ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 42

‘‘காலாலங்கிரி மலை நோக்கிய எங்கள் பயணம் ஒரு அற்புதம் என்றே சொல்வேன். அந்த  மலையில் கால் வைப்பதற்கு முன் சதுரகிரி சென்று அங்குள்ள சந்தன மகாலிங்கத்திடமும் சுந்தர மகாலிங்கத்திடமும் அருளைப் பெறுவது அவசியம் என்ற ஜோசப் சந்திரனை நான் வியப்புடன் பார்த்தேன்.

அவருக்கும் புரிந்தது.‘கணபதி, நான் ஒரு இந்துதான். ஜோசப் என்பது என் குருவின் பெயர். தொல்பொருள் இலாகாவில் ஒரு முத்திரை பதித்தவர் ஜோசப் டேனியல். அவர் நினைவாக நான் எனக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் ஜோசப் சந்திரன் என்பதாகும்.

ஜோசப் டேனியல் சார் ஒரு அனுபவக் களஞ்சியம். ஒரு கல்லைக் கொடுத்தால் அதன் வயதைக் கூறிவிடுவார். இன்றைய ஆர்க்கியாலஜி அசுர வேகத்தில் முன்னேறி விட்டது. மிகப் பழமையான கற்களை, எலும்புகளை, ஓடுகளை, எழுத்துக்களை மற்றும் தடயங்களை அடையாளம் காண எனக்கு சொல்லித் தந்தவர் ஜோசப் டேனியல்.ஆகையால்  நான் சந்தன-சுந்தர மகாலிங்கங்களை வணங்கவேண்டும் என்று சொன்னதைக் கண்டு ஆச்சரியப்படாதீர்கள். நாம் காலாலங்கிரி செல்ல இருப்பது வழிபாட்டுக்காக மட்டுமல்ல... யாராவது ஒரு சித்தரை சந்திக்கவும்தான்...’ என்றார்.

‘என்றால் அங்கே நிறைய சித்தர்கள் உள்ளனரா?’ - என்று நான் கேட்டேன்.‘சித்தர்கள் என்று சொல்லிக்கொண்டு நிறைய பேர் திரிகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சித்தர்களல்ல..! சித்தனுக்கு இலக்கணமே அவன் தன்னை சித்தன் என்று கூறவோ, பிறர் தன்னை சித்தன் என்று கருத இடம் தரவோ கூடாது என்பதுதான்’ என்று ஜோசப் கூறவும் எனக்கு ஆச்சரியம். மேலும் அவர் தொடர்ந்தார்...

‘சித்தர்களுக்கு ஒரு தெளிவு உண்டு. அதில் மிக முக்கியமான ஒன்று, பிறர் தங்களை நினைத்து வியப்பதோ... இல்லை, பெரிதாக மதிப்பதோ கூடாது என்பதாகும்.  இரண்டுமே மாயை சார்ந்தவை. எனவே, இப்படி மற்றவர்கள் தங்களைக் கருதுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அடுத்து... ‘ஒருவன் ஒருவருக்குக் கடன் பட்டிராத நிலையில், அவருக்கு ஒன்றை வழங்கிவிட முடியாது’ என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால் சமூகநலம், பிறருக்கு உதவுவது போன்றவற்றில் அவர்களுக்கு நம்பிக்கையோ விருப்பமோ கிடையாது’ என்று அவர் கூறவும் எனக்கு அது ஆச்சரியமளித்தது. அதிர்ச்சியும் அளித்தது.

‘சமூகநலத்தில் அக்கறை, பிறருக்கு உதவுவதில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை எப்படி ஏற்பது?’ என்ற என் கேள்விக்கும் ஜோசப் பதில் கூறினார்.
‘இந்து மதம், ‘காரணமில்லாமல் காரியமில்லை’ என்கிறது. எனவே இந்த உலகில் நடைபெறும் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னாலும் மிகச் சரியான காரணம் உண்டு. அதன் அடிப்படையில், ஒருவரின் இன்ப துன்பங்களுக்குப் பின்னாலும் காரண காரியமுண்டு. இந்தப் புரிதல் முதல் தேவை.

