கொத்தமங்கலம் சுப்புவின் மெகா கூட்டுக் குடும்பம்‘இந்தக் காலத்தில் ஏதுங்க கூட்டுக் குடும்பம்? எல்லாம் அபார்ட்மென்ட் வாழ்க்கை ஆகிப்போச்சு!’ என சலிக்கிறீர்களா? சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள இந்த அபார்ட்மென்ட் இன்றைக்கும் 70 பேர் கொண்ட ஒரு பிரமாண்ட கூட்டுக் குடும் பத்தைச் சுமந்திருக்கிறது.

விசாரித்துப் பார்த்தால், இது பழம்பெரும் எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவினுடைய குடும்பம்! அவர் எழுத்தில் இனித்த ‘தில்லானா மோகனாம்பாளை’ இன்றைக்கும் மறக்க முடியுமா? குடும்பச் சித்திரங்களைப் படைத்த அவரின் குடும்பம் இன்றைக்கும் உறுதிபட ஒன்றுபட்டிருப்பது பர்ஃபெக்ட் பொருத்தம்!

‘‘எங்க அப்பாவுக்கு நாங்க 14 பிள்ளைங்க. ‘அக்னி நட்சத்திரம்’ படத்துல கார்த்திக் வசிக்கிற வீடா வருமே... அதுதான் எங்க வீடு. இப்ப அதையே இடிச்சி 14 வீடு கொண்ட அபார்ட்மென்டா கட்டிக்கிட்டோம். பில்டிங் மாறியிருக்கலாம்... ஆனா, குடும்பம் அப்படியேதான் இருக்கு!’’ - பெருமிதமாகப் பேசுகிறார் வாரிசுகளில் மூத்தவரான விஸ்வநாதன் சுப்பு.‘‘அப்பாவுக்கு மூணு மனைவிகள்.

முதல் தாரமான எங்க அம்மாவுக்கு நானும் என் அண்ணனும்தான் பிள்ளைகள். அப்பாவுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் கன்னேறி ஏந்தல். எங்க அம்மா ஊரான கொத்தமங்கலத்தை தன் பேரில் சேர்த்துக்கிட்டார். என்னோட மூணு வயசுலயே எங்க அம்மா இறந்துட்டாங்க. சின்னம்மா லட்சுமி அம்மா மடியிலதான் நாங்க வளர்ந்தோம். அவங்களுக்கு 10 குழந்தைகள். மூணாவதா, நடிகை சுந்தரிபாய் அம்மாவை அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டார்.

அப்பா ஜெமினி கதை இலாகாவில் அங்கம் வகிச்சவர். சினிமா, நாவல், தொடர்கதைகள்னு அப்பா எழுத்துத் துறையில கொடி கட்டிப் பறந்தப்ப வாங்கிப் போட்ட குட்டி பங்களா இது. ஒரு பெரிய கூடம், ரெண்டு பக்கமும் நாலு நாலு அறைகள். ஒரே ஒரு சமையலறை... இதுதான் பங்களாவின் அமைப்பு. சுந்தரிபாய் அம்மாவுக்குப் பிறந்த 2 பிள்ளைகளோட சேர்ந்து மொத்தம் 14 பேர் இங்கேதான் தவழ்ந்து வளர்ந்தோம்.

ஏற்கனவே எங்க வீட்ல பாட்டிகள், தாத்தாக்கள், சித்தப்பா - சித்திகள்னு உறவுக்காரர்கள் கூட்டம் அலைமோதும். அதனால சின்னம்மாவோட வரவு யாருக்கும் ஒண்ணும் வித்தியாசமா படலை. ஏதோ கூடுதல் பலம் இந்தக் குடும்பத்துக்கு கிடைச்சிட்டது போலத்தான் உணர்ந்தோம். நாங்க யாருமே வெவ்வேறு அம்மாவுக்குப் பிறந்தவங்கனு எந்தக் காலத்திலும் நினைச்சதில்லை.

