்ணினார்.

சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம்னு அந்தப் படம் தேசிய விருதும் வாங்கிச்சு. குடும்பக் கதைகள்ல பிரமாண்டம் தேவைப்படாது. உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தால்தான் நிக்கும். எல்லா காலகட்டத்திலும் ஃபேமிலி சப்ஜெக்ட் ஜெயிக்கும். சமீபத்து சக்ஸஸ் படங்கள்ல பிரமாதமான ஃபேமிலி சப்ஜெக்ட்னா ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தைச் சொல்லலாம்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு, வி.சேகர்னு எல்லாரோட சாயல்களும் அதுல இருந்தது. பெரிய ஹீரோ நடிச்சாதான் குடும்பப் படங்கள் ஓடும்னு இப்ப கட்டாயம் ஆகிப்போச்சு. பெரிய ஹீரோன்னாலே, அது பட்ஜெட்டுக்குள் அடங்காதே! அது மட்டுமில்லாம, ஃபேமிலி சப்ஜெக்ட்டை விரும்பிப் பார்க்குற தாய்க்குலங்களும் இப்ப டி.வி சீரியல்கள்ல செட்டில் ஆகிட்டாங்க. அவங்களை மறுபடியும் தியேட்டர் பக்கம் கொண்டு வர்றது எப்படினு தினமும் ஆழந்த யோசனையில இருக்கேன்!’’ - டீ உள்ளே இறங்க இறங்க... தொடர்கிறது உரையாடல்.

‘‘ஆனா, குடும்பப் படங்களுக்கும் இப்போதைய சீரியல்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ‘வீடு மனைவி மக்கள்’தான் என்னோட முதல் படம். அந்தப் படத்தைப் பார்த்தவங்க ‘இது விசு படம் மாதிரியே இருக்கு’னு சொல்லிட்டாங்க.

குரு பெயரைக் காப்பாத்தின சிஷ்யன்னு அதுல சந்தோஷம். ஃபேமிலி சப்ஜெக்ட் படங்களை ஜனங்க அப்போ தலைமேல தூக்கி வச்சுக் கொண்டாடினாங்க. வெறும் 3 மணி நேரத்துல ஆழமான அன்புல இருந்து சென்ஸிபிளான விஷயம் வரை சொன்னோம். இடைவேளையில பிரச்னையை சொன்ன பிறகு, அடுத்தடுத்து அதுல இருந்து எப்படி விடுபடுறதுனு தீர்வையும் சொல்லிடுறோம்.

படம் முடியும்போது சுபமான ஒரு க்ளைமேக்ஸைக் கொடுத்து, கலகலப்பாக்கிடறோம். படம் பார்த்துட்டு சிரிச்ச முகமா வீட்டுக்குப் போவாங்க. சீரியல்கள்ல இதை எதிர்பார்க்க முடியுமா? யாரைப் பார்த்தாலும் வில்லியா இருக்காங்க. குடும்பங்கள்ல பாஸிட்டிவ் மனிதர்களே இல்லையோங்கற மாதிரி வைப்ரேஷனை ஏற்படுத்துறாங்க.

சீரியல்களுக்கு திரைக்கதை பண்றவங்க, சமுதாய நலனையும் கொஞ்சம் கருத்தில் வைக்கணும். எதிர்பாராத ஒரு பிரச்னையோடு அன்னிக்கு சீரியல்ல ‘தொடரும்’னு போடுறாங்க. அதுக்கு அப்புறம் வீட்டு வேலை செய்யுற இல்லத்தரசிங்க அந்த பிரச்னையோடவே ட்ராவல் பண்றதை சில வீடுகள்ல என்னால பார்க்க முடியுது. பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுத்துற சீன்களை திரைக்கதையாளர்கள் ஜாக்கிரதையா கையாளணும்.

