வாட்ஸ்அப் அட்மின்களுக்கு ஆபத்து?



பீதியைக் கிளப்பும் மும்பை போலீஸ்

எதற்கெடுத்தாலும் தடை, கொலை, வெட்டுக் குத்து என சர்ச்சைக்கு சல்யூட் போடும் மகாராஷ்டிர மாநிலம், வாட்ஸ் அப்பிலும் வாயை வைத்திருக்கிறது. ‘அவதூறு செய்தியைப் பரப்பினார்’ என்று சொல்லி, வாட்ஸ்அப் குரூப் அட்மின் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் மும்பையில்.

 குரூப்பில் 100 பேர் இருந்தாலும் அவர்கள் என்ன கண்றாவியைப் பகிர்ந்தாலும் அதற்கு அட்மின்தான் பொறுப்பா என்ன? நாம் ஒவ்வொருவரும்தான் ஆயிரத்தெட்டு குரூப்பில் இருக்கிறோம். அதில் எதிலெல்லாம் நாம் அட்மின் என்று நமக்கே தெரிவதில்லை. திடீரென்று நம்மை நோக்கியும் விலங்கு வருமோ? விளங்கிக்கொள்ள நாடினோம் சில நிபுணர்களை!

‘‘இந்த நடவடிக்கையே முழுக்க முழுக்க தவறானது. கண்டிக்கத்தக்கது!’’ எனக் கறாராக ஆரம்பித்தார் பெங்களூரைச் சேர்ந்த சைபர் சட்ட நிபுணர் நா.விஜயசங்கர்.
‘‘ஃபேஸ்புக், ப்ளாக் மாதிரியான ஒரு பொது ஊடகம் கிடையாது வாட்ஸ்அப். நமக்கான தனிப்பட்ட தொடர்புகளுடன் மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் செட்டப்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவதூறு செய்தி சட்டத்துக்குப் புறம்பாக பரப்பப்பட்டால், அதை அந்த ஊடகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று முதலில் நோட்டிஃபி கேஷன் எனும் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

அறிவிப்புக்கும் பிறகு அந்த செய்தி ஊடகத்தில் இருந்தால்தான் அந்தச் செய்திக்குப் பொறுப்பானவர்களை சட்டம் தண்டிக்கும். ஆனால், மும்பையில் கைது செய்யப்பட்ட நபரை எந்தவித அறிவிப்பும் செய்யாமல் கைது செய்திருக்கிறது போலீஸ். அவதூறான செய்தியைப் பரப்பியவர் பற்றிய விபரங்களை முதலில் அட்மினிடம் கேட்டிருக்க வேண்டும். ஒருவேளை அவரால் யாரையும் கைகாட்ட முடியவில்லை என்றால்தான் அவரைக் கைது செய்ய போலீஸுக்கு அதிகாரம் உள்ளது. மும்பை விஷயத்தில் இதுவும் நடக்கவில்லை.

 எல்லாவற்றுக்கும் மேலே, வாட்ஸ்அப்பில் எல்லாமே கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதைதான். யாரோ தனக்கு அனுப்பியதை இன்னொருவருக்கு பகிர்வது இங்கே சகஜம். இதில் ஆட்சேபகரமான செய்திகள் எங்கே உருவாகின்றன, யாரால் பரப்பப்படுகின்றன எனக் கண்டு பிடிப்பது காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் கடமை. அவதூறு செய்திகளை உருவாக்கியது யாரோ...

அதைப் பார்த்து கடுப்பாகி புகார் கொடுப்பது யாரோ... இவர்களுக்கு இடையே வெறும் இன்டர்மீடியட் மாதிரி இருக்கும் அப்பாவி அட்மின்கள் தண்டிக்கப்படுவது சட்டப்படியும் சரியல்ல... நியாயப்படியும் சரியல்ல!’’ என்றார் அவர்.‘ஃப்ரீ சாஃட்வேர் ஃபவுண்டேஷன்’ எனும் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான சிபி கனகராஜ், இதே பிரச்னையை இன்னும் விலாவாரியாக அணுகினார்...

‘‘இந்தியாவைப் பொறுத்தளவில் வாட்ஸ்அப் போன்ற டெக்னாலஜி விஷயங்கள் திடீரென்று மக்களின் கைகளில் வந்து உட்கார்ந்துவிட்டன. இவற்றை எப்படி அணுகுவது என மக்களுக்கும் தெரியவில்லை... அரசாங்கங்களுக்கும் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரையும் முழுக்க முழுக்க நியாயப்படுத்த முடியாது. உதாரணத்துக்கு, ஒரு முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர், மாட்டுக்கறி சாப்பிடுவது போல ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டார்.

அப்போது அந்தப் பெண்ணிடம் கருத்தியல் ரீதியாக மோதாமல், தரைக்குறைவான தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் நடத்தினார்கள். மிகப் பெரிய சமூக வன்முறை இது. இது போன்ற தவறுகளை காவல்துறையும் அரசும் கண்டிக்கத்தான் வேண்டும்... தண்டிக்கத்தான் வேண்டும்.அதற்காக சமூக வலைத்தளங்களை அரசு தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. அயல்நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் புரட்சிகளே வெடித்திருக்கின்றன.

அரசை இடித்துரைக்கும் சக்தியும் கடமையும் சமூக வலைத்தளத்துக்கு இருப்பதால் அது சுதந்திரமாகத்தான் செயல்பட வேண்டும். கையில் கிடைப்பவர்களை எல்லாம் கைது செய்து எதையும் மாற்றிவிட முடியாது.

ஆறு மாதங்களுக்கு முன்பு எனக்கு வந்த ஒரு வாட்ஸ்அப் செய்தியைக் காட்டி, இதை யார் உனக்கு அனுப்பினார்கள் என்று கேட்டால் எனக்கு நிச்சயமாகத் தெரியாது. பதில் சொல்லத் தெரியவில்லை என்பதாலேயே அந்தச் செய்தியை நான்தான் உருவாக்கி அவதூறு பரப்பினேன் என முடிவு செய்துவிட முடியுமா?

அதேசமயம், வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தியை மற்றவருக்குப் பகிரும்போது, ‘இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்’ என ஒரு நிமிடம் சிந்திப்பது நம் ஒவ்வொருவருக்குமே கடமை. அதை பொதுமக்கள் உணர வேண்டும். அதே சமயம் சமூக ஊடகங்களில் புரளிகள் கிளம்பும்போது அரசும் திறமையாக அதை முறியடிக்க வேண்டும்.

பெங்களூருவில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தாக்கப்படுவதாக செய்தி வந்தபோது, இது புரளி என்று அரசு உடனடியாகப் பிரசாரம் செய்து தடுத்த விதம் இதற்கு நல்ல உதாரணம். ஆக, இன்றைய தேதியில் இந்தப் பிரச்னைக்கு தீர்வென்று எதையும் சொல்லிவிட முடியாது. அரசும் மக்களும் சேர்ந்து இந்த விஷயத்தில் ஓர் ஒருமித்த கருத்தை கொண்டுவரும்போதுதான் நல்லது எது, கெட்டது எது என்று இனம் காண முடியும்!’’ என்றார் அவர் உறுதியாக!அதுவரை அட்மின்ஸ்... கொஞ்சம் சூதானமா நடந்துக்குங்க!

 - டி.ரஞ்சித்