பொதுத் தேர்தலில் ஆன்லைன் ஓட்டு சாத்தியமா?* தங்க நகை முதல் டாய்லெட் பேப்பர் வரை எல்லாமே இணையதளங்களில் வாங்க முடிகிறது. இப்படி நம் செல்போனையும் கம்ப்யூட்டரையும் பயன்படுத்தி எதையும் வாங்க முடிகிறபோது, ஏன் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஓட்டு போடக்கூடாது?

*தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகளை தனியாக எண்ணுகிறார்கள். இதேபோல ஆன்லைன் ஓட்டுகளையும் தனியாக எண்ணலாமே!- சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

இவர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை உள்ளது. ஆனால் இப்போது ஓட்டு போட வேண்டும் என்றால், இதற்காக அவர்கள் செலவழித்து இந்தியா வரவேண்டும். எல்லோரும் இப்படி வர முடிவதில்லை. இதற்காக அவர்கள் கேட்ட எலெக்ட்ரானிக் ஓட்டுரிமையில் பாதி கிணறு தாண்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களான நாகேந்தர் சிந்தம், வி.பி.ஷாம்ஷெர் ஆகிய இருவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர். ‘‘எங்களுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியா வராமல் வெளிநாடுகளில் இருந்தபடியே அவரவர் தொகுதியில் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும்’’ என்பது அவர்களின் கோரிக்கை. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும் இந்த விஷயத்தில் வேகம் காட்டியிருப்பது ஆச்சரியம்.

‘எலெக்ட்ரானிக் தபால் ஓட்டு’ என்பது இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் முறை. இதற்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்படிப் பதிவு செய்துகொண்டவர்களுக்கு தேர்தலின்போது, அவர்களின் தொகுதி வாக்குச்சீட்டு ஒன்று இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

அதோடு அதை அனுப்ப வேண்டிய கவர், உறுதிமொழிச் சான்றிதழ் என எல்லாம் இருக்கும். அவர்கள் பிரின்ட் எடுத்து, தங்கள் வாக்கைப் பதிவு செய்து, அதை கவரில் வைத்து ஒட்டி தபாலில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது சம்பந்தப்பட்ட தொகுதியின் தபால் ஓட்டு கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், ஒரு கோடி வெளிநாடுவாழ் இந்தியர்களும் உலகின் எந்த மூலையிலிருந்தும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ‘‘என்னதான் வேலை, தொழில் என வெளிநாடுகளில் தங்கி இருந்தாலும், எங்களுக்கு இந்தியா முக்கியம். இங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்தபடி இருக்கிறோம். எங்கள் கருத்தை வெளிப்படுத்த வாக்குரிமையைப் பயன்படுத்துவது முக்கியம்’’ என்கிறார் நாகேந்தர் சிந்தம்.

தேர்தல் ஆணையம் இந்தப் புதுமைக்கு ரெடி என்றாலும், இதை அமல்படுத்த வேண்டும் என்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டும். எல்லாம் சுமுகமாக நடைந்தேறினால், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்கூட வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டு போடலாம்.

‘‘எல்லோருக்கும் இது பிடித்திருந்தால், இதில் பிரச்னை ஏதும் இல்லையென்றால், அடுத்ததாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க ஏற்பாடு செய்யவும் நாங்கள் தயார். அடுத்தகட்டமாக இங்கே இருப்பவர்கள்கூட வாக்குச்சாவடியில் காத்திருக்காமல் ஆன்லைனில் ஓட்டு போடுவது சாத்தியமாகும். தொழில்நுட்பம் மேம்படும்போது, செல்போனிலேயே ஓட்டு போடலாம்’’ என நம்பிக்கையோடு பேசுகிறார், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஐ.டி இயக்குனர் வி.என்.சுக்லா.

 இதற்கும் ஒரு ‘குஜராத் மாடல்’ முன்னுதாரணமாக இருக்கிறது. நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆன்லைன் ஓட்டு முறையை அறிமுகம் செய்தார். இதற்குப் பதிவு செய்துகொள்ளும் ஒருவர், தனது வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரிலிருந்து ஓட்டு போடலாம். பதிவு செய்ததும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி, அவரது வாக்குரிமையை உறுதி செய்வர்.

அதன்பின் அவருக்கு யூசர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். ஆன்லைன் ஓட்டுக்குப் பதிவு செய்துகொள்ளும் ஒருவர், அதன்பின் வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க முடியாது. தனது கம்ப்யூட்டரிலிருந்து, மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்குச் சென்று, அங்கு தனது பகுதியில், தான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். போட்டு முடித்ததும் ரசீதும் கிடைக்கும். அகமதாபாத், வதோதரா, ஜாம்நகர், சூரத், ராஜ்கோட் மற்றும் பவநகர் மாநகராட்சிகளில் விரைவில் நடக்கும் தேர்தல்களிலும் பலரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஓட்டு போட இருக்கிறார்கள்.

ஆனால் இதில் பல பலவீனங்களும் உள்ளன. கடந்தமுறை தேர்தல் துவங்கிய பதினைந்து நிமிடங்களிலேயே பாகிஸ்தான், சீனா மற்றும் தைவான் நாடுகளிலிருந்து பலரும் குஜராத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஊடுருவ முயற்சித்தனர். இப்படி யாராவது இணையதளத்தைக் கைப்பற்றி மொத்தமாக யாரோ ஒருவருக்கு எல்லா ஓட்டுகளையும் போட்டுவிட முடியும். அதையெல்லாம் தடுக்கும் தொழில்நுட்ப வல்லமையைப் பெற்றாக வேண்டும்.

பல கட்சிகள் இப்போது எதிர்த்தாலும், ஆன்லைன் ஓட்டு ஏதோ ஒரு தருணத்தில் நிஜமாகக் கூடும். அப்போது ஓட்டுக்குப் பணம் கொடுக்க தெருத் தெருவாக அலைய வேண்டியிருக்காமல், வாக்காளரின் வங்கிக்கணக்குக்கு நெட் பேங்கிங்கில் கிரெடிட் செய்யப்படலாம்

மாற்றம் வந்தாச்சு!

*எஸ்தோனியா நாட்டில் 2005 முதலே ஆன்லைன் ஓட்டு உண்டு. அங்கு 30 சதவீத வாக்காளர்கள் ஆன்லைனில் வாக்களிக்கிறார்கள். ஜார்ஜியா தேர்தலிலும் ஆன்லைன் ஓட்டு உண்டு.
*வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு குடிமக்கள் ஆன்லைனில் வாக்களிக்கிறார்கள். சுவிட்சர்லாந்திலும் இதற்கு அனுமதி உண்டு.
*அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் மட்டும் ஆன்லைன் ஓட்டை அனுமதிக்கிறார்கள்.

- அகஸ்டஸ்