குடும்பப் பாங்கான படங்களை நான் இயக்கினதுக்குக் காரணமே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான். அவரோட தீவிரமான ரசிகன் நான். ‘கற்பகம்’, ‘பணமா பாசமா’, ‘வந்தாளே மகராசி’னு பெண்களைப் பெருமைப்படுத்தும் படங்களா எடுத்தவர் அவர். அப்போ நான் கே.பாலசந்தர்கிட்ட அசிஸ்டென்டா இருந்தேன். அவரோட ‘மழலைப் பட்டாளம்’ படத்துக்கு வசனம் எழுதினவர் விசு.

அவர் எனக்கு அங்கேதான் அறிமுகமானார். ‘தில்லுமுல்லு’ படத்துக்கு விசு சார் வசனம் எழுதும்போது அவரோட நெருங்கின நட்பு கிடைச்சது. அவர் இயக்கின ‘மணல் கயிறு’ல இருந்தே அவரோட முதல் அசிஸ்டென்ட்டா வேலை செய்தேன். 23 படங்கள் இதுவரை இயக்கியிருக்கேன்.

‘சிதம்பர ரகசியம்’ படத்துல சின்ன கேரக்டர்ல விசு சார் என்னை நடிக்க வச்சார். அப்போ தேடி வந்த நல்ல நல்ல கேர்க்டர்களை எனக்கிருந்த தாழ்வு மனப்பான்மையால விட்டுட்டேன். ‘மைனா’ படம் பார்த்தபிறகு தம்பிராமையா பண்ணின கேரக்டர்கள் மாதிரி நடிக்கணும்னு இப்போ விரும்புறேன். நடிப்புல இனி அதிக கவனம் செலுத்தணும்!’’
‘‘சினி டெக்னீஷியன் சங்கத் தலைவரா...’’

‘‘ஆமா. சினிமா தொழில்நுட்ப சங்கத் தலைவரா என்னை ஒரு மனதா தேர்ந்தெடுத்திருக்காங்க. இதுக்கு முன்னாடி இந்தப் பொறுப்பில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இருந்தார். ஃபிலிம் சேம்பர் மாதிரி இதுவும் 70 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சங்கம். 79ல இருந்து இந்த சங்கத்துல நான் இருக்கிறதால எஸ்.பி.எம் சாருக்கு பிறகு என்னையே தலைவரா இருக்கச் சொல்லிட்டாங்க!’’   ‘‘குடும்பங்கள் பலப்பட உங்க டிப்ஸ்..?’’

‘‘விட்டுக்கொடுத்துப் போங்க. அப்புறம், குடும்பத்துல எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அப்போதான் தீர்வுகள் கிடைக்கும். வாரத்துக்கு ஒருமுறை கெட் டுகெதர் வைங்க. பெரியவங்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுங்க. எனக்கு நாலு பொண்ணுங்க... நாலு பேரையுமே சாலிகிராமத்தை சுத்திதான் கட்டிக் கொடுத்திருக்கேன்.

காசுக்கு ஆசைப்பட்டு வெளியூர், வெளிநாடுனு புள்ளைகளை அனுப்பி விட்டுட்டு அப்புறம் ஏன் வருத்தப்படணும், சொல்லுங்க! என் மகள்கள் குழந்தைகளா இருக்கும்போது ஒரு டூர்ல நாங்க எடுத்த போட்டோ... நான் அடிக்கடி பார்த்து ரசிக்கற படம் அது. அந்த மாதிரி ஃபேமிலியா அடிக்கடி வெளியூர் பயணங்கள் போறதும் பாசத்தை பலப்படுத்தும். மனசுக்கு இதமாவும் அமையும்!’’

எல்லா காலத்திலும் ஃபேமிலி  சப்ஜெக்ட் ஜெயிக்கும். சமீபத்து சக்ஸஸ் படங்கள்ல பிரமாதமான ஃபேமிலி  சப்ஜெக்ட்னா ‘வேலையில்லா
பட்டதாரி’ படத்தைச் சொல்லலாம்.

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சி.எஸ்.