அப்பா வீட்ல இருக்கும்போது வீடே அமைதியா இருக்கும். சில சமயம் ரொம்ப அமைதி அதிகமாயிடுச்சுன்னா அப்பாவே கூடத்துக்கு வந்து எல்லாரையும் கூப்பிட்டு ஆரவாரமா விளையாடச் சொல்லுவார். அதுக்கும் சரின்னு ஆட்டம் போடுவோம். சரியோ தப்போ... அப்பா பேச்சுக்கு மறுபேச்சு இல்ல.

இதுதான் எங்க வீட்டு ரூல்ஸ். எங்களை ஒண்ணா பிணைச்சு இருந்ததும் அதுதான். 1976ல அப்பா இறந்தப்போ ரெண்டு பெண்கள் ரெண்டு பிள்ளைகளுக்குத்தான் கல்யாணம் ஆகியிருந்தது. கேப்டன் இல்லாத ஷிப் மாதிரி ஆகிடுச்சேனு வருங்காலத்தை நினைச்சு அரண்டு போயிட்டோம்!’’ என நிறுத்துகிற விஸ்வநாதனைத் தொடர்கிறார் அவர் மனைவி விமலா.

 ‘‘தொடக்கம் சரியா இருந்தா, எல்லாம் சரியா இருக்கும். எங்க கல்யாணத்தப்பவே ‘குடும்பம் ஒண்ணாதான் இருக்கும். அதைப் பிரிக்கக் கூடாது’னு கண்டிஷன் போட்டாங்க. அதே கண்டிஷனை அடுத்தடுத்த கல்யாணப் பேச்சு தொடங்கும்போதும் யாராவது முன்மொழிஞ்சுடுவாங்க. ஒரு கட்டத்துல எங்க குடும்பத்தைப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு. கூட்டுக் குடும்பமா வாழ சம்மதம் இருக்குறவங்கதான் இங்கே பெண் கொடுக்கவே வந்தாங்க!’’ என்கிறார் அவர் புன்னகையுடன்.
‘‘கல்யாணம் ஆன புதுசுல எனக்குக் கூட பயம்தான். ரெண்டு மாமியார், எட்டு நாத்தனார்கள், ஐந்து மச்சினர்கள் இருக்குற குடும்பம்னா யாருக்குத்தான் பயம் இருக்காது? ஆனா, போகப் போக எல்லாம் பழகி சகஜமாகிடுச்சு!’’ என்கிறார் அந்த வீட்டின் இன்னொரு மருமகளான வித்யா.

‘‘இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பங்கள் எல்லா விதத்திலும் வசதிங்க. என்னைத் தேடி வீட்டுக்கு வர்ற ஃப்ரெண்ட் எல்லாம் நான் இல்லாட்டி கூட மற்ற அண்ணன், தம்பிகள் கூட பேசிட்டிருப்பாங்க. அண்ணன் தம்பிகளோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கும் ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க. இப்படி நம்ம நட்பும் பரந்து விரியும். அதனால முன்னேற்றமும் அதிகம் இருக்கும்!’’ என்கிறார் சுந்தரிபாயின் மகனான முரளி.

‘‘எங்க 14 பேரோட விழுதுகள் இப்ப 70 பேரா வந்து நிக்குது! அடுத்த தலைமுறை வந்தாச்சு. அவங்களுக்காக எல்லாரும் ஒரே கேம்பஸ்ல வசிக்க முடியாத சூழல். சிலர் இந்த ஃப்ளாட்டுகளை வாடகைக்கு விட்டுட்டு வெளிநாட்லயும் சிலர் வெளி மாநிலங்கள்லயும் இருக்காங்க!’’ எனத் துவங்குகிறார் சுவாமிநாதன். பதினான்கு உடன்பிறப்புகளில் ஒருவர்.

‘‘ஒரே வீட்ல இருக்கும்போது கூட இல்லாத நெருக்கத்தை டிஜிட்டல் டெக்னாலஜி கொடுக்குது. எல்லாரும் எப்பவும் எங்க பாக்கெட்லயே இருக்குற மாதிரி இருக்கு. ஆனா, இப்பவும் குடும்பத்துல ஒரு விசேஷம்னா உலகத்தின் எந்த மூலையில இருந்தாலும் ஒண்ணு கூடிடுவோம்!’’ எனக் கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்
கிறார் அவர்.

- டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்