அடுத்து, யாராலும் எதையும் மாற்றிவிட முடியாது. அப்படி ஒருவர் மாற்றிவிட்டார் என்று யாராவது கருதினால், அது உண்மை கிடையாது.  சாட்டையிலிருந்து விசையோடு விடுபட்ட பம்பரம், விசைக்கும், விழுந்த இடத்திற்கும், கூரிய முனைக்கும் ஏற்ப எப்படி ஒரு கணக்கெடுத்து சுழன்று பின் அடங்குகிறதோ, அப்படி ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. எனவே, அவரவர் வாழ்வை அவரவர் வாழ்கிறார்கள். அதை மாற்றவோ கூட்டவோ குறைக்கவோ யாராலும் முடியாது என்பதே சித்தர்கள் உணர்ந்திருக்கும் விஷயம்.

எனவே, அவர்கள் தங்களையே ஒரு உலகமாகக் கருதி, தங்களுக்குள் தங்களைத் தேடி அறிந்து, பின் இயற்கையோடு கூடிக் கலந்து இருந்து, உலகின் மாயைக்கு இடம் கொடுக்காதபடி வாழ்ந்து முடிக்கிறார்கள். ரிஷிகளும் முனிவர்களும் இவர்களிலிருந்து சற்று வேறுபட்டு ‘கர்ம வினைப்பாடுகளை இறையருளால் மாற்ற முடியும்’ என நம்புபவர்களாக உள்ளனர். நம்மைப் போல பற்றும் பாசமும் கொண்டு வாழ்பவர்க்கெல்லாம் ‘வாழ்க்கை என்பது வாழ்வதற்கே!’

எனவே, மனிதன் அறம் சார்ந்த இல்வாழ்வும் புகழ் சார்ந்த உலக வாழ்வும் வாழ முற்படுவதில் தவறில்லை. ஒரு கட்டத்தில் மனமானது திருப்தியடைந்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டதாகக் கருதும். எதுவும் புதிதில்லை என்று தோன்றும். அப்போது அந்த வாழ்வை விட்டு விலகுவதும் சுலபமாக இருக்கும். அப்படி விலகி அதன்பின் யோக வாழ்வு வாழ்ந்து பிறவித் தளையிலிருந்து விடுபடலாம். இதுதான் நம் போன்றவர்களுக்கான இலக்கணம்.

இப்படி நம்முன் பலவித போக்குடையவர்கள் உள்ளனர். இவர்களில் சதுரகிரியில் தன்னை முன்நிறுத்திக் கொள்ளாத ஒரு சித்தனை நாம் சந்தித்தால் காலாலங்கிரியில் நமக்கு அவர் துணையால் நிறையவே அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படலாம்’ என்று முடித்தார் ஜோசப் சந்திரன்.’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...வடக்கு திசையில் வலது பக்கத்தில் நூறு டிகிரியில் மிகச்சரியாக ஒரு பாதை இருந்தது. அது எங்கு சென்று முடிகிறது என்பது தெரியாமலே நீண்டிருந்தது. வர்ஷன் காரில் ஏறிக்கொண்ட நிலையில், காரின் மீட்டர் ரீடிங்கை கவனித்தான்.

அவன் பயன்படுத்தி வந்த அந்தக் கார் 76000 கி.மீட்டர்களைக் கடந்து ஒரு அளவில் நின்றபடி இருந்தது. அதைக் குறித்துக் கொண்டான்.‘‘இங்க இருந்து இந்தப் பாதையோட முடிவு வரை போய்ப் பார்த்துட்டு, அது எவ்வளவு தூரமோ அதுல சரிபாதி தூரம் திரும்ப வருவோம். அப்படி வந்து நாம நிக்கற இடம்தான் இந்தப் பாட்டுக்கான பொருள்! அப்புறமா அங்க பூதக் கண்ணாடி உதவியோட நாம ஏட்டுல உள்ள அடுத்த பக்கத்தை அந்த இடத்துல நின்னு படிப்போம்’’ - என்றான்.

