சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயாராவது எப்படி?



தமிழ்நாடு காவல்துறையில் 1078 (எஸ்.ஐ) சார்பு ஆய்வாளர்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீருடைப்பணி மீது தீரா ஆர்வம் கொண்ட இளைஞர்கள் தயாராக வேண்டிய நேரம் இது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.3.2015. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 23.5.2015. இந்தத் தேர்வுக்கு தயாராவது எப்படி... எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்... ஆலோசனை சொல்கிறார், பல நூறு அரசுப்பணியாளர்களை உருவாக்கிய திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.ராமமூர்த்தி.

எஸ்.ஐ. தேர்வுக்கான எழுத்துத்தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும். நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் ‘அப்ஜெக்டிவ் டைப்’ முறையில் நடக்கிறது இந்தத் தேர்வு. மொத்தம் இரண்டரை மணி நேரம் நடக்கும். இத்தேர்வு இரண்டு பெரிய பிரிவுகளை உள்ளடக்கியது. 1.பொது அறிவு. 2.காவல் உளவியல். பொது அறிவில் வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்புச் சட்டம், பொருளியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ், ஆங்கிலம், கணிதம், ஆகியவை அடங்கும். இந்தப் பிரிவில் 80 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு அரை மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப்பெண்கள். உளவியல் பிரிவில் பகுப்பாய்வு, எண்கணிதம், உளவியல் திறன், தகவல் தொடர்புத் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவை அடங்கும். இந்தப் பகுதியில் 60 வினாக்கள் கேட்கப்படும். இவற்றுக்கும் ஒன்றுக்கு அரை மதிப்பெண் வீதம் 30 மதிப்பெண்கள்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, (தேசிய மாணவர் படை, சாரணியர் படை ஆகியவற்றுக்கான) சிறப்பு மதிப்பெண்கள், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு அனைவருக்கும் பொதுவான, திறந்தவெளி போட்டி முறையில் விண்ணப் பித்தவர்களுக்கானது (ஓப்பன் கோட்டா சிஸ்டம்). காவலர்களாக இருந்து கொண்டு டிபார்ட்மென்ட் கோட்டாவில் தேர்வு எழுதுபவர்கள், பொது அறிவு பாடத்தில் 30 கேள்விகளுக்கும், உளவியல், காவல் ஆணைகள், இந்திய ஆட்சி சட்டம் ஆகிய பகுதியில் இருந்து 140 வினாக்களுக்குமாக மொத்தம் 170 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அவர்களுக்கான தேர்வு 24.5.2015 அன்று நடைபெறும்.

கடந்த 2010ம் ஆண்டு நடந்த சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 10 வினாக்கள், வரலாறு 5, புவியியல் 7, அரசியல் அமைப்புச் சட்டம் 6, நடப்பு நிகழ்வுகள் 4, பொருளியல் 12, இயற்பியல் 8, வேதியியல் 8, உயிரியல் 10, கணிதம் 5, ஆங்கிலம் 5 என்று 80 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பொதுவாக இந்தத் தேர்வில் கேட்கப்படும் 40 சதவீத வினாக்கள், முன்பு நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்டவையாக இருக்கின்றன. எனவே, பழைய வினாத்தொகுப்புகளை வைத்துப் படிப்பது நல்லது.  6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணிப்பொறி ஆகிய பாடப்புத்தகங்களைப் படித்தாலே பொது அறிவு பாடத்தில் கணிசமான மதிப்பெண்களை ஸ்கோர் செய்து விடலாம்.

உளவியல் பாடத்தில் 60 வினாக்கள் கேட்கப்படும். கடந்த முறை R.S. Agarwal   அவர்களின் Verbal - Non Verbal Reasoning   மற்றும் Quantitative Aptitude புத்தகங்களில் இருந்து மட்டுமே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டன. எனவே, இந்தத் தேர்விலும் அப்படி எதிர்பார்க்கலாம்.  பிற டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போன்றதே இந்த எஸ்.ஐ. தேர்வும். இன்னும் சொல்லப் போனால் அதை விடவும் எளிமையாக இருக்கும்.

அதிகபட்சம் 90 வினாக்களுக்கு குறைவில்லாமல் சரியாக விடையளித்தால் எழுத்துத் தேர்வில் வெற்றி கிடைத்துவிடும். தினமும் செய்தித்தாள் படிப்பவர்கள் இந்தத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். பழக்கம் இல்லாதவர்கள் இனியேனும் அந்தப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடிப்படை கணித சூத்திரங்களை தெளிவாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.  இன்னும் 2 மாத காலங்களுக்கு மேல் அவகாசம் உள்ளது. தைரியத்தையும், தன்னம்பிக் கையையும் மனதில் இருத்தி இன்றே செயல்படத் தொடங்குங்கள். வெற்றி உங்கள் வசமாகும்.

தொகுப்பு: வெ.நீலகண்டன்