நானும் ரௌடிதான்போலீஸ் ஆபீஸரின் மகனாக இருந்துகொண்டு ரௌடியாக மாறத் துடிக்கும்... காதலிக்காக கொலை செய்யவே புறப்படத் துடிக்கும் காமெடி ஹீரோவின் பாய்ச்சல், ‘நானும் ரௌடி தான்’!

‘போடா போடி’யில் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன், இந்தத் தடவை எடுத்திருப்பது காமெடி அவதாரம். சிரிப்பு, ஃபேமிலி சென்டிமென்ட் என கதையைக் கையாண்ட விதத்தில் சுந்தர்.சியின் தெளிவு அவரிடம்.

ஊரைச் சுற்றும் விஜய்சேதுபதி, நயன்தாராவைக் காதலிக்க, அதற்கு ஒரே ஒரு கொலை செய்ய வேண்டும் என ஃபுல் சென்டிமென்ட்டில் நயன் ஒரு ஃபிளாஷ்பேக் சொல்ல, மேற்படி வில்லனை விஜய்சேதுபதி கொன்றாரா, அதன் பின்பாவது காதலர்கள் இணைந்தார்களா என்பதே மீதி சிரிப்புக் கதை.

உயிரைக் கொடுத்து நடித்து அலுத்துவிட்டார் விஜய்சேதுபதி. அம்மாவுக்கு அடங்கி, காதலியின் பின்னால் திரிவதிலாகட்டும், வழக்கமான பேச்சு டெலிவரியில் சிரிப்பு வெடி கிளப்புவதிலாகட்டும், மனிதர் செம லகலக.

அம்மாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு நயனை பார்க்காமல் ஓரங்கட்டுவது, அங்கேயிருந்து ‘எஸ்’ ஆனதும் நயனைத் தேடி ஓடுவது வரை அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் வித்தியாசத்திலேயே டிஸ்டிங்ஷன் தட்டுகிறார். வெயிட் குறைந்தாலும் யதார்த்த நடிப்பில் தேறியிருப்பது அழகு.

நயன்தாரா காது கேட்காத பெண்ணாக வருகிறார். விஜய்சேதுபதிக்கு நெருக்கடியைத் தரும் விதத்திலேயே அமைந்திருக்கிறது நடிப்பு. அப்பாவின் கதையை ஆழ நீளமாக சேதுபதிக்குச் சொல்லும் இடத்தில் அலட்டிக்கொள்ளாமல் மனசை அள்ளிப் போகிறார் நயன்தாரா. ‘ரொம்ப படத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது’  என ஆரம்பக் காட்சிகளிலேயே தெரிந்து விடுவதால், நமக்கு படத்தில் சிரிப்பு ஒன்றே போதுமானதாகி விடுகிறது.

‘இங்கேதான் பரபரப்பு பற்றிக்கொள்ளும்’ என நாம் நினைக்கும்போது பதட்டமே படாமல் எளிதில் கடக்கக் கூடிய சம்பவங்களோடு காமெடியை மட்டும் கலக்கிவிட்டு நகர்கிறார்கள். அனிருத்தும், கௌதம் கார்த்திக்கும் நடிக்காமல் தவிர்த்த படம் என்கிறார்கள்; அதற்காக வருத்தப்பட வேண்டியது விக்னேஷ் சிவன் அல்ல.

கொஞ்சம் சீரியஸ், அதிகம் சிரிப்பு வில்லனாக புது அவதாரம் எடுத்திருக்கிறார் பார்த்திபன். அவர், மன்சூர் அலிகான், விஜய்சேதுபதி தோன்றுமிடம் எல்லாம் சிரிப்பு சரவெடிதான். சந்தானம் இடத்தை ஆர்.ஜே பாலாஜி கிட்டத்தட்ட பிடித்து விடுவார் போல. கெட்ட வசனத்தை பார்த்திபன் பேசுவதற்கு தானே லீடு எடுத்துக் கொடுக்கிறார் நயன்தாரா. எல்லோரும் சேர்ந்து சிரிக்கிற இடத்தில் முகம் சுளிக்க வைக்கும் பச்சை வசனங்கள் எதற்கு?

க்ளைமேக்ஸுக்கு படத்தை நகர்த்துவதில் பார்த்திபனின் பங்கு அதிகம். அவ்வப்போது உள்ளே வெளியே வசனங்களை பேசிக் காட்ட வேண்டாமே சகோ!அனிருத்தின் ‘கண்ணான கண்ணே’, ‘வரவா வரவா’ பாடல்கள் காதுக்குக் குளிர்ச்சி. பாடல்கள் எழுதிய விக்னேஷ் சிவனுக்கு கங்கிராட்ஸ். ஜார்ஜ் வில்லியம்சின் காமிராவில் பாண்டிச்சேரியின் நேர்த்தியான காட்சிகள் அழகு. பின்னணியிலும் அனிருத் இசை செமத்தியான ஸ்கோர்.

படம் எப்போதோ முடிந்த பிறகும். ப்ரேக் பிடிக்காத எக்ஸ்பிரஸாக நழுவி ஓடிக்கொண்டே இருக்கிறது பின் பாதி! வெடிச்சிரிப்புகளில் படம் நகராவிட்டால் கதையே இல்லாமல் தவித்திருக்கும் திரைக்கதை. ட்ரெண்டுக்கு ஏற்ற காமெடிப் பட லிஸ்ட்டில் நானும் உண்டு எனச் சொல்லியிருக்கிறது, ‘நானும் ரௌடிதான்’!

- குங்குமம் விமர்சனக் குழு