வள்ளுவரும் இதுதான் சரியான அணுகுமுறை என்று ஆமோதித்தார்.காரும் புறப்பட்டது!அது ஒரு மண்சாலை. இருபுறமும் அடர்வான முள் மரங்கள். அதனால் நிழலைக்கூட சரியாகத் தர முடியவில்லை. காரணம் அதன் கிளைகள் - இலைகள்! மரம் முழுக்க முட்கள் இருப்பதால் பறவைகள் வந்து தங்குவதிலும் இடைஞ்சல். அதைப் பார்க்கவும், ‘இதை அழித்து ஒழித்தால்தான் நீர் வளத்தைக் காப்பாற்ற முடியும்’ என்று பேசப்படும் விஷயம் வர்ஷன் நினைவுக்கு வந்தது.

‘‘ப்ரியா... எங்கே பார்த்தாலும் ஒரே முள்காடா இருக்கு. இது வளரணும்னு யாரும் எந்த முயற்சியும் செய்யல. இதுக்காக ஒருத்தர் விதை போட்டார்களா... இல்லை, உரம் போட்டார்களான்னு சொல்ல முடியுமா? ஆனாலும் எப்படி வளர்ந்திருக்கு பார்த்தியா? இதனால ஒரு பயனுமில்ல... ஆனா நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிக்கிட்டும், காத்துல உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சியுமே இது வளர்ந்துடுமாம். அடுத்தவங்களை சுரண்டியும் அவங்ககிட்ட திருடியும் பிழைக்கற ஒரு சுயநலவாதிக்கும் இந்த மரத்துக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?’’ - என்று தனக்குத் தெரிந்த விதத்தில் கேட்டான் வர்ஷன்.

‘‘ரொம்ப சரியா சொன்னே தம்பி... நம்ப மண்ணுல மரங்களை ‘விருட்சம்’னு சொல்வோம். அட்சம்னா கண்ணு... விருட்சம்னா ‘இந்த பூமிக்கே கண் மாதிரி’ன்னு அர்த்தம். கண்ணுக்கு இருட்டு ஆகாது. விருட்சத்துக்கும் அப்படித்தான். இங்க இருட்டுன்னா பொழுதை மட்டும் குறிக்கல. கசப்பான, தப்பான, வருத்தமான எல்லா விஷயங்களையும் அது குறிக்குது. ஒரு நல்ல விருட்சம் சுத்தி இருக்கற தப்பான விஷயங்களை தான் எடுத்துக்கிட்டு, பதிலுக்கு நன்மையைச் செய்யும். அதனாலேயே நம்மவங்க விருட்சங்களை கடவுளா பார்த்தாங்க. கோயில்லயும் விருட்சத்துக்கு முதலிடம் கொடுத்தாங்க.

தலம், தீர்த்தம், விருட்சம், மூர்த்தின்னு ஒரு கோயிலுக்கான சிறப்புல விருட்சத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அதுல வேம்பு, வன்னி, ஆலம், அரசம்... இந்த நான்கும் ரொம்ப சிறந்தது. இதன் நிழல் கூட மருந்து. அரசமரக் காற்று, ஆலமர விழுது நுனி, வன்னி மர இலை, வேப்பங்கொழுந்து இந்த நாலோடும் தொடர்புல உள்ள ஒரு மனிதனை யாராலயும் வீழ்த்த முடியாதுன்னு சொல்வாங்க. அப்படி விருட்சங்களைக் கொண்டாடற இந்த நாட்டுக்குள்ளதான் இந்த விஷச்செடியும் புகுந்துடுச்சி. ஒருவிதத்துல இது மக்களோட கெட்ட எண்ணங்களையும் பேராசையையும் எதிரொலிக்குது. இது அதிகமா இருக்கற ஊர்ல மக்களும் சந்தோஷத்தோட இருக்க மாட்டாங்க. இது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும்னு நினைக்கறவன் எப்படி பொறுப்புள்ள மனுஷனா இருப்பான். சொல் பார்ப்போம்?’’
- வள்ளுவர் வெகு அழகாகக் கேட்டார்.

