மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு



பம்ப் செட்டை இயக்குது செல்போன்!

கல்லூரி மாணவர்கள் செய்யும் கண்டுபிடிப்புகளுக்காவது ப்ராஜெக்ட் பிரஷர் காரணமோ என சந்தேகிக்கலாம். ஆனால், சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களிடமும் அறிவியல் ஆர்வம் துளிர்த்து வருவது நம் நாட்டின் எதிர் காலத்துக்கு நிச்சயம் நம்பிக்கை கீற்று. அந்த நம்பிக்கை ஆகாஷைப் பார்த்தால் அதிகரிக்கிறது. சென்னை, வண்ணாரப்பேட்டை, கே.சி.எஸ்.சங்கரலிங்க நாடார் பள்ளியில் 8ம் வகுப்பு தான் படிக்கிறார் ஆகாஷ். நம் செல்போன் மூலமே விவசாய பம்ப் செட் மோட்டாரை ஆன் - ஆஃப் செய்யக் கூடியது இவர் உருவாக்கியிருக்கும் டெக்னாலஜி!

‘‘இது நம்ம நாட்டு விவசாயிகளுக்காகவே உருவாக்கினது சார். ஏன்னா, பொதுவா நம்ம விவசாயிகள் ஊருக்குள்ள இருப்பார்கள். வயல்வெளி ரொம்ப தூரத்துல இருக்கும். வயலுக்கு தண்ணி பாய்ச்சுறதுக்காக ராத்திரி பகல் பாக்காம எந்நேரமும் வயலுக்கு ஓட வேண்டியிருக்கும். அவங்க வீட்டில் இருந்தாலும், வெளியூர் போயிருந்தாலும், இருந்த இடத்தில் இருந்தபடி வயலுக்குத் தண்ணி பாய்ச்சணும். அதுக்காகத்தான் இதை உருவாக்கினேன்!’’ - வயதைத் தாண்டிய பக்குவம்
ஆகாஷிடம்!

‘‘இது சோலார் மோட்டார் கன்ட்ரோலர் சார். சோலார் பேனல், பேட்டரி, இன்வெர்ட்டர்னு எல்லாம் இதில் இருக்கு. இது மூலமா மோட்டாரை தடையில்லாம இயக்கவும் முடியும். அதே சமயம் வெளியில் இருந்தும் ஆன் - ஆஃப் பண்ணலாம். அதுக்கு நாம செய்ய வேண்டியதெல்லாம், இதில் பயன்படுத்தியிருக்கிற ஒரு சிம் கார்டு நம்பருக்கு நம்ம செல்போன்ல இருந்து ஒரு போன் பண்ண வேண்டியதுதான்.

இதுல மோட்டார் கூடவே ஒரு மைக்ரோ கன்ட்ரோலர் போர்டும் ஜி.எஸ்.எம். மோடமும் இருக்கு. இந்த மோடத்தில் ஒரு சிம் கார்டை இணைச்சிட்டு, எந்த நம்பர்ல இருந்து கால் வந்தா ஆன்/ ஆஃப் ஆகணும்னு புரோகிராம் பண்ணியிருக்கேன். ஸோ, வேற யார் நினைச்சாலும் இதை கன்ட்ரோல் பண்ண முடியாது. சரியா ஆன் ஆச்சா இல்லையானு கன்ஃபார்ம் பண்ற மாதிரி மோட்டார்ல இருந்து ஒரு எஸ்.எம்.எஸ் விவசாயிக்கு போய்ச் சேருற மாதிரியும் செட் பண்ணியிருக்கேன். இதுல கிடைக்கிற சோலார் பவர்ல மோட்டரை மட்டுமில்ல... பம்ப் ஷெட் இருந்தா, அதனோட டியூப் லைட், ஃபேனுக்கும் கூடப் பயன்படுத்தலாம்!’’ என்கிறார் ஆகாஷ் பெருமிதம் பொங்க!

-எம்.நாகமணி
படம்: ஏ.டி.தமிழ்வாணன்