அந்தப் பாதை ஒரு கோயிலை ஒட்டி முடிந்து விட்டிருந்தது. கார் மிகச் சரியாக அங்கு நின்றது. மீட்டர் ரீடிங்கில் ஒண்ணரை கிலோ மீட்டர் தூரம் வந்திருப்பதும் தெரிந்தது.‘‘அய்யா! இதுக்கு மேல பாதையில்ல... இந்தப் பாதையோட நீளம் ஒண்ணரை கிலோ மீட்டர். கூடுதலா சில அடிகள் வேணா இருக்கலாம். இதுல சரிபாதி முக்கால் கிலோ மீட்டர். அதாவது 750 மீட்டர் தூரம். அப்படியே திரும்பி 750 மீட்டர் போய் நின்னா அதுதான் நாம ஏட்டுல படிச்சு தெரிஞ்சுகிட்ட இடம்’’ என்றான்.
‘‘நீ ரொம்பத் துல்லியமா இருக்கே... வண்டிய திருப்பு’’ - என்றார் வள்ளுவர்.

காரும் சிரமத்துடன் திரும்பியது. காரை அங்கே திருப்ப இட வசதியே இல்லை. இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொண்டு மீட்டர் ரீடிங்கை பார்த்தபடியே வந்தான் வர்ஷன்.ப்ரியா பக்கவாட்டில் பார்த்துக்கொண்டே வந்தாள். உச்சி வெயிலின் உஷ்ணமான பிறாண்டல் காருக்குள் ஏ.சி.யின் கூலிங்கையே குறைத்து ப்ரியாவை புழுங்கச் செய்தது.இருபுறமும் முட்செடிகளின் கூட்டம்தான். அதற்கு அப்பால் பொட்டல் நிலம்... இடையில் ஒரே ஒரு இடத்தில் வேப்ப மரம் ஒன்று போனால் போகட்டும் என்று வளர்ந்திருந்தது. அதன் கீழ் ஆடு ஒன்று கட்டப்பட்டிருந்தது.

மிகச் சரியாக இண்டிகேட்டர் அந்த 750 மீட்டர் தொலைவு வந்து விட்டதைக் காட்டவும், காரை நிறுத்தினான் வர்ஷன். மூவரும் இறங்கினார்கள். வர்ஷன் வள்ளுவரைப் பார்த்தான். வள்ளுவர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். பின், ‘‘அந்த ஏட்டை எடுத்து பூதக் கண்ணாடியால படி’’ என்றார்.கார் பானட் மேல் ஏட்டை வைத்து, கையில் கொண்டு வந்திருந்த பூதக்கண்ணாடி வழியாகப் படிக்க முனைந்தான் வர்ஷன்.

‘பாதி வழி வந்து நின்று மீதி வழி தேடி மனம்’ என்று ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்துப் பார்த்துப் படித்தான். வள்ளுவர் கூர்மையாக கேட்டுக்கொண்டே வர, ப்ரியா தன் டேப்லெட்டில் அதை எழுதிக்கொண்டே வந்தாள்.‘பாதி வழி நின்று, மீதி வழி தேடி மனம் சோதி வடிவாக வழி சோதி வழி தான்...’ என்று முதல் இரண்டு வரிகளை படிப்பதற்குள் அவனுக்கு வியர்த்துக் கிறுகிறுத்துவிட்டது. வள்ளுவரும் தொடர்ந்து படிக்கச் சொன்னார்.

‘சோதி வழி செல்லச் செல்ல ஆதிசிவன் குடில்
மேதினியில் தான்... ஆதிசிவன் குடில் காவல்
கொண்டவனின் பெயர் கூறி நின்றே காண்
விண்ட இந்த ஏடு... அது காரும் ஓடு...’
- என்று ஒருவழியாகப் படித்து முடித்தான்.

‘‘அவ்வளவுதானா?’’
‘‘ஆமாம்யா! இனி படிக்க ணும்னா அடுத்த பக்கம்தான்... அதையும் படிக்கவா?’’
‘‘வேண்டாம்... இந்த பாடலுக்கான பொருளை முதல்ல தெரிஞ்சிக்குவோம். எங்கே, முதல் வரிய சொல்லு...’’
‘பாதி வழி வந்து நின்று மீதி வழி தேடி மனம்
சோதி வடிவாக வழி சோதி வழி தான்...’

‘‘இதுக்கு அர்த்தம் என்னன்னா, ‘பாதி வழி வந்து நின்று’ன்னா இப்ப நாம வந்துருக்கற இடம்னு பொருள்! ‘மீதி வழி தேடி மனம்’னா... நாம் இப்ப அடுத்து எப்படிப் போறதுன்னு நினைக்கறோம் பார்... அதுதான்!’’‘‘சோதி வடிவாக வழி சோதி வழிதான்னா?’’‘‘சோதிங்கறது ஜோதிங்கற வெளிச்சத்தைக் குறிக்கற சொல். ஏடெழுதறவங்க வழக்குச் சொல்லையும் வடமொழி கலந்த சொல்லையும் பயன்படுத்தறது சகஜம். அந்த வகையில சோதி வடிவாகன்னா ஜோதி போல வெளிச்சமாக... அதாவது நம்ம மனசு வெளிச்சமா குழப்பமில்லாம செயல்படணும்னா அதுக்கு வழி சோதி வழிதான்...

அதாவது வெளிச்சத்தோட வழி... இங்க வெளிச்சத்தோட வழி எதுன்னா, சூரியனோட பாதை...’’ - என்று அண்ணாந்து பார்த்த வள்ளுவர், ‘‘உச்சி சூரியன் இப்ப மேற்கு நோக்கு சரிய ஆரம்பிச்சிட்டான்... நாம இங்க இருந்து மேற்கு நோக்கிப் போகணும்னு அர்த்தம்... அப்புறம் என்ன வரி படி!’’‘‘சோதி வழி செல்லச் செல்ல ஆதிசிவன் குடில்...’’‘‘அதாவது மேற்கே போகப் போக சிவன் கோயில்னு பொருள்... அப்புறம்?’’‘‘மேதினியில் தான்... ஆதிசிவன் குடில் காவல் கொண்டவனின் பெயர் கூறி நின்றே காண் விண்ட இந்த ஏடு... அது காரும் ஓடு...’’

‘‘மேதினின்னா பூமின்னு பொருள்! அதாவது இந்த பூமியில ஆதிசிவன் கோயில் இருக்கற இடத்துல காவல் கொண்டவனின் பெயர் கூறி நின்றே காண் விண்ட இந்த ஏடுன்னா... அந்தக் கோயிலுக்குப் போய் அந்தக் கோயிலோட காவல் தெய்வம் யார்னு தெரிஞ்சுகிட்டு அதன் பிறகு இந்த ஏட்டைப் பார்க்கணும்னு பொருள்...’’
- வள்ளுவர் விளக்கி முடித்தார்.‘‘அப்ப நாம இங்க இருந்து மேற்கு நோக்கிப் போகணும். அப்படி போற வழியில ஆதிசிவன் கோயில் வரும். அந்தக் கோயிலுக்குப் போய் அந்த கோயில் காவல் தெய்வம் எதுன்னு தெரிஞ்சிக்கிட்டு, அந்த காவல் தெய்வப் பேரை சொல்லிக்கிட்டே திரும்ப இந்த ஏட்டைப் பார்க்கணும். இல்லைங்களா அய்யா?’’

- ப்ரியா சுருக்கமாக சொல்லி முடித்தாள்.‘‘சரியா சொன்னேம்மா... சூரியன பாத்துக்கிட்டே மேற்கு நோக்கிப் புறப்படுவோமா?’’
‘‘மேற்கு நோக்கி நாம போகலாம் - பாதை இருக்கணுமே?’’‘‘நீ இப்படிக் கேட்பேன்னு தெரியும்... அதோ பார் ஒரு பாதை!’’ - வள்ளுவர் காட்ட, அந்தப் பாதைக்கு நேர் மேல் ஒருமணிச் சூரியன்! வர்ஷனும் காரைக் கிளப்பினான்.ப்ரியாவிடம் புதிதாய் ஒரு சலனம்.
‘‘என்னம்மா சலனம்?’’

‘‘அய்யா, இது ஏற்கனவே எழுதப்பட்ட ஏடுதானே?’’
‘‘அதுல என்ன சந்தேகம்?’’
‘‘எழுதின எதுவும் மாறவே மாறாதுதானே?’’
‘‘நிச்சயமா மாறாது!’’
‘‘அப்ப ஒரு சந்தேகம்...’’
‘‘என்ன?’’

‘‘இந்த ஏடு யார் கைல கிடைக்குதோ அவங்கதானே படிச்சு அதன்படி நடக்க முடியும்...’’
‘‘ஆமாம்.’’‘‘சென்னைல இது நம் கைல கிடைச்சது. அதனால நாம இவ்வளவு தூரம் வந்துருக்கோம். இதே ஏடு வேற ஊர்ல இருக்கற யாருக்காவது கிடைச்சா, அவங்களால எப்படி இந்த இடத்துக்கு வர முடியும்?’’
‘‘முடிவா நீ என்ன கேக்க வர்றே?’’

‘‘பொதுவா வழிகாட்ற ஏடு எல்லாருக்கும் பொதுவானதாதானே இருக்கணும். ஆனா இங்க அப்படி இல்லை. திசையும் தூரமும் இதுல பிரதானம்... அப்படி இருக்க, வேற ஊர்னு வரும்போது எப்படி இதே திசைல வர முடியும்?’’- ப்ரியா கேட்ட கேள்வி வர்ஷனையும் யோசிக்க வைத்தது. ஆனால் வள்ளுவர் சிரித்தார்.

‘‘பேஷன்ட்களுக்கு
மருந்துச் சீட்டுல
ஒரு கிலோ மைசூர் பாகு,
ஒரு கிலோ அல்வா, ஒரு
கிலோ காராசேவுன்னு டாக்டர் ஏன் எழுதிக் குடுக்கறார்?’’
‘‘அவரோட பார்மஸியில தீபாவளி பலகாரங்களும்
விற்பனை செய்யறாங்களாம்!’’

யாராலும் எதையும் மாற்றிவிட முடியாது. அப்படி ஒருவர் மாற்றிவிட்டார் என்று
யாராவது கருதினால், அது உண்மை கிடையாது.

‘‘அக்கம்பக்கத்தில் கொளுத்திப் போட்ட கம்பி மத்தாப்புகளையெல்லாம் தலைவர் எடுத்து எண்ணிக்கிட்டு இருக்காரே... ஏன்?’’
‘‘ஜெயில்ல கம்பி எண்ணின பழக்கம் இன்னும் போகலையாம்!’’

‘‘இந்த தீபாவளிக்கு தலைவர் ஏன் நிறைய ராக்கெட் மட்டும் வாங்கறார்..?’’
‘‘ராக்கெட் விட்டால் டாக்டர் பட்டம் நிச்சயம்னு யாரோ அவர்கிட்ட கொளுத்திப் போட்டிருக்காங்க!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்